தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மதுரை மீனாட்சி சொக்கநாதர் தேரோட்டம் கோலாகலம்! மாசி வீதிகளில் குவிந்த பக்தர்கள்!!

மதுரை மீனாட்சி சொக்கநாதர் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றதைப் பற்றி...

News image

மதுரை மீனாட்சி சொக்கநாதர் தேரோட்டம் கோலாகலம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:42 am

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்வு இன்று (ஏப்.29) காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. நான்கு மாசி வீதிகளிலும் ஆயிரக்கணக்கான பகதர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி திருக்கோயிலின் சித்திரைத் திருவிழாவால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நேற்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபோகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக சித்திரைத் திருவிழாவின் 11ஆம் நாள் நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 'ஹர ஹர சங்கர... சிவ சிவ சங்கர..' என பக்தர்கள் கோஷம் விண்ணதிர்ந்தது.

திருத்தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு, கோவிலுக்குள் அமைந்துள்ள ம. முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி மற்றும் ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளினர்.

அதன்பின்னர், காலை 5 மணிக்கு கீழமாசிவீதியில் அமைந்துள்ள தேரடிக்கு அம்மனும் சுவாமியும் வருகை தந்த பிறகு, தேரடி கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன.

காலை 6.30 மணியளவில் சுவாமியின் தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதன் பிறகு அம்மனின் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

இரண்டு தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக மாசி வீதிகளை வலம் வரத் துவங்கின. நான்கு மாசி வீதிகளையும் வலம் வந்து இறுதியாக தேரடியில் பிற்பகல் 12.30 மணியில் நிலைக்கு வரும்.

தேரின் முன்பாக கலைஞர்கள் பலர் ஒயிலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலைகளை நிகழ்த்திய வண்ணம் சென்றனர். இளைஞர்கள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் இரண்டு தேர்களையும் பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

Story image

தேரோட்டத்தின் வரலாறு...

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் தேரோட்டம் திருமலை நாயக்கரின் காலத்திற்கு முன்பிருந்தே நடைபெற்று வருவதாக மீனாட்சி கோவிலின் திருப்பணி மாலை என்ற நூல் குறிப்பிடுகிறது.

அந்நூலில் கி.பி.16 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரின் காலத்தில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார், அம்மன் தேர் நிலை நிறுத்தப்படும் தேருக்கான மண்டபத்தை கட்டியுள்ளதாக கூறியுள்ளது. தற்போதுள்ள அம்மன் மற்றும் சுவாமிக்கான இரண்டு தேர்களும் ராணி மங்கம்மாளின் பேரன் விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் (கி.பி.1706-1732) வழங்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சுந்தரேசுவரருக்கான தேரில் சிவபெருமானின் திருவிளையாடல், சிவமகாபுராணம் தொடர்பான சிற்பங்களையும் கொண்டு செதுக்கப்பட்டுள்ளன.

சைவ சமய முக்கியத்துவம் வாய்ந்த சுந்தரேசுவரரின் தேரில் ஆங்காங்கே குழலூதும் வேணுகோபால், வஸ்திர அபகர்ணக் கண்ணன், காளிங்க நர்த்தனன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத விஷ்ணு, கஜலட்சுமி, இரணிய வதை முதலான சிற்பங்கள் இத்தேரில் இடம் பெற்றுள்ளன. அக்காலத்தில் சைவ - வைணவ சமயங்களுக்கு இடையே நிலவிய ஒற்றுமையைப் பறைசாற்றுவதாக இச்சிற்பங்கள் அமைந்துள்ளன.

தாணு (சிவன்), மால் (விஷ்ணு), அயன் (பிரம்மா) என மும்மூர்த்திகளும் இணைந்த வடிவமாகிய தாணுமாலயன் எனப்படும் ஏகபாததிரிமூர்த்தி சிற்பமும், சிவனின் ஏகபாதமூர்த்தி சிற்பமும் அருகருகே இடம்பெற்றிருப்பது இத்தேரில் அமைந்துள்ள சிற்பங்களிலேயே மிகச் சிறப்பானதாகும்.

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் தேரோட்டத் திருவிழா என்பதால், மதுரை மாநகராட்சி ஆங்காங்கே பக்தர்களுக்கு தேவையான குடிநீர், நடமாடும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்யப்பட்டுள்ளன.

காவல்துறை சார்பில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 7 மணி அளவில் சப்தாவர்ணச்சப்பரத்தில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை அழகர் மலையில் இருந்து புறப்படும் கள்ளழகரை நாளை காலை மதுரை மூன்று மாவடி அருகே பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்த தேர் சக்கரங்கள் இந்த ஆண்டு மாற்றப்பட்டு தற்போது புதிய சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இரண்டு தேர்களின் சக்கரங்களுக்கும் சுமார் ரூ.35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்றன. திருச்சி பாரத மிகுமின் நிலையம் (பெல்) இந்த சக்கரத்தை பொருத்தி கொடுத்துள்ளது. சுவாமி தேர் சுமார் 16 டன் எடையும், அம்மன் தேர் சுமார் 11 டன் எடையும் கொண்டதாகும்.

Summary

The chariot procession—a highlight of the Madurai Chithirai Festival—was celebrated with great grandeur this morning (April 29). Thousands of devotees gathered along the four Masi Streets to offer their prayers and seek the blessings of the deities.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.