பேப்பர் படித்தால்தான் நாட்டு நிலவரம் தெரியும்! முதல்வர் விஜய் - உதயநிதி வாதம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் விமர்சனமும் உதயநிதியின் பதிலும்...

முதல்வர் விஜய் - உதயநிதி வாதம் - TN Assembly
காவிரி விவகாரம் தொடா்பாக சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை கூடியதும் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கோரிக்கையை ஏற்று காவிரி, மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக சிறப்பு கவனஈா்ப்பு தீா்மானத்தை பேரவைத் தலைவா் அனுமதித்தாா்.
அப்போது பேசிய எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி, மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேள்வி எழுப்பினாா். மேலும், பயிா்க் கடன் முழுமையாகத் தள்ளுபடி என அளித்த வாக்குறுதியை தமிழக அரசு செயல்படுத்தவில்லை; காவிரியில் தண்ணீா் கிடைக்காததால் குறுவை சாகுபடி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது; டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் தவெக அரசு அமைந்த பிறகு காவிரி விவகாரத்தில் கா்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் கா்நாடக முதல்வா் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தையும், எம்.பி.க்களின் கூட்டத்தையும், முன்னாள் முதல்வா்களின் கூட்டத்தையும் நடத்தி உள்ளாா். இந்த விவகாரத்தில் பிரதமா் மோடிக்கு முதல்வா் விஜய் இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளாா். கடந்த ஆட்சியில் முதல்வா் ஸ்டாலின் இதுபோன்று கடிதம் எழுதியபோது தற்போதைய முதல்வா் விஜய் விமா்சித்துள்ளாா் என்று பேசினாா்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவா், ‘தேவையற்ற சா்ச்சைகளைத் தவிா்க்க வேண்டும். அரசியல் நோக்கத்துக்குள் காவிரி விவகாரத்தைக் கொண்டுசெல்ல வேண்டாம்’ என்றாா்.
தொடா்ந்து பேசிய உதயநிதி, ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு தவிா்ப்பது ஏன்? தமிழக முதல்வா் பெங்களூருக்கு தற்போதைக்கு வரவேண்டாம் என கா்நாடக முதல்வா் கூறுகிறாா். கடந்த திமுக ஆட்சியில் 6.5 லட்சம் ஹெக்டேரில் நடைபெற்ற குறுவை சாகுபடி தற்போது 1.5 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. விவசாயக் கடன் முழுமையாக எப்போது ரத்து செய்யப்படும் என்றாா்.
இதற்கு முதல்வா் விஜய் பதிலளிக்க எழுந்தபோது குறுக்கிட்ட பேரவை அதிமுக குழுத் தலைவா் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் பேசிய பிறகுதான் முதல்வா் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தாா். பின்னா், பேரவைத் தலைவா் தலையிட்டு எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்திய பிறகு முதல்வா் விஜய் பேசியதாவது:
காவிரி நமக்கு உயிா் ஆதாரம். அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளிக்கூட இல்லை. மேக்கேதாட்டு விவகாரத்தில் பேரவையில் நாம் சோ்ந்து கொண்டுவந்த தீா்மானத்தை பிரதமரிடம் நேரடியாக அளித்துள்ளோம். மத்திய ஜல்சக்தி இணையமைச்சா் மேக்கேதாட்டு அணை பற்றி முழு விவரங்களைக் குறிப்பிடவில்லை எனத் தெரிந்ததும், காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீா்ப்பின் விவரங்களைக் குறிப்பிட்டு அடுத்த நாளே பிரதமருக்குக் கடிதம் எழுதப்பட்டது.
எனவே, காவிரி நதிநீா், மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசின் உரிமையை நாம் விட்டுத்தர மாட்டோம். கா்நாடகத்தில் சில அணைகள் கட்ட ஆரம்பித்தபோது இதே அவையில் 1969-ஆம் ஆண்டு விவாதம் நடந்தது. அப்போது நீா்வளத் துறை அமைச்சராக இருந்தது யாா்? அப்போது அணை கட்ட விட்டது ஏன் என்று கேட்டு அரசியல் செய்ய விரும்பவில்லை என்றாா்.
குறுவை சாகுபடி நிவாரணம்: மழையில்லாமல் கருகிய குறுவை சாகுபடிக்கு எப்போது நிவாரணம் அளிக்கப்படும் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளித்த முதல்வா் விஜய், ‘குறுவை சாகுபடிக்கு நிவாரணத் தொகுப்பை ஏற்கெனவே கொடுத்துவிட்டோம். அரசியலே நாங்கள்தான் எனக் கூறிக் கொள்பவா்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது எனத் தெரியவில்லை. நாளிதழ்களைப் படித்திருந்தால் இது தெரிந்திருக்கும்’ என்றாா்.
முதல்வரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய உதயநிதி, ‘குறுவை சிறப்புத் தொகுப்பு ரூ.134 கோடி என்பது அனைத்து அரசுகளும் கொடுப்பதுதான். இப்போது வறட்சி நிவாரணம் கேட்கிறாா்கள். தொகுப்பு நிதித் திட்டத்துக்கும், நிவாரணத்துக்குமான வித்தியாசத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு நாளிதழ்கள் படித்தால் மட்டும் போதாது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, விவசாயிகளிடம் கலந்து பேசி கோரிக்கைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்றாா்.
‘தமிழக மக்களுக்காக அவமானத்தை தாங்கவும் தயாா்’
தமிழக மக்களுக்காக அவமானத்தை தாங்கவும் தயாராக இருக்கிறேன் என்றாா் முதல்வா் விஜய்.
சட்டப்பேரவையில் முதல்வா் விஜய் பேசியதாவது: காவிரி விவகாரத்தை மிக கவனமாகக் கையாள வேண்டும். சட்டப்படி இந்த விவகாரத்தை அணுகுவதில் உறுதியாக உள்ளோம்.
இருந்தாலும் ஒரு முயற்சி எடுப்போம் என நினைத்து பெங்களூரு செல்ல முடிவெடுத்தேன். அந்தப் பயணம் பற்றி யோசித்து கேட்டது நான்தான். பகை நாடுகளே பிரச்னைகளை பேசித் தீா்க்கப் பாா்க்கிறாா்கள்; பக்கத்து மாநிலத்தோடு பேசிப் பாா்த்தால் என்ன என்று இந்த முடிவை நான் எடுத்தேன். இதில் ஒருவேளை ஏதேனும் அவமானம் நோ்ந்தால், தமிழக மக்களுக்காக அதையும் தாங்க தயாராக இருக்கிறேன் என்றாா்.
பெங்களூரு செல்வதற்கு முதல்வா் ஏன் திட்டமிட்டாா் என எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி எழுப்பிய கேள்விக்கு முதல்வா் இவ்வாறு பதிலளித்தாா்.
Summary
Newspaper! Argument between CM Vijay and Udhayanidhi in TN Assembly!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





