விசிக மாநாட்டில் நெரிசல்! உரையை சுருக்கமாக முடித்த திருமாவளவன்!
உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் கடும் கூட்ட நெரிசல்.

மாநாட்டில் திரண்ட கூட்டம்... - DNS
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவரது உரையைச் சுருக்கமாகப் பேசி முடித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசிய மாநாட்டில் தொண்டர்கள் கட்டுப்பாடு இல்லாமல் செய்த நடவடிக்கை காரணமாக, மாநாட்டை முன் கூட்டியே முடிக்கும் நிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தள்ளப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தமிழ்த் தேசிய மாநாடு நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் . திருமாவளவன் அறிவித்திருந்தார்.
அடிப்படையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள பகுதியில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கடந்த ஒரு மாத அளவில் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று, பணிகள் நிறைவடைந்த நிலையில் திங்கள் கிழமை பிற்பகலில் மாநாடு தொடங்கியது.
மழை வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்குள் மாநாட்டை முடிப்பதற்கு விசிக தலைவர் தொல் . திருமாவளவன் திட்டமிட்டு இருந்த நிலையில், பிற்பகல் 2 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. மாலை 4 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாநாட்டுக்கு திருமாவளவன் வருவதற்கு முன்பே மாநாட்டின் மேடை முன்புறம் உள்ள இரு பகுதியிலும் கட்சியினர் அமரத் தொடங்கினர். மாநாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்பக்கூடிய டிஜிட்டல் திரைகள் மேல் ஏறியும், மாநாட்டுப் பந்தலின் வலதுப் புறத்திலுள்ள தலைவர்களின் கட் அவுட்டுகள் மீது மேல் ஏறியும் தொண்டர்கள் அமர்ந்தனர்.
ஆபத்தான நிலையில் அமரக்கூடாது என்று கூறி, அவர்களை கீழே இறங்குமாறு கட்சி நிர்வாகிகள் பலமுறை வலியுறுத்தியும் யாரும் கேட்கவில்லை.
இந்த நிலையில் மாநாட்டுப் பகுதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வர தொடங்கிய நேரத்தில் மாநாட்டு மேடை முன்பகுதிக்கும் கட்சியினர் வந்தனர்.
அரை மணி நேரத்துக்கு மேலாகவும் மாநாட்டு மேடையில் கட்சி நிர்வாகிகள் அருகிலேயே தொண்டர்களும் திரண்டு இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநாட்டு தீர்மானங்களை வாசித்த விசிக தலைவர் திருமாவளவன், ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசி மாநாட்டு நிறைவு செய்தார்.
வழக்கமாக ஒரு மணி நேரம் பேசுவதற்கு திட்டமிட்டு இருந்த அவர், கட்சியின் தொண்டர்கள் செய்த செயல்பாடுகளால் கண்டு கவலையடைந்து மாநாட்டை முன்கூட்டியே நிறை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
Summary
Thol. Thirumavalavan, the leader of the Viduthalai Chiruthaigal, cut his speech short due to severe overcrowding at the party's conference held in Ulundurpet.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






