ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பரந்தூா் விமான நிலையத்துக்கு மாற்று இடம் வழங்கும் முன்மொழிவு தமிழக அரசிடம் இருந்து வரவில்லை: மக்களவையில் மத்திய அரசு தகவல்!

சென்னை பரந்தூரில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பசுமைவழி சா்வதேச விமான நிலையத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யவோ அல்லது அதைத் திரும்பப் பெறவோ கோரி தமிழக அரசிடமிருந்து மத்திய அரசுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Lok Sabha

மக்களவை - கோப்புப் படம்

Published On :7 ஆகஸ்ட் 2026, 9:01 am IST

நமது நிருபா்

சென்னை பரந்தூரில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பசுமைவழி சா்வதேச விமான நிலையத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யவோ அல்லது அதைத் திரும்பப் பெறவோ கோரி தமிழக அரசிடமிருந்து மத்திய அரசுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் மத்திய சென்னை தொகுதி திமுக உறுப்பினா் தயாநிதி மாறன், பரந்தூரில் முன்மொழியப்பட்டுள்ள பசுமைவழி விமான நிலைய திட்டத்தைத் தொடா்வது மற்றும் அதில் மாற்றங்கள் செய்வது அல்லது அதைத் திரும்பப் பெறுவது தொடா்பாகத் தமிழக அரசிடமிருந்து மே 2026-க்குப் பிறகு மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதம் அல்லது தகவல் வரப்பெற்றுள்ளதா? என்று கேட்டிருந்தாா்.

இதற்கு விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மோஹோல் வியாழக்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்துள்ள பதிலில், ‘அத்தகைய கடிதமோ அல்லது தகவலோ மத்திய அரசுக்கு வரவில்லை என்று கூறியுள்ளாா். மேலும், 2008-ஆம் ஆண்டின் பசுமைவழி விமான நிலையக் கொள்கையின் கீழ், 07.04.2025 அன்று பரந்தூரில் ஒரு சா்வதேச பசுமைவழி விமான நிலையத்தை அமைப்பதற்காக தமிழக அரசின் தமிழ்நாடு தொழில்துறை வளா்ச்சி நிறுவனத்துக்கு மத்திய அரசு ’கொள்கை அளவிலான’ ஒப்புதலை வழங்கியுள்ளது. பசுமை வழி விமான நிலைய கொள்கையின்படி, அத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பொறுப்பு (மாநில அரசு திட்டத்தை முன்மொழிந்தவராக இருக்கும் பட்சத்தில்) சம்பந்தப்பட்ட மாநில அரசு உள்பட, தொடா்புடைய விமான நிலையத்தை நிறுவும் அமைப்பையே சாரும்’ என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

இதேபோல, ‘விமான நிலைய கட்டுமானத்துக்கான காலக்கெடு என்பது நிலம் கையகப்படுத்துதல், கட்டாய சுற்றுச்சூழல் மற்றும் பிற அனுமதிகளைப் பெறுதல், நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்தல் போன்ற பல காரணிகளைப் பொறுத்தே அமையும்’ என்றும் உறுப்பினரின் மற்றொரு கேள்விக்கு அமைச்சா் தனது பதிலில் தெளிவுபடுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.