திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இடுக்கி ஏலக்காய் தோட்டங்களில் பணிகள் முடக்கம்: 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மழை மற்றும் வறட்சியால் ஏலக்காய் தோட்டங்களில் கடந்த 6 மாதங்களாக பணிகள் முடங்கியுள்ளதால், 30 ஆயிரம் தொழிலாளர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:01 am

கோ.ராஜன்


கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மழை மற்றும் வறட்சியால் ஏலக்காய் தோட்டங்களில் கடந்த 6 மாதங்களாக பணிகள் முடங்கியுள்ளதால், 30 ஆயிரம் தொழிலாளர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். சந்தைக்கு ஏலக்காய் வரத்து குறைந்து  நறுமணப் பொருள் வாரியம்(ஸ்பைஸஸ் போர்டு) சார்பில் நாளொன்றுக்கு ரூ.20 கோடி வரை நடைபெறும் மின்னணு ஏல வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இம் மாவட்டத்தில் கடந்த 2018, ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்த மழையில் ஏலக்காய் தோட்டங்கள் தண்ணீரில் முழ்கி செடிகள் உடைந்தும், அழுகியும் சேதமடைந்தன. இதையடுத்து, அங்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேல் கடும் வெயில் மற்றும் வறட்சி நிலவி வருவதால், ஏலத் தோட்டங்களில் தண்ணீரின்றி செடிகளை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். 
ரூ.20 கோடி வர்த்தம் சுணக்கம்:
மழை மற்றும் கடும் வறட்சியால் கடந்த 8 மாதங்களுக்கும் மேல் ஏலக்காய் தோட்டங்களில் ஏலக்காய் அறுவடை நடைபெறவில்லை. இதனால், கடந்த 2019, ஜனவரி மாதம் முதல் இடுக்கி மாவட்டத்தில் புத்தடி, தேனி மாவட்டத்தில்  போடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள் வாரியம் கட்டுப்பாட்டில், தனியார் ஏலக்காய் ஏல வர்த்தக நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் மின்னணு ஏல வர்த்தகத்திற்கு ஏலக்காய் வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது.
ஏலக்காய் தோட்டங்களில் மகசூல் 100 சதவீதமாக இருக்கும் நிலையில், நாளொன்றுக்கு 1.40 லட்சம் கிலோ வரை ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ. 20 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். ஆனால், போடியில் மே 29-ம் தேதி கிரீன் ஹவுஸ் கார்டமம் மார்க்கெட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் நடைபெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில் மிகக் குறைந்த அளவில் மொத்தம் 6,389 கிலோ ஏலக்காய் மட்டுமே விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டு, சராசரி ரகம் கிலோ ரூ.2,331.89-க்கு விற்பனையானது.
மின்னணு ஏல வர்த்தகத்திற்கு விவசாயிகள் ஏலக்காய்களை விற்பனைக்கு கொண்டு வராத நிலையில், வியாபாரிகள் தாங்கள் இருப்பு வைத்துள்ள ஏலக்காய்களை விற்பனைக்கு பதிவு செய்து, சந்தை விலையை நிர்ணயித்து வருகின்றனர். ஏல வர்த்தகத்திற்கு போதிய அளவு ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்படாத நிலையில், மின்னணு ஏல வர்த்தகத்தை நடத்துவதால் ஏற்படும் செலவு, சிரமம் ஆகியவற்றை கருதி ஏல வர்த்தகத்தை நிறுத்தி வைப்பதற்கு  தனியார் ஏலக்காய் விற்பனை நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏல வர்த்தகத்தை நிறுத்தி வைத்தால், விற்பனை செய்த ஏலக்காய்களுக்கு உரிய தொகையை வியாபாரிகளிடமிருந்து வசூலிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மின்னணு ஏல வர்த்தகத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது என்று தனியார் ஏலக்காய் விற்பனை நிறுவன அலுவலர்கள் கூறுகின்றனர். 
தொழிலாளர்கள் வேலை இழப்பு: 
இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். மேலும், தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், தேவாரம், போடி ஆகிய பகுதிகளில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தினமும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு ஜீப்களில் சென்று வேலை செய்து விட்டு திரும்புகின்றனர்.
ஏலக்காய் தோட்டங்களில் கடந்த 2018, ஜூலை மாதம் தொடங்கி தற்போது வரை  பணிகள் முடங்கியுள்ளதால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தங்கியிருந்து தோட்ட வேலை செய்து வந்த தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், வேலை வாய்ப்பு இல்லாததால் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுமா? : 
இடுக்கி மாவட்டத்தில், வரும் ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கினாலும், ஏலக்காய் தோட்டங்களில் பாதிப்பில் இருந்து தப்பியுள்ள 20 சதவீதம் ஏலச் செடிகளில், சரங்கள் பூப்பிடித்து காய்த்து அறுவடை பருவத்திற்கு வர செப்டம்பர் மாதம் வரை ஆகும். மழையால் செடிகள் தண்ணீரில் முழ்கி அழுகியும், முறிந்தும் விழுந்த இடங்களிலும், வறட்சியால் செடிகள் கருகிய இடங்களிலும் நாற்றுகளை மறு நடவு செய்து, மகசூலுக்கு கொண்டு வர 2 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால், மறு நடவு செய்வதற்கு ஏலக்காய் நாற்றுகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கம்பத்தைச் சேர்ந்த ஏலக்காய் விவசாயி செ.பகவதிராஜ் கூறியது: இடுக்கியில் இயற்கைச் சீற்றம் மற்றும் வறட்சி பாதிப்பு ஏற்படும் காலங்களில், ஏலக்காய் வாரியம் செயல்பாட்டில் இருந்த போது விவசாயிகளுக்கு மறுநடவு செய்வதற்கான நாற்றுகள், இடு பொருள்கள் மற்றும் நிவாரணம் வழங்கப்பட்டது. ஏலக்காய் வாரியம் நறுமணப் பொருள் வாரியத்துடன் சேர்க்கப்பட்ட பின்பு இது போன்ற நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை.
ஏலக்காய் தோட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், மறு நடவு செய்வதற்கு தேவையான நாற்றுகள் மற்றும் இடு பொருள்களை தட்டுப்பாடின்றி, மானிய விலையில் வழங்கவும் நறுமணப் பொருள் வாரியம் மற்றும் கேரள அரசு முன் வர வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.