/

அம்பானி, அதானி, கோடீஸ்வரர்களுக்கான பட்ஜெட்: செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டு மக்களுடன் பாஜக அரசு போர் புரிவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

News image
காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை- கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2026, 12:56 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டு மக்களுடன் பாஜக அரசு போர் புரிவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் செல்வப்பெருந்தகை பேசுகையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த மத்திய பட்ஜெட், கானல் நீர் போன்றது. சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இந்த நிதிநிலை அறிக்கையானது அம்பானி, அதானி, கோடீஸ்வரர்கள், செல்வந்தர்களுக்குமானது. ஏழை எளிய மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ, பெண்களுக்கோ, தொழிலாளிகளுக்கோ, இளைஞர்களுக்கான நிதிநிலை அறிக்கை அல்ல. குறிப்பாக, நாடு இன்று பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பை 100 ரூபாயை எட்டவிருக்கிறது. வெளிநாட்டு நெருக்கடிகள், நம் வெளியுறவுக் கொள்கையால், நிதி ஆளுமை இல்லாததால், நாடு பாதிப்படைந்து வருகிறது.

பொதுவாக தேர்தல் நேரங்களில், அந்தந்த மாநிலங்களுக்கு ஏதாவதொன்றை அறிவிப்பார்கள். ஆனால், அந்தச் சலுகைகள்கூட இன்று இடம்பெறவில்லை. அப்படியென்றால், தமிழ்நாட்டை பாஜக எந்தளவுக்கு வஞ்சிக்கிறது? தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக பாஜக எவ்வாறு போரிடுகிறது? என்பது இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிகிறது.

ஏற்கெனவே பல ரயில்கள் அறிவிக்கப்பட்டு, இன்னும் முடிவுக்கு வ்ரவில்லை. புல்லட் ரயில் என்று சொல்லி, 10 ஆண்டுகளாகியும் நடைமுறைக்கு வரவில்லை.

ஏழை எளிய மக்களுக்கான திட்டம் என்று ஏதாவது இருக்கிறதா என்றால் ஒன்றுகூட இல்லை. இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. ஆகவே, இந்த நிதிநிலை அறிக்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தமில்லை.

அந்நிய முதலீடுகள் ரூ. 35 லட்சம் கோடிவரையில் வெளியில் சென்றிருக்கிறது. பங்குச் சந்தை மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. ஏற்கெனவே பண மதிப்பிழப்பில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் எல்லாம் நசுங்கி விட்டன.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்று அவர்கள் செய்த தவறுகளுக்கு இந்திய மக்கள் விலைகொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.