/

20 ஆண்டுகளாக செயல்படாத பேருந்து நிலையத்தைத் திறக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் பாழாகிக் கொண்டிருக்கும் புதிய பேருந்து நிலையத்தை திறக்கக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News image
கூத்தாநல்லூரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாத பேருந்து நிலையம்
Updated On :27 ஜனவரி 2024, 6:04 pm

சோ.தெஷ்ணாமூா்த்தி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படாமல் பாழாகிக் கொண்டிருக்கும் புதிய பேருந்து நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால், பேருந்து நிலையத்தைத் திறக்கக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலையில் அமைந்துள்ளது புதிய பேருந்து நிலையம். இந்தப் பேருந்து நிலையம் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 75 ஆவது வயது, பவள விழாவை அடுத்து 1998ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 10ஆம் தேதி, அப்போதைய மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில், நகராட்சித் தலைவர் பொன்னுச்சாமி முன்னிலையில், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் கோ.சி.மணியால் திறக்கப்பட்டது. 

இரண்டு ஏக்கர் பரப்பளவில், இந்தப் பேருந்து நிலையத்தில், 14 கடைகளும், கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டன. பேருந்து நிலையம் தொடங்கப்பட்டு, ஓரிரு  மாதங்களே பேருந்து நிலையமாகச் செயல்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன் பிறகு, தொடர்ந்து பேருந்து நிலையம் செயல்படாமல் பாழாகிக் கொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் மதுப் பிரியர்களுக்கு பாராகவும், பகல் நேரங்களில் சீட்டு விளையாடுவதற்குரிய காற்றோட்ட இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

Story image

இது குறித்து, திமுக நகரச் செயலாளர் எஸ்.எம்.காதர் உசேன் கூறியது, 

புதிய பேருந்து நிலையத்தைத் திறக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கூத்தாநல்லூர் நகராட்சி மாநிலத்திலேயே மூன்றாவது சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதும் பெற்றுள்ளது. ஆனால், இங்குப் பல ஆண்டுகளாகப் பேருந்து நிலையம் செயல்படாமலேயே உள்ளது என்றார்.

இது குறித்து, சமூக ஊடகப் பிரிவு திருவாரூர் சட்டப் பேரவை பொறுப்பாளர் எஸ்.எம்.சமீர் கூறியது, 

புதிய பேருந்து நிலையத்தைப் புதுப்பித்து, கூத்தாநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால், கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு புதிய பேருந்துகள் இயக்க வேண்டும். இங்கிருந்து பேருந்துகளை இயக்கும் போது, நகராட்சிக்கும் வரி மூலம், வருமானம் வரும். 

தற்போது, ஒரு நாளைக்கு கூத்தாநல்லூர் வழியாக குறைந்தது 100 பேருந்துகள் தினமும் சென்று கொண்டிருக்கிறது. நகராட்சி எந்தவித வரியும் வாங்குவதில்லை. கால தாமதப்படுத்தாமல் உடனே, பேருந்து நிலையத்தை புதுப்பித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார். 

தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவதாஸ் கூறியது, 

மேலும், புதிய பேருந்து நிலையத்திற்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என, மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.சந்திரசேகரன் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில், சாலையில் மணலுடன் கூடிய டிரம்கள் வைக்கப்பட்டிருந்தன. கூத்தாநல்லூருக்கு சின்ன சிங்கப்பூர் என்ற பெயர்தான் உள்ளது. இங்குப் பேருந்து நிலையமே இயங்கவில்லை. இந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் பழுதடைந்து  வீணாகிப் போய்க் கொண்டிருக்கிறது. 

தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டும், ஜல்லிகள், மணல்கள் கொட்டுவதற்கும், சனிக்கிழமைகளில் வாரச்சந்தைக்கும்தான் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. முக்கியமாக சமூக விரோதிகளின் அடைக்கலமாகவும், புகழிடமாகவும் உள்ளன. தேர்தல் காலம் நெருங்குவதால் உடனே, இந்த பேருந்து நிலையத்தைப் பழுது பார்த்து, பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றார். 

இதுகுறித்து, நகராட்சி ஆணையர் ஆர்.லதா கூறியது. 

புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில், அதற்கானப் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.