தற்போது அணையின் 106.5 ஆவது அடி உயரத்தில் உள்ள சுரங்கப் பாதை வழியாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர்எடுக்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை 12 அடி அகலமும், 7.5 அடி உயரமும் கொண்டது. பருவ மழைக் காலங்களில் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயரும்போது தண்ணீரை விரைவாகவும், அதிகமாகவும் வெளியேற்ற இந்த சுரங்கப் பாதை போதுமானது அல்ல. எனவே, அணையின் நீர்மட்டம் உயரும்போது பாதிப்பு ஏற்படலாம் என்ற கேரள அரசின் அச்சத்தை தவிர்க்கவும், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், நிலஅளவை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து இரண்டாவது சுரங்கப் பாதை ஒன்றை அமைக்கலாம். அந்த சுரங்கப் பாதை அணையின் 50 ஆவது அடியில் அமையுமானால், அணையிலிருந்து அதிகமான தண்ணீரை வெளியேற்ற முடியும் என்பதோடு அந்த தண்ணீரால் தமிழகம் கூடுதலாக பயன் பெற முடியும். எனவே, அதற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும். இது, புதிய அணை கட்டுவதற்கான செலவை ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கலாம். அதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணியை தமிழக அரசு ஓராண்டு காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு சாதகமான இந்த தீர்ப்பு குறித்து சில ஊடகங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் தமிழக அரசு இதில் கவனம் செலுத்தாதது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.