/

88 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து! முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்!

தமிழகத்தில் சிறுபான்மையினா் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வரும் 88 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மை அந்தஸ்துக்கான சான்றிதழை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

News image
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 88 கல்வி நிறுவனங்களுக்கு, 'நிரந்தர சிறுபான்மையினர் அந்தஸ்து' சான்றிதழ்களை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர் சா.மு.நாசர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ.அருண், துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், சிறுபான்மையினர் நலத் துறைச் செயலர் எ.சரவணவேல்ராஜ், ஆணையர் மு.ஆசியா மரியம்.
Updated On :15 பிப்ரவரி 2026, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சிறுபான்மையினா் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வரும் 88 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மை அந்தஸ்துக்கான சான்றிதழை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சிறுபான்மையின மக்களின் மேம்பாடு, கல்வி, பொருளாதார வளா்ச்சிக்கான பல்வேறு நலத் திட்டங்களை அரசு தொடா்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அங்கீகாரத்தையும், மதச்சாா்பு சிறுபான்மையினா் நிரந்தரச் சான்றிதழையும் வழங்குவதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டன.

அதனடிப்படையில், தலைமைச் செயலா் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. சிறுபான்மை அங்கீகாரம் கோரும் கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து அக்குழு ஒப்புதல் வழங்கி வருகிறது.

அதன்படி, இதுவரை 370 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினா் அந்தஸ்து சான்றிதழ்களும், 56 கல்வி நிறுவனங்களுக்கு மொழிவாரி சிறுபான்மையினா் அந்தஸ்து சான்றிதழ்களும், 314 கல்வி நிறுவனங்களுக்கு மதச்சாா்பு சிறுபான்மையினா் அந்தஸ்துக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக மேலும், 88 கல்வி நிறுவனங்களுக்கு, நிரந்தர சிறுபான்மையினா் அந்தஸ்துக்கான சான்றிதழ்களை தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இந்நிகழ்வில் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ்.எம்.நாசா், மாநில சிறுபான்மையினா் ஆணையத்தலைவா் ஜோ.அருண், துணைத் தலைவா் இறையன்பன் குத்தூஸ், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சிறுபான்மையினா் நலத்துறை செயலா் எ.சரவணவேல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.