/

குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம்: விவசாயிகள் ஏமாற்றம்

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தமிழக அரசின் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:28 am

ஜி. சுந்தர் ராஜன்

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தமிழக அரசின் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வந்தது. நிகழாண்டில் இந்தத் திட்டத்துக்கான அறிவிப்பை அரசு இதுவரை வெளியிடாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலர் பெ.ரவீந்திரன் கூறியதாவது: வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு நாற்றங்கால் பணி தொடங்கும். அதைத் தொடர்ந்து, தென்மேற்குப் பருவ மழை தொடங்கி, கர்நாடகம் மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்புப் பகுதியிலும், கேரளம் மாநிலத்தின் வயநாடு பகுதியிலும் பெய்யும் மழைநீர் மேட்டுர் அணை வழியாக டெல்டா பாசனப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும். இதன் மூலம், குறுவை சாகுபடி நடைபெற்று, சாம்பா சாகுபடி தொடர்வது வழக்கம். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக தென்மேற்குப் பருவ மழை தாமதமாகத் தொடங்குவதால், மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவதில்லை. மாறாக, மிகவும் தாமதமாகத் தண்ணீர் திறக்கப்படுவதால், வாய்க்கால் பாசனம் மூலம் போதிய தண்ணீர் கிடைக்காமல் குறுவை சாகுபடி பரப்பளவு படிப்படியாக குறைந்து விட்டது. குறிப்பாக, கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. நிகழாண்டும் சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை.
 கடந்த காலங்களில் தமிழக டெல்டா பாசனப் பகுதிகளில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி நடைபெறும். இது, 2012-ஆம் ஆண்டு சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கராக சரிந்தது. 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆழ்துளைக் குழாய் அமைத்த விவசாயிகள் மட்டும் நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை சாகுபடி செய்து வந்தனர். குறுவை சாகுபடியின் நோக்கம், அடுத்துவரும் சாம்பா சாகுபடிக்கு விதை நெல் பற்றாக்குறையைத் தவிர்ப்பதுதான்.
 எதிர்வரும் காலங்களில் குறுவை சாகுபடி பொய்த்துப்போனால், சாம்பா சாகுபடிக்கு விதைப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
 ஆழ்குழாய் மூலம் குறுவை சாகுபடி செய்து வந்த விவசாயிகளும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவிப்பதை உணர்ந்த தமிழக அரசு, குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது.
 இந்தத் திட்டம் மூலம் சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்கள், உயிர் உரங்கள், வெப்பத் தாக்கத்திலிருந்து பயிர்களைக் பாதுகாக்க ஜிப்சம், ஜிங்சல்பேட் போன்றவை வழங்கப்பட்டன. மேலும், கடந்த 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் தண்ணீரை பாதுகாப்பாக கொண்டு செல்ல கருப்பு குழாய்களும் வழங்கப்பட்டன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக கருப்பு குழாய்கள் விநியோகம் நிறுத்தப்பட்டு, இடுபொருள்கள் மட்டும் வழங்கப்பட்டன.
 குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் தங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்ததால் நிகழாண்டும் இந்தத் திட்டத்தை விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
 ஆனால், தமிழக அரசு அறிவிப்பு வெளியிடாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, குறுவை பயிர்களைப் பாதுகாக்க வசதியாக சிறப்பு தொகுப்புத் திட்டத்தை மாநில அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.