/

2021 தேர்தலில் அதிமுக-தமாகா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்: காங்கிரஸ் இளைஞரணி தலைவர்

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-தமாகா கூட்டணி மிகப்பெரிய..

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:24 pm

ஜி. சுந்தர் ராஜன்

சிதம்பரம்: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-தமாகா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெற்ற முதல் கட்டமான ஊராட்சி தேர்தலில் தமாகா நியாயமான முறையில் ஜனநாயக முறையில் நடைபெற்றதற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமாகா மிக குறுகிய காலத்தில் எங்களது சின்னத்தை பெற்று எங்களுக்கு கூட்டணியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் சுமார் 75 சதவிகிதத்திற்கு மேல் வெற்றி பெற்றுள்ளோம். திமுக பொறுத்தவரையில் தொடக்கத்திலிருந்து இந்த தேர்தலை நடத்தவிடக்கூடாது என குறியாக இருந்தார்கள். அதையும் மீறி நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டு வெற்றிகரமாக தேர்தல் நடத்தினார்கள். திமுகவிற்கு எதிர்கட்சிகளுக்கும் கிடைத்தது 50 சதவீத வெற்றிதான். அதிமுக- தமாகா கூட்டணி பொறுத்தவரையில் புதிய தலைமை குறுகிய காலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு படிப்படியாக மக்கள் நம்பிக்கையை பெற்று இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோம். உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீகிதத்திற்கு மேல் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த நடைபெறவுள்ள நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலில் அதிமுக-தமாகா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும். குடியுரிமைச் சட்டத்தை பொறுத்தவரையில், திமுக, காங்கிரஸ் கட்சிகள் பொதுமக்களிடையே, குறிப்பாக சிறுபான்மை மக்களிடையே ஒரு தவறான செய்தியை கொண்டு சேர்க்கின்றனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியாவிலேயே வாழ்கின்ற சிறுபான்மையை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவாக தெரிவித்துள்ளது. இப்படி இருக்கும் போது எப்படியாவது மத்தியில் உள்ள அரசை குறை கூறுவதற்காகவும், குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும் திமுகவும், அதனுடைய தோழமை கட்சிகளும் தமிழகத்தில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசை வரவேற்கிறோம். ஆனால் இதில் குளறுபடி இல்லாமல் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜேஎன்யு பல தலைவர்களை உருவாக்கிய இடம். ஆனால் இப்போது பல தேச விரோதிகளை உருவாக்குகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது, காஷ்மீர் மக்களுக்கு எதிராக பேசுவது, அரசுக்கு எதிராக பேசுவது என ஜேஎன்யு பல்கலை மாணவர்கள் உருவாக்கி வருகிறார்கள். இதனை அங்குள்ள மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலுக்காக அரசியல்வாதிகள் அவர்களை பயன்படுத்தி வருகின்றார்கள். எனவே மாணவர்கள் படிப்பிலேயே கவனத்தை ஈடுபடுத்த வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் 1996-ம் எங்களது தலைவர் ஜி.கே.மூப்பனாருக்கு ஆதரவு அளித்தார். அப்போது மிகப்பெரிய அதிசயம், மாற்றம் நடந்தது. மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் எனவும், கமல்ஹாசனுடன் இணைந்து போட்டியிடுவேன் என கூறியுள்ளார். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகிறோம்  என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா தெரிவித்தார். பேட்டியின் போது தமாகா மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன், மாநில இளைஞரணி துணைத் தலைவர் ஆர்.அருணேஸ்வரன், மாவட்ட இளைஞரணி தலைவர் கே.ரஜினிகாந்த், சிதம்பரம் நகர தமாகா தலைவர் தில்லை ஆர்.மக்கீன், மூப்பனார் பேரவை நிறுவனர் ஜெமினி எம்.என்.ராதா, நிர்வாகிகள் எஸ்.கே.வைத்தி, ராஜாசம்பத்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.