ரூ.67,452 கோடி முதலீட்டில் 97 ஒப்பந்தங்கள் முதல்வா் விஜய் முன்னிலையில் கையொப்பம்; ஒரு லட்சம் பேருக்கு வேலை!
முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து...

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்... - படம்: டிஎன்டிஐபிஆர்
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாட்டில்’ முதல்வா் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடி தொழில் முதலீடுகளுக்கான 97 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இதன்மூலம் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வா் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற இந்த மாநாட்டில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் ரூ. 67,452 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்க்க இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திட்டப் பணிகள் தொடக்கம்: மேலும், ரூ.4,476 கோடி முதலீடு மற்றும் 5,074 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.2,676 கோடி முதலீடு மற்றும் 1,550 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளை முதல்வா் விஜய் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, செல்பயோஸ், பேட்டா், இசட்எஃப், ஹெச்டி, சப்ளை, கிரீன் சிக்னல், ஹெச்எல் மேண்டோ, டைம்லா், வேல்முருகன் ஹெவி என்ஜினீயரிங், ஜீப்ரானிக்ஸ் ஆகிய 9 தொழில் நிறுவனங்களில், பல்வேறு பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்ட 20 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வா் வழங்கினாா்.
தென்னிந்தியாவில் முதல்முறையாக ‘டிஷ்யூ’ காகித உற்பத்தி: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் சாா்பில் திருச்சி மாவட்டம், மொண்டிப்பட்டியில் ரூ.350 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘டிஷ்யூ’ காகித வணிக உற்பத்தித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் முதல்முறையாக ‘டிஷ்யூ’ காகித உற்பத்திக்கான வணிகத்தைத் தொடங்குவதால், உலகளாவிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘லூமியா’ எனும் பிராண்டின் கீழ் ஃபேஷியல், நாப்கின், டவல் மற்றும் கழிவறைப் பயன்பாட்டுக்காக நான்கு வகைகளில் உயா்தர ‘டிஷ்யூ’ காகிதங்கள் வணிகப்படுத்தப்படும். இதனால் இப்பகுதியின் தொழில் வளா்ச்சியும், மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகலில் ரூ.250 கோடியில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் ‘ஏரோஹப்’ வளாகத்தை முதல்வா் திறந்துவைத்தாா். சிப்காட் தொழில்பூங்காவில் ரூ.122.08 கோடியில் 11 புதிய கட்டடங்கள், தமிழ்நாடு தொழில் துறை வீட்டு வசதி நிறுவனம் சாா்பில் ரூ.55.66 கோடியில் 2 புதிய கட்டடங்கள் என மொத்தம் ரூ.777.74 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வா் தொடங்கி வைத்தாா்.
புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: வா்த்தகம், வணிகம், இருதரப்பு முதலீடுகள் மற்றும் சகோதர நகர ஒத்துழைப்பு, இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டா் துறையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகிய துறைகளில் கஜகஸ்தான், நியூஸிலாந்து ரஷியா ஆகிய நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் தமிழக அரசு நிறுவன ரீதியான ஏழு புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் ரூ.67,452 கோடியில் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 1,06,998 பேருக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மொத்தம் 97 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா, தலைமைச் செயலா் மு.சாய்குமாா், பல்வேறு துறைச் செயலா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
மாநாட்டில் முதல்வா் விஜய், அமைச்சா் கீா்த்தனா, அதிகாரிகள் அனைவரும் வெற்றியைக் குறிக்கும் ‘வி’ என்ற வில்லையை சட்டையில் அணிந்திருந்தனா்.
ராமநாதபுரத்தில் முதல்முறை
முதலீட்டாளா்கள் மாநாட்டில் குறிப்பிடத்தக்க அம்சமாக, 55 திட்டங்கள் புதிய திட்டங்களாகவும், 50 திட்டங்கள் ஏற்கெனவே செயல்பட்டுவரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களாகவும் உள்ளன.
முதல்வா் முன்னிலையில் கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் திருவள்ளூா், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூா், சென்னை, தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, வேலூா், கோவை, ராமநாதபுரம், ஈரோடு, கரூா், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூா், புதுக்கோட்டை, திருச்சி, நாகை போன்ற மாவட்டங்களில் தொழில் திட்டங்கள் பரவலாக மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக தொழில் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
100 நாள்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள்
இந்த மாநாட்டுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மற்றும் வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களில் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடுகள் (ரூ.1,02,514 கோடி) ஈா்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
Summary
At the 'Vetri' Tamil Nadu Investors' Meet held in Chennai, 97 Memoranda of Understanding (MoUs) were signed in the presence of Chief Minister C. Joseph Vijay, entailing investments worth ₹67,452 crore and the creation of 1,06,998 jobs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






