மருத்துவர்களும், செவிலியர்களும் மறுபிறவி கொடுத்துள்ளனர்: கரோனா தொற்றில் குணமடைந்த இளைஞர்
மருத்துவர்களும், செவிலியர்களும் உயிரைப் பணயம் வைத்துப் போராடி அன்புடனும், அக்கறையுடனும்..


ஈரோடு: மருத்துவர்களும், செவிலியர்களும் உயிரைப் பணயம் வைத்துப் போராடி அன்புடனும், அக்கறையுடனும் அளித்த சிகிச்சையால் மறுபிறவி எடுத்துள்ளேன் என்கிறார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்.
கடந்த 10ஆம் தேதி வீடு திரும்பிய நிலையில் தன்னால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சொந்த ஊரிலும் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் அந்த இளைஞர். உறவினர்களின் விசாரிப்புகளை விரும்பாத நிலையில் 20 நாட்களுக்கும் மேலாக செல்லிட பேசியை அணைத்துவைத்திருந்த அந்த இளைஞர் கடந்த 2 நாட்களாக, நண்பர்களிடம் செல்லிட பேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் நம்மிடம் செல்லிட பேசியில் பேசியதாவது:
டிப்ளோமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள எனக்கு இப்போது வயது 24. ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தேன். விவசாயத்தில் பெற்றோருக்கு போதிய வருவாய் இல்லாத நிலையில், இங்கு நான் வாங்கிய ஊதியமும் மிகக்குறைவாக இருந்ததால் வெளிநாடு சென்று வேலை செய்து சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில், வேலை தேடி கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி துபாய்க்குச் சென்றேன். அங்கு ஒரு நிறுவனத்தில் வேலையும் கிடைத்துவிட்டது. ஆனால் கரோனா தொற்று பிரச்னை காரணமாக பணியாளருக்கான விசா கிடைக்கவில்லை. இதனால் ஊருக்குத் திரும்ப முடிவு செய்து திருச்சிக்கு வரும் நேரடி விமானத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து மார்ச் 20 ஆம் தேதி அங்கு இருந்து புறப்படத் தயாரானேன்.
அப்போது தான் கரோனா நோய்த் தொற்று எனக்கு வந்துவிட்டது. ஆரம்பத்தில் லேசான தொண்டைவலி இருந்தது. தொடர்ந்து சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவு இருந்தது. இதனால் பயந்துபோய், துபாயிலுள்ள மருத்துவரிடம் காண்பித்ததில் அவர் கொடுத்த மருந்துகளைச் சாப்பிட்டதும் உடல்நிலை சரியாகிவிட்டது.
தொடர்ந்து ஊடகங்களில் கரோனா குறித்த செய்திகள் பார்த்தேன். அதனால், ஊருக்குப் போனால், என்னால் மற்றவர்களுக்குப் பிரச்னை வந்துவிடக்கூடாது என்று முடிவு செய்தேன். அதையடுத்து துபாயிலிருந்து ஊருக்குத் திரும்பியதும், திருச்சி விமான நிலையத்திலிருந்த மருத்துவக் குழுவிடம் எனக்கு இருந்த அறிகுறிகளைச் சொன்னேன். அதையடுத்து கடந்த 21ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு எனக்கு அடுத்தடுத்த பரிசோதனைகளில் கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
சிகிச்சையில் 20 நாள்கள் மருத்துவமனையில் இருந்தேன். திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் என்னை மிகவும் நன்றாகக் கவனித்துக் கொண்டனர். மருத்துவர்கள் சொன்ன அறிவுரைகளை அப்படியே கடைப்பிடித்தேன். மருத்துவமனையில் இருந்தவரை துளியும் கவலைப்படவில்லை. மருத்துவமனையில் நான் தனியாகத்தான் இருந்தேன். ஆனால் அடுத்தடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் நான் தங்கியிருந்த இடத்துக்குச் சுழற்சியாக வந்துகொண்டே இருந்ததால் நான் ஒருபோதும் தனிமையை உணரவில்லை. உறவினர்களின் விசாரிப்புகளை விரும்பாததால், செல்லிட பேசியை அணைத்துவைத்துவிட்டேன். தொடர்ந்து செய்தித்தாள்களை வாசிப்பேன்.
உயிரைப் பணயம் வைத்து எனக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் இப்போதும் கூட செல்லிட பேசியில் தொடர்புகொண்டு எனது நலம் விசாரித்து வருகின்றனர். அவர்களின் அன்பும், அக்கறையையும் சொல்ல வார்த்தைகளே இல்லை.
எனக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டபோது எனது குடும்பத்தார் கொஞ்சம் பயந்துவிட்டார்கள். ஆனால் எனது நண்பர்களோ, உனக்கு ஒன்றும் இல்லை, சீக்கிரம் குணமாகிவிடும் என ஊக்கமளித்தார்கள். அந்த பேச்சு எனக்குப் பெரும்பலமாக இருந்தது. சிகிச்சையில் இருந்தபோது, முதல் இரண்டு பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்தது. அதனால் எனது உடல்நிலையிலும் சிக்கல் இருந்தது. சூழலை உணர்ந்த மருத்துவர்கள் வழக்கமான மருந்துகளை மாற்றி வேறு மருந்துகளைக் கொடுத்து முயன்றார்கள். அதன் விளைவாக அடுத்த மூன்று பரிசோதனைகளில் நான் விரைவில் குணமடைந்தேன். ஊருக்குப் புறப்படும்போது எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் எல்லோரும் கைதட்டி என்னை அனுப்பி வைத்தனர். அன்றைய நாள் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அதை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை.
கரோனா வைரஸ் எப்படிப் பரவும், அதன் பாதிப்பு என்ன என்பது குறித்து நமக்குத் தெரியவில்லை. அதனால் பலர் அலட்சியமாக இருக்கிறார்கள். நமது உடம்பைச் சரி செய்ய வேண்டிய அக்கறையும் கடமையும் நமக்குத்தான் இருக்கிறது. ஆனால் நமது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் அவர்களின் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம். எனக்கும் வெளி உலகத்தைப் பார்க்க ஆசை தான், ஆனால் வரும் 24 ஆம் தேதி மீண்டும் ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்த பிறகு, நலமுடன் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் உறுதி செய்த பிறகு தான் குடும்ப உறுப்பினர்களையே சந்திப்பேன் என்கிறார்
மறுபிறவி எடுத்துள்ள இளைஞர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...