
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய நிதியில்லை; ஆனால், எம்எல்ஏக்களுக்கு கார்கள்! - சிபிஎம் கண்டனம்!
அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் இலவச கார் வழங்கும் திட்டத்துக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்...
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் - எக்ஸ்
தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் இலவச கார்கள் வழங்கும் அரசுத் திட்டத்துக்கு, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் மானியத்துடன் கூடிய இலவச கார்களை அரசு செலவில் வழங்கும் திட்டத்தை, சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தால், தமிழகத்தின் மீதான நிதிச் சுமை மேலும் அதிகரிக்கும் எனக் கூறி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு அரசிடம் நிதியில்லை என கூறப்படும்போது அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இலவச கார்கள் வழங்க மட்டும் அரசிடம் நிதி இருக்கிறதா? என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி, பெ. சண்முகம் இன்று (ஆக. 21) கூறியதாவது:
“புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் தற்போது வந்துருக்கிறார்கள். ஆனால், அனைவருக்கும் கார் என்பது ஏற்புடையது அல்ல. தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் பணியை மேற்கொள்ள கார் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
ஆனால், ஏற்கெனவே சொந்தமாக கார்கள் வைத்திருக்கும் உறுப்பினர்களுக்கு அரசு செலவில் ஏன் கார் வழங்க வேண்டும்? உண்மையிலேயே சொந்தமாக கார் வாங்க முடியாத சூழலில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அரசு கடனுதவி அளிக்க வேண்டுமே தவிர அரசு செலவில் கார் வழங்குவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை.
ஏற்கெனவே, அரசிடம் நிதியில்லை எனக் கூறுகிறார்கள். எனவே, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இலவச கார் வழங்கும் இம்முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
The CPIM has condemned the government scheme to provide free cars to all MLAs in TN.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





