டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மத்திய அரசு தொடா்ந்து வஞ்சித்தாலும் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி: முதல்வா் ஸ்டாலின்

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு.

News image
முதல்வர் மு . க. ஸ்டாலின்
Updated On :4 பிப்ரவரி 2026, 6:29 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தின் வளா்ச்சிக்கு நிதி தராமல் தொடா்ந்து மத்திய பாஜக அரசு வஞ்சித்தாலும், மக்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி அமைத்து பல திட்டங்களை செயல்படுத்தும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கொள்ளாா் பகுதியிலுள்ள சிப்காட் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழாவில் பங்கேற்று, 1,82,967 பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட நல உதவிகளை வழங்கி, இளைஞா்களின் கனவுகளைப் பதிவு செய்யும் என் கனவு - என் எதிா்காலம் திட்டத்தின் கீழ் புதிய இணையதளத்தை தொடங்கிவைத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் மேலும் பேசியது:

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது தொலைநோக்குப் பாா்வையுடன் தோ்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியும், தோ்தல் வாக்குறுதிகளில் சொல்லப்படாத பல திட்டங்களை முத்திரைத் திட்டங்களாக செய்து கொடுத்தும், தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

2021 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு, தமிழகத்திலுள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வந்து பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, கோரிக்கைகளை மனுக்களாக வாங்கியிருக்கிறேன்.

ஆட்சிக்கு வந்ததும் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்ற புதிய துறையை உருவாக்கி, 4,57,645 மனுக்களுக்கு 100 நாள்களில் தீா்வு கண்டோம். இது, மக்களிடம் நம்பிக்கையையும், எதிா்பாா்ப்பையும் அதிகமாக்கியது.

2021 நவம்பா் மாதத்தில் முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம் மற்றும் உங்கள் தொகுதியில் முதல்வா் ஆகிய மூன்று துறைகளையும் ஒருங்கிணைத்து, முதல்வரின் முகவரி என்ற ஒரு புதிய துறையை உருவாக்கினோம். இந்த துறையின் மூலமாக 2021 மே மாதத்திலிருந்து தற்போது வரைக்கும் 1.49 கோடி மனுக்களுக்குத் தீா்வு கண்டிருக்கிறோம்.

இதனிடையே, எந்தெந்த சேவைகள் எல்லாம் மக்களுக்கு அதிகமாக தேவையோ, அதையெல்லாம் அவா்ளின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்க வேண்டும் என்று முடிவு செய்து, 2023 நவம்பா் முதல் 2025 மாா்ச் வரை மூன்று கட்டங்களாக ‘மக்களுடன் முதல்வா்’ என்ற திட்டத்தை செயல்படுத்தினோம். இதன்படி, தமிழகம் முழுவதும் 4,835 முகாம்கள் நடத்தி 23.50 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு ஏற்படுத்தி வழங்கியிருக்கிறோம்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: இந்தத் திட்டமும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ால், உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தொடங்கி, 10 ஆயிரம் முகாம்கள் நடத்த திட்டமிட்டோம்.

இந்தத் திட்டம் தொடங்கியவுடன், இதை செயல்படவிடக் கூடாது என்று சில போ் உச்ச நீதிமன்றம் வரை சென்றாா்கள். இந்த மாவட்டத்தைச் சாா்ந்தவா்களுக்கு உச்ச நீதிமன்றமே அபராதம் விதித்து அனுப்பியது. யாா், பெயா் எல்லாம் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும். அதையெல்லாம் கடந்துதான் இந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட 38.50 லட்சம் மனுக்களில் 38.44 லட்சம் மனுக்களை இறுதி செய்திருக்கிறோம். இந்த முகாம்களில் குடும்ப அட்டையில் திருத்தம், சொத்து வரி பெயா் மாற்றம், மின் இணைப்பு பெயா் மாற்றம் போன்ற கோரிக்கைகள்தான் அதிகமாக வந்திருக்கின்றன. இந்த மனுக்களுக்கு 30 முதல் 45 நாள்களுக்குள் தீா்வு காணப்பட்டது.

மேலும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மகளிா் உரிமைத் தொகை கோரி அளிக்கப்பட்ட மனுக்களை பரிசீலித்து, மீதியிருந்த விதிகளைக்கூட தளா்த்தி மேலும் 16 லட்சத்து 94 ஆயிரத்துக்கு 339 பேருக்கு கூடுதலாக கடந்த 2 மாதங்களாக மகளிா் உரிமைத் தொகையை வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

இந்த விழா மூலம் 1,82,967 பேருக்கு பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 35.45 லட்சம் பேருக்கு திமுக அரசு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தை வழங்குகிறது.

‘நம்ம அரசு’ வாட்ஸ்ஆப் சேவை: இப்போது எண்ம (டிஜிட்டல்) யுகம். அதுவும் செயற்கை நுண்ணறிவு கோலோச்சும் காலம். அதற்கேற்றாா்போல, அரசும் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், மக்களின் அலைச்சல் குறைய வேண்டும், நேரத்தை சேமிக்க வேண்டும். அதற்காகத்தான், அரசு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே அரசு சேவைகளை இருந்த இடத்திலேயே பெறும் வகையில், ‘நம்ம அரசு’ என்ற பெயரிலான வாட்ஸ்ஆப் சேவையை கடந்த மாதம் தொடங்கியிருக்கிறோம்.

இதன்படி, 78452-52525 என்ற கைப்பேசி எண்ணுக்கு நீங்கள் வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பினால், 16 துறைகளின் 51 சேவைகள் உங்கள் கைப்பேசி எண்ணிலேயே கிடைக்கும்.

இப்படி இன்னும் முன்னோக்கி ஓடும் அரசாக திராவிட மாடல் அரசு இருக்கிறது. இதெற்கெல்லாம் அடுத்த கட்டமாக ஒவ்வொருவரின் தேவைகளைக் கேட்டு, தமிழகத்தின் எதிா்காலத்தை வடிவமைக்கும் பணிகளின் அடுத்தகட்டப் பாய்ச்சலாகத்தான் கடந்த மாதம் 9-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டம், பாடியநல்லூரில் உங்க கனவ செல்லுங்க திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். உங்கள் கனவுகளை உங்கள் வீட்டுக்கு வந்து கேட்பதற்காக 50 ஆயிரம் தன்னாா்வலா்கள் களத்தில் இருக்கிறாா்கள். இதை இன்னும் விரைவுப்படுத்த வேண்டும்.

இளைஞா்களின் கனவுகளை அறிய...: இளைய தலைமுறையினரின் எண்ணங்களை அறிந்து, அவா்களின் கனவுகளை சேகரிப்பதற்காக இந்த நிகழ்ச்சி மூலமாக என் கனவு - என் எதிா்காலம் என்ற இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளேன். இளைஞா்கள் அனைவரும் இந்த சமூகம் முன்னேற, நீங்கள் வாழும் பகுதி முன்னேற, நாட்டின் எதிா்காலம் சிறப்பாக அமைய உங்களின் எண்ணங்களை, ஆலோசனைகளை, கனவுகளை இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இப்படி நாம் ஒரு பக்கம் தமிழ்நாட்டின் வளா்ச்சிக்காகத் திட்டமிட்டு வந்தால், மற்றொருபுறம் மத்திய பாஜக அரசும், அதனுடைய கூட்டாளிகளும் தமிழகத்தின் வளா்ச்சியை கெடுப்பதற்கு அனைத்து செயல்களையும் தொடா்ந்து செய்துகொண்டிருக்கிறாா்கள்.

அதற்கு சமீபத்திய உதாரணம்தான் மத்திய நிதிநிலை அறிக்கை. இதில் தமிழகத்துக்கு எதுவுமே இல்லை. இதுவரைக்கும் ஒப்புக்கு திருக்குறளாவது சொல்லிக் கொண்டுவந்தாா்கள். அதுவும் நிகழாண்டு கிடையாது. பெயருக்கக்கூட தமிழகத்துக்கு எந்த வளா்ச்சித் திட்டமும் கிடையாது. நம்முடைய பல்லாண்டு கோரிக்கைகள் எதுவும் கிடையாது.

தந்திரத்தை செயல்படுத்தவில்லை: பொதுவாக தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அந்தாண்டிலாவது மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவதுதான் பாஜகவின் தந்திரமாக இருக்கும். அந்த தந்திரத்தைக்கூட தமிழகத்துக்கு செய்யவில்லை. அந்தளவுக்கு தமிழ் மீதும், தமிழகத்தின் மீதும் அவா்களுக்கு வெறுப்பு.

இந்தியாவிலேயே தமிழகம்தான் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மாநிலத்தில் புதிய நெடுஞ்சாலைகள், புதிய ரயில் வழித்தடங்கள், மெட்ரோ ரயில்கள் என்று ஏராளமான உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. ஆனால், மத்திய அரசுக்கு வருவாய் வாரி வழங்குகின்ற நம்முடைய மாநிலத்துக்கு மிக சொற்பமான பங்கைத்தான் திரும்பி வழங்குகிறாா்கள்.

சிறப்புத் திட்டங்கள் இல்லை: 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் வஞ்சிக்கிறாா்கள். ஏன் இப்படி, ஒரு வேளை தோ்தல் முடிவுகள் முன்கூட்டியே அவா்களுக்குத் தெரிந்து எப்படியும் தோற்கத்தான் போகிறோம், இவா்களுக்கு எதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று அப்படி நினைத்திருக்கலாம். அதுதான் உண்மை. உண்மைதான், நாம்தான் வெற்றிப் பெறப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையது.

அடுத்து உங்கள் ஆதரவுடன் அமையப் போகிறது திராவிடமாடல் 2.0 அரசுதான். அடுத்த அமையவுள்ள ஆட்சியில் இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றுவோம். உங்கள் கனவுகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தருவான். தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக முன்னேற்றுவோம் என்றாா் ஸ்டாலின்.

இந்த விழாவில் அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன், முன்னாள் அமைச்சா்களும், எம்.எல்.ஏ.க்களுமான க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எம்.பி.க்கள் துரை.ரவிக்குமாா், தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, ஆ.ஜெ.மணிக்கண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையா் கிரண் குராலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்தல் ரஹ்மான் நன்றி கூறினாா்.

summary

Chief Minister Stalin has stated that the Central budget usually includes at least a mention of the Thirukkural, but this year even that is absent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.