சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை வரும் 6 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கு அரிதினும் அரிதான வழக்கு என்பதால் 9 பேருக்கும் உட்சபட்சமாக தூக்குதண்டனை அல்லது சாகும்வரை ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும் என சிபிஐ வாதத்தை முன் வைத்த நிலையில், எந்த தவறும் செய்யாத இருவரையும் காவல்துறையினர் கொடூரமாக அடித்து உயிரிழக்கவைத்துள்ளனர். இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதி முன்பாக ஜெயராஜ்- பென்னிக்ஸ் குடும்பத்தினர் கண்ணீர்விட்டு அழுது முறையிட்டனர்.
கொலை செய்யும் நோக்கில் சம்பவம் நடைபெறவில்லை, திருந்தி வாழவைக்கும் வகையில் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை - மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 9பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்..
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் மதுரை மாவட்டம் முதலாவது குழுக்கள் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 23 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்
அப்போது நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வாசித்த போது : வழக்கின் அனைத்து தரப்பு விசாரணைகளையும் பார்க்கும்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்மானிப்பதாக தெரிவித்ததோடு குற்றம்சாட்டப்பட்ட 9 பேரின் உடல்நிலை, மன நிலை குறித்தான அறிக்கை மற்றும் சம்பள கணக்கு மற்றும் சொத்து விவரங்களையும் சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தை அதிகாரிகள் தரப்பில், 9 பேரின் செயல்பாடுகள் குறித்தும் மத்திய அரசு, மாநில அரசுகள் மூலமாக அறிக்கையாக தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது.
இதையடுத்து இன்றைய தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் முன்பாக தமிழக அரசு மற்றும் தூத்துக்குடி காவல்துறையின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதனையடுத்து விசாரணை தொடங்கியவுடன் குற்றவாளிகளான 1) ஆய்வாளர் ஸ்ரீதர் , 2) சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், 3 சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், 4) காவலர் முருகன், 5) சாமத்துரை, 6) முத்துராஜா, 7) செல்லத்துரை, 8) தாமஸ் பிரான்சிஸ், 9 வெயிலுமுத்து ஆகிய 9 பேரும் நீதிபதி முன்பாக ஆஜராகிய நிலையில் ஒவ்வொருவரிடமும் தனிதனியாக குடும்ப விவரங்கள், கல்வி, சொத்து உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து நீதிபதி கேட்டார். அப்போது 9 பேரும் அவர்கள் தரப்பு கோரிக்கைகளையும் நீதிபதி முன்பாக எடுத்துக் கூறினா்.
இதையடுத்து சிபிஐ தரப்பு வழக்கறிஞர் விஜயன் நீதிபதி முன்பாக வாதிட்டபோது: குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்,இரட்டை ஆயுள், தூக்குத்தண்டனை போன்ற அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்; அரிதிலும் அரிதான காவல் கொடுர வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மனித உரிமைக்கு எதிரானது; ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி இருவரை கொலை செய்துள்ளனர்.
பொதுவாக காவல் மரணங்களில் நேரடியாக பார்த்த சாட்சிகள் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த வழக்கில் 3 பேர் நேரடியாக பார்த்த சாட்சிகளாக உள்ளனர். ஆகவே அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அல்லது இறக்கும் வரை சிறையில் இருப்பது போன்ற தண்டனைகளை வழங்க வேண்டும். காவல் நிலையத்தில் நடந்த இந்த கொடூரமான தாக்குதலால் இருவர் உயிரிழந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த சமுதாயமே அதிர்ச்சி அடைந்தது; எனவே உரிய உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து் குற்றவாளிகள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், ஐந்தரை ஆண்டுகள் மேலாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும், குடும்பத்தின் ஒரே பொருளாதாரம் ஈட்டும் நபர். உடல்நலம் மற்றும் வயது, சிறைக்காலத்தில் கருத்தில் கொள்ள வேண்டும். கோபத்தில் நிகழ்ந்ததா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஜெயராஜை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற வரை பிரச்னை இல்லை. பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் தகராறு செய்த பின்னரே பிரச்னை எழுந்துள்ளது. அவர் விசாரணையில் பிரச்னை செய்ததால் எழுந்த கோபத்தின் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றே விசாரணை அறிக்கையில் உள்ளது, மரணம் விளைவிக்க வேண்டுமென்ற நோக்கம் இல்லை.
அரிதான வழக்கானாலும் குற்றவாளிகளின் குடும்பப் பின்னணி, மனநிலையையும் கருத்தில் கொள்ள வேண்டுமென உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆகவே குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் எனவும், மரண வழக்கு தொடர்பான பிரிவுகள் அனைத்து கொலை விவகாரங்களுக்கும் ஒரே மாதிரியான தண்டனை வழங்குவதாக இருந்ததால், அரிதினும், அரிதான வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் ஏன் தூக்குதண்டனையை வழங்க வேண்டும்? அது அவசியம் தேவையா? என்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல்கள் உள்ளன.
ஒருவரை சமுதாயத்தில் வாழவே தகுதியற்றவர், அவரை திருத்த இயலாது எனும் முடிவுக்கு வரும் போது தூக்கு தண்டனை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். இது நோக்கமின்றி நிகழ்ந்த மரணம். ஊடகங்கள் இந்த வழக்கை பெரிது படுத்துகின்றன - இதற்கு முன்னதாக உள்ள போக்சோ வழக்கு, கொலை வழக்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் - தண்டனையை குறைத்து வழங்கிட வேண்டும்; குற்றவாளிகளை திருந்தி வாழ வைக்கும் வகையிலான தண்டனைகளை வழங்க வேண்டும். தூக்கு தண்டனை சம்பந்தப்பட்ட வழக்கின் குற்றவாளியை திருத்தலாம் ஆனால் வாழவைக்காது என்று வாதிட்டனர்.
இதனை தொடர்ந்து நீதிபதி முத்துக்குமரன் முன்பாக ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி ஆகியோர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை நீதிபதியிடம் முன்வைத்தபோது : இருவரையும் லத்தியால் கடுமையாக தாக்கி உள்ளனர், உடலில் உள்ள அனைத்து பாகங்களும் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இரவும் முழுவதும் வைத்து அடித்திருக்கிறார்கள். அதற்கு கொடூர ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என குற்றவாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆயுதங்கள் பயன்படுத்தினால்கூட அந்நேரமே முடிந்துவிடும். ஆனால் லத்தியால் தாக்கியிருக்கிறார்கள். பல மணி நேரம் விசாரணை எனும் பெயரில் லத்தியால் தாக்கப்பட்டது கொடூரமானது. கொடூர மனநிலையிலேயே காவல்துறையினர் நடந்து கொண்டுள்ளனர். ஆகவே, இதனை அரிதினும் அரிதான வழக்காகவே கருதி, உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும். இதையடுத்து ஜெயராஜின் மனைவி செல்வராணி மகள் பெர்சி ஆகியோர் நீதிபதி முன்பாக ஆஜராகி கண்ணீர் மல்க நீதிபதியிடம் முறையிட்டனர்.
எந்த தவறும் செய்யாத இருவரை கொன்று விட்டனர் - எனது கணவரையும் கொலை செய்து விட்டனர்; எனவே உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றனர்.
அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் முறையீடுகளையும் கேட்டறிந்த நீதிபதி முத்துக்குமரன் அவர்கள் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்களை ஏப்ரல் -6ஆம் தேதி திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து 9 பேரும் மதுரை மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்துசெல்லப்பட்டனர்.
Summary
Judge Muthukumaran has ordered that the details of the sentences for 9 police officers, including Inspector Sridhar, in the Sathankulam father-son murder case will be announced on the 6th.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சாத்தான்குளம் வழக்கு: மூச்சுத் திணறி இறந்ததாக பேசியோருக்கு தண்டனை வழங்குக - கமல்

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை!

மோசடி வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ..! பதவியிலிருந்து நீக்கம்!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகளான காவலா்களுக்கு மரண தண்டனை வழங்க நீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


