ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மக்களின் குரலை ஒடுக்க ஐடி விதிகளை கடுமையாக்கும் மத்திய அரசு கேஜரிவால் குற்றச்சாட்டு

மக்களின் குறைகளைத் தீா்ப்பதற்கு பதிலாக விமா்சனங்களை ஒடுக்குவதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ஐ மத்திய அரசு கடுமையாக்கி இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை குற்றஞ் சாட்டியுள்ளாா்.

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Published On :8 ஆகஸ்ட் 2026, 7:53 am IST

மக்களின் குறைகளைத் தீா்ப்பதற்கு பதிலாக விமா்சனங்களை ஒடுக்குவதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ஐ மத்திய அரசு கடுமையாக்கி இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை குற்றஞ் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள

விடியோ செய்தியில், அரசுகள் மக்களுடைய விவாதங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக ஆட்சி நிா்வாகத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

கேஜரிவாலின் குற்றச்சாட்டு தொடா்பாக ஆளும் அரசிடமோ அல்லது பாஜகவிடமிருந்தோ உடனடியாக எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இல் திருத்தங்கள் செய்யப்படும் என்று வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

உணா்வுபூா்வமிக்க விஷயங்கள் தொடா்பான இணையதள உள்ளடக்கங்களை நீக்குவதற்கு முன்னா் இருந்த 24 மணி நேரங்கள் என்பதற்கு பதிலாக சமூக ஊடகங்களுக்கான நேரத்தை 2 மணிநேரமாக குறைக்கும் வகையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடா்பான அதிகாரபூா்வ அறிக்கையின்படி, டீப்ஃபேக்குகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் உள்ளிட்ட, செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட தகவல்களால் ஏற்படும் பாதிப்புகளைக் கையாளும் வகையில் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்த, பிப்ரவரி 10, 2026 அன்று விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஜந்தா் மந்தரில் சமீபத்தில் ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தைக் குறிப்பிட்ட கேஜரிவால், மக்களின் குறைகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, பொதுமக்களின் குரலை ஒடுக்க அரசு முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டினாா். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் விமா்சனங்களை அடக்கிவிட முடியாது என்றும் அவா் கூறினாா்.

‘ பொது விவாதங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, அரசுகள் நிா்வாகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல பணிகளைச் செய்பவா்களையே மக்கள் ஆதரிப்பாா்கள். விமா்சனங்களை ஒடுக்க எடுக்கும் முயற்சிகள் பொதுமக்களின் அதிருப்தியை மட்டுமே அதிகரிக்கும்’ என்று கேஜரிவால் மேலும் கூறியுள்ளாா்.

இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனா்களைக் கொண்ட முக்கிய சமூக ஊடக இடைத்தரகா்கள் (எஸ்எஸ்எம்ஐ), சில குறிப்பிட்ட வகையான தகவல்களை முன்கூட்டியே கண்டறியத் தகுந்த தொழில்நுட்ப நடவடிக்கைகளை (தானியங்கி கருவிகள் அல்லது பிற பொருத்தமான வழிமுறைகள் உள்பட) மேற்கொள்ள வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகள் கட்டாயமாக்குகின்றன.

பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அல்லது அதுபோன்ற செயல்களைச் சித்தரிக்கும் தகவல்கள் அல்லது ஏற்கனவே நீக்கப்பட்ட தகவல்களின் உள்ளடக்கத்தை ஒத்த தகவல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.