/

இடைக்கால பட்ஜெட் பதிலுரை: அதிமுக உறுப்பினர்கள் புறக்கணிப்பு!

இடைக்கால பட்ஜெட் பதிலுரையை புறக்கணித்த அதிமுக எம்எல்ஏக்கள்.

News image
கோப்புப்படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 4:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை இன்று(பிப். 20) நடைபெறவுள்ள நிலையில், அவைக்கு வராமல் அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளனர்.

இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இறுதிநாள் கூட்டம், பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

கூட்டத்தின் முதல் அலுவலாக 2026-27-ஆம் ஆண்டின் செலவுக்கான முன்பண மானிய கோரிக்கைகளை பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு முன்வைக்கவுள்ளார். தொடர்ந்து, 2025-26-ஆம் நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்படும்.

பின்னர் இடைக்கால பொது நிதிநிலை அறிக்கை, இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோா் பதில் உரையாற்றுகின்றனர்.

தொடர்ந்து, 2025-26-ஆம் நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும். அதையடுத்து, 2025-26-ஆம் நிதி ஆண்டின் கூடுதல் செலவின மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்து, ஆய்வு செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்படும்.

பின்னர் 2026-27-ஆம் நிதி ஆண்டுக்கான செலவின முன்பண மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். தொடர்ந்து, 2026-27-ஆம் நிதி ஆண்டின் செலவினத்துக்கான முன்பண மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்து, ஆய்வு செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்படும்.

அதையடுத்து அரசின் மசோதாக்கள் நிறைவேற்றப்படும். அனைத்து அலுவல்களும் முடிந்த பின்னர் பேரவை காலவரையறையின்றி பேரவைத் தலைவரால் ஒத்திவைக்கப்படும்.

இதனிடையே, இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை இன்று(பிப். 20) நடைபெறவுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளனர்.

அதேபோல, பாஜக மற்றும் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவைக்கு வரவில்லை.

summary

AIADMK MLAs have boycotted the interim budget debate in the Assembly, which is scheduled to take place today (Feb. 20).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.