தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரமாக இருந்து வருகிறது. விமான நிலைய விரிவாக்கம், துறைமுகம் விரிவாக்கம், சிப்காட் விரிவாக்கம் 15 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் என நாளுக்கு நாள் தூத்துக்குடி நகரின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நிலக்கரி உள்ளிட்ட சரக்குகள் போக்குவரத்தை எளிதாக கையாளுவது, தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களை ரயில் மூலம் கொண்டு செல்வது ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி - மதுரை இடையே புதிய ரயில் வழித்தடத்தை அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, மீளவிட்டான், மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரைக்கு 144 கிலோமீட்டர் தொலைவில் ரயில் பாதை அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல் கட்டமாக தூத்துக்குடியில் இருந்து மேலமருதூர் வரை பணிகள் தொடங்கப்பட்டு கடந்த பத்தாண்டுகளில் வெறும் 17 கிலோமீட்டர் தொலைவிற்கு மட்டுமே பணிகள் முடிவுற்று அண்மையில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இரண்டாம் கட்டமாக மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, வரையிலும் மூன்றாம் கட்டமாக அருப்புக்கோட்டையில் இருந்து திருப்பரங்குன்றம் வரையிலும் என மீதமுள்ள 127 கிலோமீட்டருக்கான பணிகள் நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பில் உள்ளது.