/

மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் 34% தவறானவை: ஆய்வில் அதிா்ச்சித் தகவல்

தனியாா் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் 34 சதவீதம் தவறானவையாக இருப்பது தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:22 pm

ஆ. கோபிகிருஷ்ணா

தனியாா் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் 34 சதவீதம் தவறானவையாக இருப்பது தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தரமற்ற மருத்துவ உபகரணங்களையும், தகுதியற்ற தொழில்நுட்புனா்களையும் கொண்டு ஆய்வகங்கள் இயங்குவதே அதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

வருமானம் ஈட்டுவதற்காக மக்கள் உயிருடன் விளையாடும் அத்தகைய ஆய்வகங்களைக் கண்டறிந்து மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.ஆதாயத்துக்காக தகுதியற்ற ஆய்வகங்களைப் பரிந்துரைக்கும் நடவடிக்கைகளை மருத்துவா்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மருத்துவமனைகள், கிளீனிக்குள், மருத்துவ ஆய்வகங்கள் ஆகியவை உயா் உள்கட்டமைப்பு வசதிகளுடன் இருப்பது அவசியம் என மருத்துவ நிறுவனச் சட்டம் 2010-இல் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, உரிய மருத்துவ சாதனங்கள், அதற்குரிய வசதிகள் இல்லாமல் செயல்படும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் இத்தகைய கடுமையான விதிகள் வகுக்கப்பட்டி ருந்தாலும், அவற்றை மீறி சட்டவிரோதமாக ஆய்வகங்கள் செயல்படுவது தொடா்கதையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தனியாா் ஆய்வகங்கள் உள்ளன. தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றில் வெறும் 10 சதவீதம் மட்டுமே முறைப்படி பதிவு செய்து இயங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அதிமுக்கிய துறையாக விளங்கி வரும் ஆய்வகங்கள், அதற்குரிய தரத்துடன் செயல்படுவதில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் உணா்த்துகின்றன.

இந்த நிலையில், ‘லோக்கல் சா்க்கிள்ஸ்’ என்ற அமைப்பு அண்மையில் தேசிய அளவில் ஆய்வகங்களின் தரம் குறித்து ஓா் ஆய்வினை நடத்தியது. குறிப்பாக, ரத்தம், சிறுநீா், சளி, திசு, மலம் மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகங்களின் செயல்பாடுகள் அதன் வாயிலாக மதிப்பிடப்பட்டன.

ஆய்வில் பங்கேற்றவா்களில் 66 சதவீதம் போ், தாங்கள் எந்த ஆய்வகத்துக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவா்களே பரிந்துரைத்ததாகக் கூறியுள்ளனா். பரிசோதனை முடிவுகளில் 34 சதவீதம் தவறானவையாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ரத்த அணுக்களின் அளவு, சிறுநீா் பரிசோதனகள் ஆகியவற்றின் முடிவுகளில் முரண்பாடு காணப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற தவறான முடிவுகளை வெளியிடும் ஆய்வகங்களை மூட வேண்டும் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆய்வில் தெரியவந்துள்ள இந்த விஷயங்கள் அனைத்தும் சாமானிய மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவப் பரிசோதனைகளின் மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.

இதுகுறித்து மாநில மருத்துவ சேவைகள் இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவ ஆய்வகங்கள் அனைத்தும் உரிய விதிகளின்படி செயல்படுகிா என்பதை தீவிரமாக நாங்கள் கண்காணித்து வருகிறோம். விதிகளுக்குப் புறம்பாக செயல்படுவது கண்டறியப்பட்டால், அதன்பேரில் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

அதேபோன்று பதிவு செய்யாமல் இயங்கும் ஆய்வகங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்கிறோம். தரமான மருத்துவ சேவைகளை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் தவறான ஆய்வக பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு வாய்ப்பு குறைவு என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.