டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2026-க்கு உரைகல்!

News image
Updated On :12 ஜூன் 2024, 9:01 pm

பீ.ஜெபலின் ஜான்

விக்கிரவாண்டி பேரவைத் தொகுதி இடைத்தேர்தல், 2026 பேரவைத் தேர்தலுக்கான உரைகல்லாக மாறக்கூடிய வாய்ப்புள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, அதிமுக சம பலத்துடன் உள்ளன. நட ந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் விசிக பானை சின்னத்தில் (திமுக கூட்டணி) 39.57 சதவீதம், அதிமுக 35.83 சதவீதம், பாமக 17.64 சதவீதம், நாதக 4.57 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன.

அதேநேரத்தில் 2019-இல் விசிக உதயசூரியன் சின்னத்தில் 47.3 சதவீதம், பாமக (அதிமுக அணியில்) 42.4 சதவீதம், நாதக 1.8 சதவீதம் வாக்குகளையும் பெற்றன. 2021 பேரவைத் தேர்தலில் திமுக 48.69 சதவீதம், அதிமுக (பாமக கூட்டணி) 43.72 சதவீதம், நாதக 4.27 சதவீத வாக்குகளையும் பெற்றன.

மேலும், 2019-இல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக (பாமக கூட்டணி) 60.29 சதவீதம், திமுக 36.48 சதவீதம், நாதக 1.55 சதவீத வாக்குகளைப் பெற்றன. இந்த புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால் வன்னியர், ஆதிதிராவிடர், பிற சமூக வாக்குகள் எவ்வாறு நகர்கின்றன என்பதை முழுமையாக அறியலாம்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விசிகவைவிட 3.7 சதவீதம் மட்டுமே அதிமுக குறைவாக பெற்றுள்ளது. இது 2019-இல் உதயசூரியன் சின்னத்தில் விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமார் பெற்றதைவிட 8 சதவீதம் குறைவு.

உதயசூரியன் சின்னத்தில் விசிக போட்டியிடும்போது 8 சதவீதம் கூடுகிறது, பானை சின்னத்தில் போட்டியிடும்போது 8 சதவீதமும், 2021 பேரவைத் தேர்தலில் திமுக பெற்றதைவிட 9 சதவீதமும் குறைகிறது என்றால் பிற சமூக வாக்குகள், பானை சின்னத்தில் போட்டியிடும் விசிகவை எதிர்த்து அதிமுகவுக்கு நகர்ந்துள்ளது தெளிவாகிறது.

அதிமுக அணியில் மாங்கனி சின்னத்தில் பாமக போட்டியிட்டதால் பிற சமூக வாக்குகள் பாமக எதிர்ப்பு என்ற புள்ளியில் உதயசூரியன் சின்னத்தில் தங்கியது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அரசு கொடுத்த பிறகும், 2021 பேரவைத் தேர்தலில் திமுக 49 சதவீதம் பெற்று இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது.

1996-க்கு பிறகு தமிழகத்தில் பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றிபெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலர் சி.வி.சண்முகம், விடுபட்ட ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் திமுகவையும் மீறி அதிமுகவுக்கு கணிசமான வாக்குகளைப் பெற்றார்.

அதேபோல, பாமக நிறுவனர் எஸ்.ராமதாஸின் சொந்த மாவட்டத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் என்பதால் அவரும் பாமகவின் வாக்கு வங்கியை உயர்த்த புதிய உத்திகளைக் கையாளக்கூடும்.

2016-இல் அன்புமணியை முதல்வராக முன்னிறுத்தி பாமக தேர்தலை சந்தித்தபோது இத்தொகுதியில் பாமக 22 சதவீதம் வாக்குகள் பெற்றது. ஆனால், சமீபத்திய மக்களவைத் தேர்தலில் அதிமுகவை வன்னியர்கள் பெருமளவு ஆதரித்ததால் பாமகவுக்கு 19 சதவீதம் மட்டுமே கிடைத்தது.

இப்போது போலவே 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்திருந்தது.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாமகவும் தோல்வி அடைந்திருந்தது. அதற்கடுத்து வந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுகவை டெபாசிட் இழக்க செய்து பாமக 2-ஆவது இடத்துக்கு முன்னேறியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வகுத்த திண்ணை பிரசாரம்தான் காரணம்.

பென்னாகரம் போல விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வலுவாக இல்லை எனினும்; எப்படியாவது 2-ஆவது இடத்தை பெற பாமக எத்தனிக்கும்.

இத்தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிடுவதால் தலித், பிற சமூக வாக்குகளையும், வன்னியரில் ஓரளவு வாக்குகளையும் பெற்று 2019 இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற 60 சதவீத வாக்குகளை பெற திமுக இலக்கு நிர்ணயிக்கும்.

ஈரோடு இடைத்தேர்தலில் தீவிர களப்பணியாற்றிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இப்போது அரசியல் களத்தில் இல்லை என்றாலும், அமைச்சர் கே.என்.நேரு போன்ற மூத்த நிர்வாகிகளை களமிறக்கி விக்கிரவாண்டியில் வெற்றி பெற முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கக் கூடும்.

சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பெற்ற பிற சமூக வாக்குகளை திமுகவிடம் இழக்காமலும், வன்னியர் வாக்குகளை பாமகவிடம் இழக்காமலும் 2-ஆவது இடத்தை தக்கவைக்க விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக கடுமையாகப் போராடும்.

இந்த சவால்களுக்கு மத்தியில், வன்னியர், தலித், பிற சமூக வாக்குகள் என வாக்குத்திரள்வு அதிகமுள்ள இத்தொகுதியில் நாதக என்ன செய்ய போகிறது என்பதை உற்றுநோக்குவது அவசியம்.

2019 மக்களவைத் தேர்தலில் 1.8 சதவீதமும், 2021 பேரவைத் தேர்தலில் 4.27 சதவீதமும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 4.57 சதவீதமும் அக்கட்சி பெற்றுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாதக காப்பாற்றியது. இம்முறையும் அதே 5 சதவீத வாக்கு வங்கியை நாதக தக்கவைக்கலாம். நாதகவின் மாநில சராசரியான 8.19 சதவீதத்தை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தாண்டினால் மிகப்பெரிய சாதனை.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அதன் ஆட்சியில் அறிவித்த பிறகு அக்கட்சி மீதான பற்றுதலை வன்னியர்கள் காட்டுகின்றனர். அதேநேரத்தில் பிற சமூகங்கள் அதற்கு நேர் எதிராக திமுகவுக்கு ஆதரவாக திரள்கின்றனர்.

இந்த முறை மக்களவைத் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பார்த்தால் எடப்பாடி, குமாரபாளையம், அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, ஜெயங்கொண்டம், அரியலூர், பரமத்திவேலூர், சங்ககிரி பேரவைத் தொகுதிகளில் அதிமுக அணி முன்னிலை பெற்றுள்ளது.

இதில் குமாரபாளையம், அருப்புக்கோட்டை, திருமங்கலம் தவிர அனைத்து தொகுதிகளும் வன்னியர்கள் அடர்த்தியாக வாழக்கூடியவை ஆகும். வன்னியர்கள் திரண்டு வாக்களித்ததால் தான் இத்தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.

தேமுதிகவுக்கு இத்தொகுதியில் கணிசமான செல்வாக்கு உண்டு. 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இடைத் தேர்தலில் விஜயகாந்தை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடைசி நேரத்தில் அழைத்து வந்து பிற சமூக வாக்குகளை அறுவடை செய்தார்.

இம்முறையும், தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்தின் பிரசாரம், அதிமுகவுக்கு கைகொடுக்கலாம்.

தொடர் தோல்வியில் இருக்கும் அதிமுகவை முதல்கட்டமாக வாக்கு சரிவில் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது.

2019 மக்களவைத் தேர்தல் படுதோல்விக்கு பின்னர் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி அதிமுகவுக்கு உற்சாகத்தை கொடுத்தது. ஆனால், அப்போது அதிமுக ஆளும்கட்சியாக இருந்தது. இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை கணிசமான வாக்கு வங்கியுடன், அதன் 2-ஆவது இடத்தை தக்கவைக்கச் செய்யும் கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் கணிசமான வாக்கு வங்கியைப் பெற்றால்தான் அதிமுக அதிகாரமட்டத்தில் சி.வி.சண்முகம் தொடர்ந்து கோலோச்ச முடியும். இதேபோல, திருக்கோவிலூர் தொகுதியில் விசிகவை பின்னுக்குத் தள்ளி அதிமுக முன்னிலை பெற்ற நிலையில், தனது தொகுதியில் ஏற்பட்ட சறுக்கலை சரிசெய்ய விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தம் அமைச்சர் க.பொன்முடிக்கு ஏற்பட்டுள்ளது.

இங்கு நிலவும் அரசியல் சூழலில், தாங்கள் இழந்த அடிப்படை வன்னியர் வாக்குகளை தக்கவைக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்ன வியூகம் வகுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வட தமிழகத்தில் பெரும்பாலான பேரவைத் தொகுதிகளைப் போலவே, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியிலும் வன்னியர், ஆதிதிராவிடர் வாக்குகள் நேரெதிர் அணிக்கு திரள்வதும், பிற சமூக வாக்குகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வாக்குகளாக மாறுவதும் என வித்தியாசமான வாக்களிக்கும் முறை உள்ளது.

மொத்தத்தில் 2026 பேரவைத் தேர்தலுக்கான உரைகல்லாக விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.