/

தமிழகத்தின் தியாக தீபங்கள் - 150: நா.அண்ணாமலைப் பிள்ளை

திருவண்ணாமலையில் 9-7-1888-இல் பிறந்தவர் நா.அண்ணாமலைப் பிள்ளை. இளம் வயதில் வீர விளையாட்டுகளில் தனித்திறன் பெற்று விளங்கினார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:07 am

த. ஸ்டாலின் குணசேகரன்


திருவண்ணாமலையில் 9-7-1888-இல் பிறந்தவர் நா.அண்ணாமலைப் பிள்ளை. இளம் வயதில் வீர விளையாட்டுகளில் தனித்திறன் பெற்று விளங்கினார். இளைஞர்களுக்கு "சிலம்பம்' கற்றுக் கொடுத்ததன் மூலம் பெயர் பெற்றிருந்தார்,
எளிமையான குடும்பத்தில் பிறந்த பிள்ளை கமிஷன் மண்டி நடத்தி பொருளீட்டினார். 1919-இல் காங்கிரஸில் உறுப்பினரானார். "தர்ம சேவா சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கி ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வித்தொண்டாற்றி வந்தார்.
"தேசிய இளைஞர் சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கி மக்களிடம் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான கருத்துகளை விதைத்தார். 
மக்கள் மொழியிலேயே மேடையில் மணிக்கணக்காகப் பேசும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். இவருடைய முதல் பேச்சே ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்துப் பேசிய கனல்கக்கும் உரையாகும். 1926-இல் தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழக இளைஞர்கள் மாநில மாநாட்டில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார் பிள்ளை.  அவ்வுரை இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது. பல மாவட்டங்களில் நடைபெற்ற மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் உரையாற்றியுள்ளார்.
1920 ஒத்துழையாமை இயக்கத்தின்போது கழுத்தில் தமுக்கைக்கட்டி அடித்துக்கொண்டு அண்ணாமலையார் கோயில் முன் நின்று பலமுறை உரை நிகழ்த்தியுள்ளார். இதனால் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை வைக்கப்பட்டிருந்தார் பிள்ளை. 1921 டிசம்பரில் கள்ளுக்கடை மறியலில் பங்கேற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
1927 நீல் சிலையகற்றும் போராட்டத்திலும் முன்னணிப் பாத்திரம் வகித்தார். "நீல் சிலை பயங்கர ஆட்சியின் சின்னம்'  என மேடையில் முழங்கினார். 1930-இல் நடைபெற்ற வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். சத்தியாகிரகம் நடப்பதற்கு முன்பு  போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி பல கூட்டங்களில் பேசி அதற்கு உரம் சேர்த்துள்ளார். இப்போராட்டத்தில் கைதாகி ஓராண்டு சிறை வைக்கப்பட்டார். 1940 இல் யுத்த எதிர்ப்பு உரைக்காக 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
1942 "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் திருவண்ணாமலையில் ரயில் கவிழ்ப்பு முயற்சி, தந்திக்கம்பிகள் அறுப்பு, தபால் நிலையங்கள் எரிப்பு உள்ளிட்ட பல காரணங்களைக் காட்டி கைது செய்யப்பட்ட பிள்ளை இரண்டரை ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
வடாற்காடு மாவட்ட காங்கிரஸ் தலைவர், 1931-இல் திருவண்ணாமலை நகர மன்ற உறுப்பினர், 1937-இல் சென்னை சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்,1939-இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர், 1961 இல் சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் பிள்ளை.
தனக்குத் தானே தகுதியை மேம்படுத்திக்கொண்டு மக்களிடமிருந்து முகிழ்த்த தமிழக காங்கிரஸ் ஆளுமைகளில் ஒருவராக விளங்கி-சொல்லாலும் செயலாலும் விடுதலை இயக்கத்திற்கு வலுசேர்த்த நா.அண்ணாமலைப்பிள்ளை 1-6-1961 இல் 73-ஆவது வயதில் மறைந்தார்.
இவர் நினைவாக திருவண்ணாமலையிலுள்ள ஓர் அரசுப் பள்ளிக்கு "தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.