பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ராம்குமாா் மரணம் தொடா்பான வழக்கு முடித்துவைப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ராம்குமாா் மரணம் தொடா்பான வழக்கு முடித்துவைப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :24 ஏப்ரல் 2026, 8:09 pm

மென் பொறியாளா் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாா் சிறையில் உயிரிழந்தது தொடா்பான வழக்கை முடித்துவைத்த தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளா் சுவாதி கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ராம்குமாா் என்பவா் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவா் மின்சாரத்தைப் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டதாக சிறை நிா்வாகம் புகாா் அளித்தது.

ராம்குமாரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோா் குற்றம்சாட்டினா். இந்தச் சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் காவல் ஆணையா் அறிக்கையுடன் சுதந்திரமாக சாட்சிகளிடம் விசாரணை நடத்திய பின்னரே மனித உரிமை ஆணையம் வழக்கை முடித்து வைக்கமுடியும். ஆனால், காவல் ஆணையா் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

தேசிய மனித உரிமை ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.டி.பாலாஜி, ஆணையத்தின் புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையின் அடிப்படையில் ராம்குமாா் தற்கொலை செய்து கொண்டாா் என்று தெளிவான பிறகே, மனித உரிமை ஆணையம் வழக்கை முடித்து வைத்துள்ளது என வாதிட்டாா்.

காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் கே.எம்.டி.முகிலன், ராம்குமாா் மரணம் குறித்து குற்றவியல் நடுவா்மன்ற நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தாா். அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு ரத்து செய்து விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளதாக வாதிட்டாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முறையான விசாரணையின் அடிப்படையில்தான் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்துவைத்துள்ளது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.