தமிழகத்திலும் காலூன்ற வேண்டும் என்பது பாஜகவின் இப்போதைய முனைப்புகளில் ஒன்று. கட்சி ஆரம்பித்து 40 ஆண்டுகள் ஆன போதிலும் அது ஒரு வட இந்திய கட்சி என்ற நிலைமைதான் இருந்தது. ஆனால், தற்போது வடக்கில் இருந்து மேற்கு, கிழக்கு, வடகிழக்கு வரை சென்றுவிட்டது பாஜக. நாட்டில் உள்ள 31 மாநிலங்கள், ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் 18-இல் அக்கட்சி அல்லது அது அங்கம் வகிக்கும் கூட்டணியின் ஆட்சிதான் நடைபெறுகிறது.
தென்னிந்தியாவைப் பொருத்தவரை கர்நாடகத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் குறிப்பிடத்தக்க சக்தியாக முடியாத நிலைதான் காணப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் அக்கட்சிக்கு கடந்த தேர்தல்களில் ஏமாற்றமே கிடைத்து வந்திருக்கிறது. தனது வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் பாஜக, அறுதிப் பெரும்பான்மையுடன் நாட்டை ஆளும் நிலை உருவாகியிருந்தாலும் தமிழகம் அதன் அடைய முடியாத கனவாகவே இருக்கிறது.
1998 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் போட்டியிட்டு 3 இடங்களையும், 1999 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 4 இடங்களையும் பெற்றிருந்த பாஜக, அதன் பிறகு 2014 தேர்தலில் பாமக, தேமுதிக, மதிமுக உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் வென்றது. கடந்த 2019 தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
அதேபோலவே, சட்டப்பேரவைத் தேர்தலிலும் அந்தக் கட்சி இதுவரை குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றியைப் பெற முடியவில்லை. 1996-இல் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டு பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, நடைபெற்ற 2001 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு காரைக்குடி, மயிலாடுதுறை, மயிலாப்பூர், தளி என 4 தொகுதிகளில் வென்றிருந்தது.
ஆனால், அதைத் தொடர்ந்து வந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அந்தக் கட்சியால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. 2011 பேரவைத் தேர்தலில் ஜனதா, ஐக்கிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு 2.55 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, கடந்த 2016 தேர்தலில் சில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2.86 சதவீத வாக்குகளைப் பெற முடிந்தது, அவ்வளவே.
எம்எல்ஏக்களை பேரவைக்கு அனுப்ப முடியாவிட்டாலும், அமைப்பு ரீதியாகக் கட்சியை வலுப்படுத்தும் செயல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. கடந்த 5 ஆண்டுகளில் அக்கட்சியின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் தனிப்பட்ட வாக்கு வங்கி சதவீதமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் வருகிறது.
மக்களவைத் தேர்தல்களின்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து வந்த இருபெரும் திராவிடக் கட்சிகளின் தலைவர்களான ஜெயலலிதாவும், கருணாநிதியும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் அந்தக் கட்சியை பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில்தான் 2021-இல் அந்த இரு தலைவர்களும் இல்லாத முதல் சட்டப் பேரவைத் தேர்தலைத் தமிழகம் சந்திக்கிறது.
தமிழக அரசியலில் அழுத்தமாகக் கால் பதிக்க இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்து கொண்ட பாஜக, அதற்கேற்ப தனித்துப் போட்டி என்கிற கடந்த பேரவைத் தேர்தல் நிலைப்பாட்டை கைவிட்டு விட்டு, அதிமுகவுடன் கைகோத்திருக்கிறது. சொல்லப்போனால் அதற்கான கட்டாயத்தை தனது அரசியல் சாதுரியங்களால் உருவாக்கியிருக்கிறது எனலாம்.
திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருவது அதிமுகவுக்கும் உள்ளூர மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. பாஜகவைக் கொண்டு தனது எதிரியான திமுகவை பலவீனப்படுத்துவது, அத்துடன் ஜெயலலிதா என்ற மக்கள் செல்வாக்கு பெற்ற தலைமை தன்னிடம் இல்லாததை பிரதமர் நரேந்திர மோடி என்ற பிரபலமான ஆளுமை மூலம் ஈடுகட்டுவது என்பதில் அதிமுகவுக்கும் இரட்டை லாபம்தான். இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸýக்குத் தரப்படுவது போல, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கும் குறைந்தபட்சம் 20 தொகுதிகளாவது கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, திரைப்பட நடிகை குஷ்பு, முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) "கராத்தே' தியாகராஜன், நடிகர் ராதாரவி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பி. ராமலிங்கம், சட்டப்பேரவை துணை அவைத் தலைவராக இருந்த வி.பி. துரைசாமி என்று திமுகவை எதிர்த்துக் களமிறங்க பல பிரபலங்கள் பாஜகவில் இப்போது இருக்கிறார்கள்.
பாஜகவுக்கு குமரி மாவட்டத்துக்கு அடுத்து மேற்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. பலமான ஆளுங்கட்சியையே தனக்கு இணக்கமாக செயல்பட வைக்கும் வாய்ப்பு இருக்கும் நேரத்தில், அதைப் பயன்படுத்தி இரட்டை இலக்க உறுப்பினர்களுடன் பேரவைக்குள் நுழைவதற்குத் திட்டமிட்டு செயல்படுகிறது அக்கட்சி.
பிரதமரின் அடுத்தடுத்த தமிழக வருகைகள் கட்சியை சட்டப்பேரவையில் கால் பதிக்க வைப்பதை ஊக்குவிக்கும் என பாஜகவினர் நம்புகின்றனர். கோவையில் வியாழக்கிழமை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியினர் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி, தனது கட்சியினரையும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது பாஜக.
நம்பிக்கையுடன் முன்பு பலமுறை தமிழகம் வந்த மோடிக்கு வெற்றி கைகூடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த முறை வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டதுதான் என்பது பாஜகவினரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
2021 பேரவைத் தேர்தலைப் பொருத்தவரை இருபெரும் திராவிட கட்சிகளும் இழப்பதற்கும், பெறுவதற்கும் நிறைய இருக்கலாம். ஆனால், பாஜகவைப் பொருத்தவரை அது இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால், பெறுவதற்கு நிறைய உள்ளது.
பாஜகவைப் பொருத்தவரை 2021 தேர்தல் என்பது பலமாகக் காலை ஊன்றுவதற்கு மட்டுமே. அதன் உண்மையான இலக்கு 2026 பேரவைத் தேர்தல்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


