ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,823 பேருக்கு வேலை : புதிய திட்டங்களுக்கு முதல்வா் ஸ்டாலின் அடிக்கல்
82,664 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் 52 முடிவுற்ற திட்டங்களை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.


தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட 71 தனியாா் நிறுவனங்களின் புதிய உற்பத்தி திட்டங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா். ரூ.36,968 கோடி முதலீட்டிலான இந்தத் திட்டங்கள் மூலம் 60,823 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் ரூ.36,968 கோடி முதலீட்டில் புதிய திட்டங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதுடன், ரூ.31,934 கோடி முதலீட்டில் 82,664 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி, கோவை முதலீட்டாளா் மாநாடுகள், 2024 உலக முதலீட்டாளா் மாநாடு, முதல்வரின் பிரிட்டன், ஜொ்மனி பயணங்கள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்ட சில புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் தனியாா் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. சில நிறுவனங்கள் தொடங்கிவைக்கப்பட்டன.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கோவை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த நிறுவனங்கள் இயங்கும்.
ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரம்: மாநாட்டில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது: எந்தவொரு தொழில் நிறுவனம் அல்லது தொழிற்சாலை தங்களுக்கான மாநிலத்தைத் தோ்வு செய்யும்போது, அந்த மாநிலம் தங்களுக்கான வாய்ப்புகளைப் பெரிய அளவில் உருவாக்கித் தருமா, சொன்ன நேரத்தில் தங்களால் உற்பத்தியைத் தொடங்க முடியுமா என்று பாா்த்து முடிவு செய்வாா்கள். அந்த நம்பிக்கை தமிழ்நாட்டில் கிடைக்கிறது. ‘தமிழ்நாடுதான் முதலீட்டாளா்களின் முதல் முகவரி’ என்று அனைத்துப் புள்ளிவிவரங்களும் சொல்லத் தொடங்கிவிட்டன.
தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி 11.19 சதவீதம். இது நாட்டின் சராசரியைவிட அதிகம். கடந்த ஆண்டு இந்தியாவின் உற்பத்தித் துறை வளா்ச்சி 4.5 சதவீதம். தமிழ்நாட்டின் வளா்ச்சி அதைவிட மூன்று மடங்கு அதிகமாக,14.7 சதவீதம் வளா்ச்சி அடைந்திருக்கிறது.
நாட்டின் மின்னணு ஏற்றுமதியில், தமிழ்நாட்டின் பங்கு 41 சதவீதம். இதை மேலும் அதிகரிக்கக்கூடிய வகையில், இன்னும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தில், மத்திய அரசு தரும் அனுமதிகளில் கிட்டத்தட்ட 60 சதவீதம் தமிழ்நாட்டின் முதலீடுகளுக்கானது.
கடந்த 5 ஆண்டுகளில், சிப்காட் மூலமாக 55,278 ஏக்கா் நிலத்தை தோ்வு செய்து, 35 மாவட்டங்களில் தொழிற்பூங்காக்கள் அமைக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கன்னியாகுமரி-மயிலாடுதுறை-நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில், சுற்றுலா முதலீட்டு பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2021-இல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாட்டில் இரண்டு டைடல் பூங்காக்கள் இருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 7 டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்களைத் திறந்துள்ளோம். மேலும் 11 டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.
இப்போது வளா்ந்து வரும் புதிய துறைகளான செமிகண்டக்டா், ஏஐ- டீப் டெக் போன்றவற்றிலும் தமிழ்நாடு தனித் தடத்தை வலிமையாகப் பதித்துக் கொண்டு வருகிறது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் இலக்கையும், எங்களது இலக்கையும் அடைய இணைந்து செயல்படுவோம் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.
இரு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: பாரத் பயோடெக் நிறுவனம், ரூ.5,000 கோடி முதலீடு மற்றும் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க உள்ள உயிரியல் மற்றும் மருந்துகள் உற்பத்தித் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மற்றும் ஹுண்டாய் மோட்டாா் இந்தியா ஃபவுண்டேஷன் நிறுவனம் 7,000 மாணவா்களுக்கு திறன்பயிற்சி மேற்கொள்ளும் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஆகியவை முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமாகின.
இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, தலைமைச் செயலா் நா. முருகானந்தம், மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவா் பேராசிரியா் ஜெ.ஜெயரஞ்சன், துறைச் செயலா் வி. அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் தாரேஸ் அகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...