பாதுகாப்பு, போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியின்போது செல்லிடப்பேசியில் பேசும் காவலர்களைக் கண்காணிக்கும் பணியில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது. பணியின்போது செல்லிடப்பேசியில் பேசும் காவலர்களை உளவுத்துறைக் காவலர்கள் புகைப்படம், விடியோ எடுத்து வருகின்றனர்.
தமிழக காவல்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்புப் பணிக்கு அடுத்து பிரதான பணியாக தலைவர்கள் பாதுகாப்பு, போராட்டங்கள் பாதுகாப்பு, திருவிழா பாதுகாப்பு, போக்குவரத்தைச் சீர்படுத்தும் பணிகள் உள்ளன. இப்பணியில் போக்குவரத்து மற்றும் காவல் நிலைய போலீஸார் தவிர்த்து ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவலர் படையினர், அதிரடிப் படையினர், அதிவிரைவுப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நாட்டில் அதிக போராட்டங்கள் நடைபெறும் மாநிலங்களில் அண்மை ஆண்டுகளாக தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 20 ஆயிரம் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இப்போது சராசரியாக ஆண்டுக்கு 30 ஆயிரம் போராட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக 2 ஆயிரம் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
போராட்டப் பாதுகாப்புப் பணியில் அதிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் காவலர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். ஏனெனில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், முல்லைப் பெரியாறு அணை போராட்டம், சென்னை ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவற்றில் காவல்துறையினர் கவனக்குறைவாக செயல்பட்ட சமயத்தில் வன்முறை ஏற்பட்டு ஆயுதப் பிரயோகம் செய்ய வேண்டிய நிலைக்கு போலீஸார் தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் போக்குவரத்து சீர்படுத்தும் பணி, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவலர்கள், கவனக்குறைவாக இருப்பதாகவும், பணியில் அக்கறை இல்லாமல் இருப்பதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. மேலும் போராட்ட இடங்களில் நடைபெறும் சம்பவங்களை சில காவலர்கள் செல்லிடப்பேசி கேமரா மூலம் பதிவு செய்து புகைப்படங்களாகவும், விடியோ காட்சிகளாகவும் சமூக ஊடகங்களில் பதிவிடுவதால் பிரச்னை ஏற்படுவதாகவும், காவல்துறையைப் பற்றிய ரகசியத் தகவல்கள் வெளியே கசிவதாகவும் கூறப்படுகிறது.
டிஜிபி எச்சரிக்கை: இதன் அடிப்படையில் தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன், கடந்த நவம்பர் மாதம் 11-ஆம் தேதி இட்ட உத்தரவில், போக்குவரத்தைச் சீரமைக்கும் பணி, பாதுகாப்பு பணி ஆகியவற்றில் ஈடுபடும் காவலர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது, உதவி ஆய்வாளர் மற்றும் அதற்கு மேல்நிலையில் உள்ள அதிகாரிகள் பணியின் அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் செல்லிடப்பேசியைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த உத்தரவுக்கு பின்னரும், காவலர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்துவது தடுக்கப்படவில்லை.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல் செல்லிடப்பேசி பயன்படுத்தும் போலீஸாரின் செயல் வேதனை அளிப்பதாக கடந்த 22-ஆம் தேதி வருத்தம் தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக ஒரு அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் தமிழக உள்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து டிஜிபி ராஜேந்திரன், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைச் சீர்படுத்தும்பணியின்போது காவலர்கள் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தினால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 23-ஆம் தேதி எச்சரித்தார்.
உளவுத்துறை கண்காணிப்பு: உயர்நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் வகையில் பாதுகாப்பு, போக்குவரத்தைச் சீர்படுத்தும் பணியில் ஈடுபடும் காவலர்களைக் கண்டறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உளவுத்தகவல்களை சேகரித்துக் கொடுக்கும் தனிப்பிரிவு காவலர்கள், மாநகர காவல்துறையில் ஆணையருக்கு உளவுத்தகவல்களை சேகரித்துக் கொடுக்கும் நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் காவலர்களை கண்காணிப்பதோடு, பணியில் செல்லிடப்பேசியில் பேசும் காவலர்களை புகைப்படம், விடியோ எடுத்து தினமும் காவல் கண்காணிப்பாளர்களிடமும், காவல் ஆணையர்களிடமும் அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர்.
நடவடிக்கை தொடங்கியது: இதன் அடிப்படையில் சில மாவட்டங்களில் பணியின்போது செல்லிடப்பேசியில் பேசிய காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, சென்னையில் கடந்த 23-ஆம் தேதி முதல் 13 காவலர்கள் மீதும், விழுப்புரம் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்ட பாதுகாப்பு பணியின்போது செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்ததாக 5 காவலர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியில் காவலர்கள் சீருடையில் இருந்தபடி செல்லிடப்பேசியில் பேசும் புகைப்படம், விடியோ காட்சி இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்த நடவடிக்கையின் காரணமாக, பணியில் காவலர்கள் செல்லிடப்பேசியில் பேசுவது குறைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

