நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

முடங்கிய ஈரோடு ஜவுளிச் சந்தை: தவிக்கும் சிறு வியாபாரிகள்

ஊரடங்கு காரணமாக கடந்த 20 நாட்களாக ஈரோடு கனி ஜவுளிச்சந்தை முற்றிலும் முடங்கியுள்ளதால்..

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:24 pm

கே.விஜயபாஸ்கா்

ஈரோடு: ஊரடங்கு காரணமாக கடந்த 20 நாட்களாக ஈரோடு கனி ஜவுளிச்சந்தை முற்றிலும் முடங்கியுள்ளதால், சுமார் 1,000 சிறு ஜவுளி வியாபாரிகள் குடும்பத் தேவைக்குக்கூடப் பணம் இல்லாமல் பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நெசவு மற்றும் பின்னலாடை துறைக்குப் பெயர் பெற்ற கொங்கு மண்டலத்தின், மிக முக்கிய வியாபார மையமாக ஈரோடு கனி ஜவுளிச்சந்தை உள்ளது. தென் மாநிலங்களைச் சேர்ந்த சிறு ஜவுளி வியாபாரிகளின் மிக முக்கியக் கொள்முதல் தளமாக விளங்குகிறது கனி மார்க்கெட். பிறந்த குழந்தைக்கு உடுத்தும் மெல்லிய உடை முதல், பெரியவர்கள் அணியும் வேட்டி, சேலைகள் வரை அனைத்தும் கனி மார்க்கெட்டில் கிடைக்கும். 

கனி மார்க்கெட்டில், தினசரி கடைகள் மற்றும் வாரச் சந்தை கடைகள் என  இரண்டு வகையான தொழில் நடைமுறைகள் இருக்கின்றன. தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தினசரி கடைகள் இயங்கும். வாரம் ஒருமுறை திங்கள்கிழமை இரவு வாரச் சந்தை கூடுகிறது. இந்தச் சந்தை இரவு 9 மணிக்கு மேல் தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும்.

திருப்பூர், கரூர் பகுதிகளிலிருந்து பின்னலாடைகள், குமாரபாளையத்திலிருந்து லுங்கிகள், பவானியிலிருந்து கம்பளி வகைகள், சென்னி மலையிலிருந்து பெட்ஷீட் வகைகள், சேலம் சுற்றுவட்டாரத்திலிருந்து துண்டுகள், மேலும் குஜராத், மும்பை, கல்கத்தா, சூரத் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி ரகங்கள் என அனைத்தும் கனி மார்க்கெட்டில் கிடைக்கும்.

இதனால் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த சிறு ஜவுளி வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான ஜவுளி ரகங்களைக் கொள்முதல் செய்யத் தேர்ந்தெடுக்கும் முக்கிய இடமாகக் கனி மார்க்கெட் உள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதமாக ஈரோடு ஜவுளிச்சந்தை முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. இதனால் சிறு வியாபாரிகள் பலர் குடும்பத் தேவைகளைக் கூட சமாளிக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கனி மார்க்கெட் தினசரி வியாபாரிகள் சங்கத் தலைவர் நூர்சேட் கூறியதாவது:

கனி மார்க்கெட்டில் வாரச் சந்தை வியாபாரிகளுக்கு 740 கடைகளும், தினசரி வியாபாரிகளுக்கு 360 கடைகளும் உள்ளன. கனி மார்க்கெட் என்றால் தமிழகம் முழுவதுமுள்ள ஜவுளி வியாபாரிகளின் மத்தியில் நல்ல அபிப்பிராயம் உள்ளது. 500-க்கும் மேற்பட்ட கடைகளில் உற்பத்தியாளர்களே தங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றனர்.

சாதாரணமாக வாரச்சந்தையன்று நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.50 முதல் 75 லட்சம் வரை இங்கு வியாபாரம் நடக்கும். மற்ற நாட்களில் ரூ.15 முதல் ரூ.20 லட்சம் வரை வியாபாரம் இருக்கும்.  கடந்த மாதம் 22 ஆம் தேதி மக்கள் ஊரடங்கு பிறக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த 20 நாட்களாக 3 வாரச்சந்தைகள் மற்றும் தினசரி சந்தை வியாபாரம் முடங்கியுள்ளது. கடந்த 20 நாட்களில் மொத்தம் ரூ.7 கோடி அளவுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

சந்தையை நம்பி சொந்த தறியில் வேட்டி, துண்டு, சேலை போன்றவற்றை நெய்து விற்பனைக்குக் கொண்டுவரும் நெசவாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இப்போது குடும்பத் தேவைக்குக் கூட பணம் இல்லாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வாரம்தோறும் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை லாபம் ஈட்டும் இந்த வியாபாரிகள் இப்போது வீட்டிற்கு அரிசி, பருப்பு வாங்கக் கூட பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

பனியன் ஆடைகள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றை வெளியில் கொள்முதல் செய்தி விற்றபிறகு உற்பத்தியாளர்களுக்குப் பணம் கொடுக்கும் வியாபாரிகள் பலரும் கடந்த ஒரு மாதமாகத் தவித்து வருகின்றனர். ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் துணி, கூலி உள்ளிட்ட தேவைகளுக்கு வியாபாரிகளிடம் பணம் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளனர் என்றார்.

கோயில் திருவிழாக்களை நம்பி ஆடை தயாரித்தவர்களுக்கு இழப்பு:

கனி மார்க்கெட் வாரச் சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.செல்வராஜ் கூறியதாவது: கடந்த 35 ஆண்டுகளாக நாங்கள் வாரச் சந்தையை நடத்துகிறோம். ஆனால் இப்போதுள்ள நெருக்கடி எப்போதும் ஏற்பட்டதில்லை. இப்போது செயல்பட்டுவரும் ஜவுளிச்சந்தை முழுவதுமாக இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையிலும், வாரச்சந்தை நாட்களில் வெயில், மழையிலும் சாலை ஓரத்தில் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த 20 நாட்களாக தொழில் முற்றிலுமாக முடங்கிக் கிடப்பதால் குடும்பத் தேவைக்கே பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் உற்பத்தியாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கோடைக் கால ஆடை உற்பத்தியைத் தொடங்கி ஆடைகளைத் தயாரித்து இருப்பு வைத்துள்ளனர். கடந்த மாதம் 10 ஆம் தேதிக்குப் பிறகு ஆடைகளை வாங்கிய வியாபாரிகள், உற்பத்தியாளர்களுக்குப் பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சமயபுரம், பண்ணாரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான அம்மன் கோயில்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் திருவிழா நடக்கும். இதற்காக மஞ்சள் நிற வேட்டி, சட்டை, சேலை, சிறுவர், சிறுமியருக்கான மஞ்சள் நிற ஆடைகள் என மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சுமார் ரூ.3  கோடி முதல் ரூ.5 கோடி அளவுக்கு இங்கு விற்பனை இருக்கும்.

இந்த ஆண்டும் இந்த ஆடைகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவால் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில்,  சுமார் ரூ. 2கோடி மதிப்பிலான ஆடைகள் கடந்த இரண்டு மாதங்களாகக் கிடங்குகளில் தேங்கிக்கிடக்கின்றன. 

மஞ்சள் வண்ணம் ஏற்றப்பட்ட ஆடைகள் 4 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால், ஓட்டை விழுந்து வீணாகிவிடும். இப்போதுள்ள நிலையில் அம்மன் பண்டிகைகள் இன்னும் 3 மாதங்களுக்கு நடக்க வாய்ப்பில்லாத நிலை தான் இருக்கிறது. இதனால் மஞ்சள் ஆடை உற்பத்தியாளர்கள் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு 14 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தொடர்ந்து கரோனா தொற்று பரவல் இல்லாத மாவட்டங்களுக்கு மட்டுமாவது ஊரடங்கை முழுமையாகத் தளர்த்த மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும். இதன்மூலம் ஈரோடு மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் அனைத்து விதமான பொருட்களின் விற்பனையும் தொடங்கும். இதன் மூலம் வியாபாரிகள் குடும்பத் தேவை அளவுக்காவது பொருள் ஈட்டிக்கொள்ள முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.