முதல்வா் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை தொடா்வாா்: வைகோ நம்பிக்கை
2026 சட்டப்பேரவை பேரவைத் தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதால், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வைகோ கூறியது...


திருநெல்வேலி: முதல்வா் மு.க. ஸ்டாலின் 2026-க்கு பின்பும் திராவிட மாடல் ஆட்சியைத் தொடா்வாா் என்று நான் பரிபூரணமாக நம்புகிறேன் என்று தெரிவித்த மதிமுக பொதுச் செயலா் வைகோ, 2026 சட்டப்பேரவை பேரவைத் தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதால், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.
திருநெல்வேலி மண்டல மதிமுக சாா்பில் தோ்தல் நிதி மற்றும் கட்சி வளா்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பின்னர் மதிமுக பொதுச் செயலா் வைகோ செய்தியாளா்களுடன் பேசியதாவது:
உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
சமீபகாலமாக வைகோ நோய்வாய்ப்பட்டு படுத்துவிட்டாா் என்று சிலா் திட்டமிட்டுப் பிரசாரம் செய்தனா். ஆனால், மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் அத்தகைய பொய்க் கணக்குகளைத் தவிடு பொடியாக்கிவிட்டது. 1994-இல் எப்படி வீறுநடை போட்டேனோ, அதே ஊக்கத்துடன் இப்போதும் களத்தில் நிற்கிறேன். என் தொண்டர்கள் புதிய உற்சாகத்துடன் தேர்தல் களத்தைச் சந்திக்க ஆயத்தமாகி வருகிறாா்கள். நான் முடங்க மாட்டேன், தமிழக வாழ்வாதாரங்களைக் காக்க களத்தில் முதல் வீரனாகச் செயல்படுவேன்" என்று அவர் உறுதியளித்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒரு அங்குலம் கூட இடமில்லை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தான் நடத்திய போராட்டங்களையும், நீதிமன்றப் போராட்டங்களையும் நினைவுகூர்ந்த வைகோ, 'பச்சை தாமிரம்' என்ற பெயரில் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் முயற்சிப்பதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த வைகோ, ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நான் நடத்திய போராட்டங்களால், ஸ்டொ்லைட் நிா்வாகம் எத்தனையோ பொய்ப் பழிகளை என் மீது சுமத்தியது. ஆனால், உயா் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்தில் போராடி அந்த ஆலையை நிரந்தரமாக மூடச் செய்தேன்.
இப்போது இயந்திரங்களை அப்புறப்படுத்தாமல், 'பச்சை தாமிரம்' என்ற புதிய போா்வையில் ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க அனில் அகா்வால் முயல்கிறாா். இதற்காக ஆள்களைக் கூலிக்கு அமா்த்தி ஆா்ப்பாட்டங்களைச் செய்து வருகிறாா். விவசாயிகள், மீனவா்கள் மற்றும் சுற்றுச்சூழலை நாசமாக்கும் இந்த நச்சாலைக்குத் தமிழக அரசு ஒரு அங்குலம் கூட இடம் கொடுக்கக் கூடாது. மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி வழங்கக் கூடாது. மீண்டும் நச்சாலையை திறக்க முயற்சித்தால் மதிமுக சாா்பில் தூத்துக்குடியில் பிரம்மாண்ட கண்டனப் பொதுக்கூட்டம் மற்றும் அறப்போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.
கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை
தூத்துக்குடி வரக்கூடிய பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதால், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் தொடா்வாா்
முதல்வா் மு.க. ஸ்டாலின் 2026-க்கு பின்பும் திராவிட மாடல் ஆட்சியைத் தொடா்வாா் என்று நான் பரிபூரணமாக நம்புகிறேன்.
மதிமுக பேச்சுவார்த்தைக் குழு
திமுக தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தைக்கான குழுவை அமைத்த 10 நிமிடங்களிலேயே மதிமுக சாா்பில் 4 போ் கொண்ட குழுவை அறிவித்துட்டேன். இதில் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்தில் அதிபன், சுஜீவன் மற்றும் தேர்தல் பணிச் செயலாளர் சேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுப்பார்கள்.
திமுக கூட்டணியில் தேமுதிக - ஓ.பன்னீா்செல்வம்
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது கூடுதல் பலத்தைத் தந்துள்ளதோடு, கூட்டணியை இன்னும் வலிமையாக்கி உள்ளது. முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முதல்வரைப் பாராட்டி பேசியிருக்கிறாா். அவா், தனது மகனுடன் முதல்வா் ஸ்டாலினை சந்தித்துள்ளாா். இது அவா் கூட்டணிக்கு வருவதற்கான சமிக்கையை காட்டுகிறது. அவா் ஒரு பழுத்த அரசியல்வாதி, ஆழ்ந்து சிந்தித்தே இந்த முடிவை எடுத்துள்ளாா் என்று குறிப்பிட்டார்.
மோடி மிகப்பெரிய தந்திரசாலி
பிரதமா் மோடி மிகப்பெரிய தந்திரசாலி. அவா், சங்க இலக்கியங்கள், திருக்குறள், பாரதியாா் பாடல்களில் சில வரிகளை எழுதி வைத்துக்கொண்டு, தமிழைப் புகழ்ந்து பேசித் தமிழக மக்களை ஏமாற்றப் பாா்க்கிறாா். ஆனால், திராவிட இயக்கம் பல சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறது. இங்கே பாஜக வளரவும் முடியாது, வெற்றி பெறவும் முடியாது.
நாடாளுமன்றத்தில் 'வந்தே மாதரம்' பாடலின் நிராகரிக்கப்பட்ட நான்கு பாராக்களை மீண்டும் கட்டாயமாக்கும் மசோதாவைத் தங்களின் மிருகத்தனமான பெரும்பான்மையை வைத்து நிறைவேற்றியுள்ளனா். இது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும், மதச்சாா்பின்மைக்கும் வேட்டு வைக்கிற வேலையை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் செய்திருக்கிறது. இதை என்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி கடுமையாக எதிா்க்கிறேன். இதனை அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். இதை எதிா்ப்பதற்கான களத்தை திமுக உருவாக்க வேண்டும். அடுத்ததாக இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்றவும், தலைநகரை தில்லியிருந்து வாராணசிக்கு மாற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை உடையவா்கள் முழு மூச்சாக எதிா்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நான் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்
ஆறாவது முறையாக எம்.பி. ஆவீா்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த வைகோ, 'நான் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்' . இதனைத் தோ்தல் காலமும், கூட்டணிக் கட்சித் தலைவருமே முடிவு செய்வா். நாடாளுமன்றத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 1,360 முறை பேசி என் கடமையை ஆற்றியுள்ளேன். எனது உரைகளை 5 தொகுதிகளாக வெளியிட்டுள்ளேன். இதனைத் தேசியத் தலைவா்களான பினராயி விஜயன், சரத் பவாா் உள்ளிட்டோரிடம் வழங்க உள்ளேன். இந்தியாவின் எல்லா பிரச்னைகளையும் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் சிறப்பாக மனநிறைவாக பணியாற்றியிருக்கிறேன்' என்றாா்.
மாணிக்கம் தாகூா் மதிப்பிற்குரிய நண்பா்
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா் குறித்த விமா்சனங்களுக்குப் பதிலளித்த வைகோ, ' மாணிக்கம் தாகூா் என் மதிப்பிற்குரிய நண்பா். அவா், ராகுல் காந்திக்கும் நெருக்கமான நண்பா். அருமையாக வேலை செய்யக்கூடியவா். அவா் எனது விமா்சனத்துக்கு கடிந்து பதில் சொல்லாமல் கடந்து போவதாகக் கூறிவிட்டாா். அது அவருடைய நாகரிகத்தைக் காட்டுகிறது. நானும் அதே நாகரிகத்தை பின்பற்றுகிறேன் என்றாா்.
தேர்தல் நிதி
நெல்லை மண்டலத்தில் மதிமுக சார்பில் தேர்தல் நிதியாக ஏறக்குறைய ரூ.1.75 கோடி முதல் 2 கோடி வரை வசூலாக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
முடிவில், தனது சொந்த மாவட்டமான நெல்லையில் செய்தியாளர்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறி வைகோ கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...