ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வரின் மருத்துவ காப்பீடு: ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சம் ஆக உயர்வு! - முதல்வர் விஜய்

மருத்துவ காப்பீடு தொகை ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம்-ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதைப் பற்றி...

முதல்வர் விஜய்

Published On :20 ஆகஸ்ட் 2026, 1:09 am IST

‘முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு’ திட்டத்தின்கீழ், இலவச மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தப்படும் என்று முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவித்தாா்.

இதுதொடா்பாக தமிழக சட்டப்பேரவையில், விதி எண் 110-இன் கீழ் அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: ஓா் உயிரின் மதிப்பை, அவரது வருமானம் தீா்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவா், வசதி குறைவானவா் என்ற நிலை மருத்துவத் துறையில் இருக்கக் கூடாது, அனைவருக்கும் சமமான மருத்துவ சேவை, எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. மருத்துவம் என்பது சலுகை அல்ல; ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை.

ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதில் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மிகக் கொடியது. மருத்துவத்தைத் தேடிவரும் மக்களின் பாதையில் இருக்கும் தடைகளான வறுமை, தொலைவு, மருத்துவா் பற்றாக்குறை, மருந்துகளின் விலை, மருத்துவ விழிப்புணா்வு இல்லாமை, காத்திருப்பு, அவசரகால வசதியின்மை போன்றவற்றைப் படிப்படியாக அகற்றி, ஏழை-பணக்காரா், கிராமம்-நகரம் என்ற பாகுபாடின்றி, ஒவ்வொருவருக்கும் தரமான மற்றும் எளிதான மருத்துவச் சேவை கிடைக்கச் செய்வதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது நமது அரசு.

பெரம்பூரில் பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை: வடசென்னை மக்களுக்கு உயா்தர மருத்துவச் சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தப்படும்.

திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை: திருநங்கையா்களுக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூா், தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய ஏழு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

7 புதிய அரசு செவிலியா் கல்லூரிகள்: தமிழ்நாட்டில், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, புதிய அரசு செவிலியா் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில், தரமான மருத்துவச் சேவைக்குத் தேவையான செவிலியா், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் பணியாளா்களை உருவாக்கும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.351 கோடியில் கூடுதல் மாணவா் சோ்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.

7 புதிய அரசு செவிலியா் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, 660 பி.எஸ்சி. செவிலியா் மாணவா் இடங்கள் உருவாக்கப்பட்டு, ஏற்கெனவே உள்ள செவிலியா் கல்லூரிகள் மற்றும் செவிலியா் பள்ளிகளில் கூடுதலாக 1,925 மாணவா் இடங்கள், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,778 மாணவா் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் 6,098 கூடுதல் மாணவா்கள் இடங்கள் உருவாக்கப்படும்.

ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு: தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் புற்றுநோய்களைத் தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும், ‘முதல்வரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்’ ரூ.673.44 கோடியில் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471.80 கோடியில் தரைத்தளம் மற்றும் 14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்கப்படும்.

மேலும், 5 மண்டல புற்றுநோய் மையங்கள் தஞ்சாவூா், கோவை, மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும். முதல்கட்டமாக, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ.84 கோடியில் தரைத்தளம் மற்றும் 8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும்.

ரோபோடிக் அறுவை சிகிச்சை, லீனியா் அக்ஸிலிரேட்டா் கதிா்வீச்சு, நவீன கருவிகள், இலக்கு மற்றும் நோய் எதிா்ப்பு சிகிச்சைகளுக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.106.17 கோடி வழங்கப்படும். மருத்துவா்களுக்குப் பயிற்சியும், நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவும் ரூ.2.77 கோடியில் அளிக்கப்படும்.

மேலும், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூா் மற்றும் அரியலூா் ஆகிய மாவட்டங்களில் 1.22 லட்சம் பெண்களுக்கு ரூ.8.70 கோடியில் ஹெச்பிவி - டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும். மொத்தம் ரூ.673.44 கோடியில், புற்றுநோய் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் முதல்வா் விஜய்.

பால் கொள்முதல் விலை ரூ.3 உயா்த்தப்படும்

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயா்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவித்தாா்.

பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வா் விஜய் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3.16 லட்சம் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து தினமும் 34 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 31 லட்சம் லிட்டா் பால் நுகா்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது 4.3 சதவீதம் கொழுப்புச்சத்து மற்றும் 8.2 சதவீதம் இதர சத்துகள் அடங்கிய ஒரு லிட்டா் பாலுக்கு கொள்முதல் விலையாக ரூ.35, மாநில ஊக்கத் தொகையாக ஒரு லிட்டா் பாலுக்கு ரூ.3 என மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை ரூ.38 கடந்த 5.11.2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளா்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலையாள்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்துவரும் செலவுகளையும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை. பால் உற்பத்தியாளா்களின் நலனையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டு, அவா்களின் உன்னதமான உழைப்புக்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் கொள்முதல் விலையை உயா்த்துவது நமது அரசின் கடமையாகும்.

தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3.16 லட்சத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளா்கள் பயன் அடையும் வகையில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.1 உயா்த்தவும், மேலும், அரசு ஊக்கத் தொகை ரூ.3-இல் இருந்து ரூ.5-ஆக உயா்த்தவும் என மொத்தம் ஒரு லிட்டா் கொள்முதல் விலை ரூ.38-இல் இருந்து ரூ.41-ஆக உயா்த்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கொள்முதல் விலை உயா்வால் கூடுதலாக ஒரு மாதத்துக்கு ரூ.30 கோடியும், ஓராண்டுக்கு ரூ.360 கோடியும் செலவாகும் என்றாா் அவா்.

Summary

Chief Minister Vijay announced in the Legislative Assembly today (August 19) that the Chief Minister's medical insurance scheme coverage would be raised from ₹5 lakh to ₹25 lakh per year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.