திருப்பூர்: பல்வேறு பிரச்னைகளால் தமிழகத்தில் உள்ள 2.5 லட்சம் சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இலவச மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற சலுகைகளை அரசு வழங்க வேண்டும் என்று சிற்பக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மாமல்லபுரம், திருப்பூர், பழனி, நாமக்கல் கூலிபட்டி, மதுரை உள்ளிட்ட இடங்களில் கற்களில் இருந்து கலைஞர்கள் சிலை வடிக்கின்றனர். இதில், திருப்பூர், மாமல்லபுரத்தில் வடிக்கப்படும் சுவாமி சிலைகள் இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் அதிகமாக அனுப்பப்படுகின்றன.
கல் சிற்பங்களில் கணபதி, முருகன், லட்சுமி, சரஸ்வதி, சிவன், விஷ்ணு போன்ற சுவாமி சிலைகள் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. 6 அங்குலம் முதல் 25 அடி வரையில் ஒரே கல்லில் இந்த சிலைகள் செதுக்கப்படுகின்றன.
இதில், சுற்றுலாத் தலமானமாமல்லபுரத்தில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட சிற்பக் கூடங்களில் 4 ஆயிரம் பேர், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி, அவிநாசியில் உள்ள 120 சிற்பக் கூடங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பிகள் வேலை செய்து வருகின்றனர். கற்களுக்கு உயிர் கொடுக்கும் இந்தக்
கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலரும் வணங்கும் கடவுள்களையை படைக்கும் இந்தக் கலைஞர்களின் வாரிசுகள் இந்தத் தொழிலில் ஈடுபட நாட்டம் காட்டுவதில்லை. சிற்பக் கலைஞர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாததே இதற்குக் காரணம்.
தற்போதைய கால கட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்னை, குறைவான ஊதியம், போதிய அளவு ஆர்டர்கள் இல்லாதது, கற்கள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளால் அழிவின் விழிம்பில் இத்தொழில் நிற்கிறது.
பொதுவாக வேறு தொழில்களைப்போல் இல்லாமல் சிற்பங்களைச் செதுக்க உடல் உழைப்பும், பார்வைத் திறனும் மிகவும் அவசியம். சாதாரண கற்களை தத்ரூபமாக வடிக்கும் திறமை கொண்ட சிற்பிகளின் எண்ணிக்கையும் நாளடைவில் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு படம் அல்லது உருவத்தைக் கண்ணில் பார்த்தாலே சிற்பமாக வடிக்கும் திறமை வேண்டும். அனைத்து சிலைகளையும் வடிக்கும் சிற்பியாக வரவேண்டும் என்றால் ஒரே கலைக் கூடத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாகவது பணி புரிந்தால் மட்டுமே சாத்தியம்.
ஆகவேதான், சிற்பக் கலைஞர்களின் வாரிசுகள் கூட இந்தத் தொழிலில் ஈடுபடுவதில்லை. இந்தக் கலையைக் கற்றுக்கொள்ளும் நபர்களுக்கு நாள்தோறும் ரூ.500க்குள்தான் ஊதியம். பின்னலாடைத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் இதைவிட இருமடங்கு ஊதியம் பெருகின்றனர். பணியின்போது ஏற்படும் உயிரிழப்புகள் இத்தொழிலுக்குப் பின்னடைவு.
கற்களை நகர்த்தும்போது விபத்து ஏற்படுவது, சிலைகளை வடிக்கும்போது துகள்கள் பட்டு கண் பார்வை இழத்தல் உள்ளிட்ட பல்வேறு சவால்களையும் இவர்கள் சந்திக்கின்றனர். ஆகவே, சிற்பக் கலைஞர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்று கோருகின்றனர். ஓய்வுபெற்ற சிற்பக் கலைஞர்கள் குறித்து கணக்கெடுப்பு தடத்த வேண்டும்:
ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபட முடியும் என்பதால், ஓய்வுக்குப் பிறகு சிற்பக் கலைஞர்களுக்கு எந்த வருமானம் இல்லாததால் பெரும்பாலானோர் இந்தத் தொழிலை விட்டுச் செல்கின்றனர். இக்கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.
அதே வேளையில், தற்போது நிலவி வரும் சுற்றுச்சூழல் பிரச்னை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் கெடுபிடிகள் காரணமாக இந்தத் தொழிலை நவீனப்படுத்த வேண்டியதும் அவசியமாகும். இந்தத் தொழில் பெரும்பாலும் திறந்தவெளியில் செய்யப்படுவதால் காற்றில் பரவும் துகள்களால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி, அவிநாசி சிற்பக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் சுமார் 2.5 லட்சம் சிற்பக் கலைஞர்கள் உள்ளனர். பல்வேறு பிரச்னைகளால் இளைய தலைமுறையினர் இந்தத் தொழிலில் ஈடுபடுவதில்லை. ஆகவே, பல்வேறு சலுகைகள் வழங்கினால் மட்டுமே பாரம்பரியம் மிக்க இந்தத் தொழிலை மீட்டெடுக்க முடியும்.
மேலும், சிற்பக் கலைஞர்களுக்குத் தமிழக அளவில் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் இல்லாததால் எங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை அரசிடம் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, தமிழகம் முழுவதிலும் உள்ள சிற்பக் கலைஞர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
தற்போதைய முக்கியப் பிரச்னை சுற்றுச்சூழல். குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய அளவிலான சிற்பக் கூட உரிமையாளர்களுக்கு இயந்திரங்கள் வாங்க தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். மேலும், சிற்பக் கலைஞர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு, தனி நல வாரியம், ஓய்வூதியம், கல்வி உதவித் தொகை போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கினால் இந்தத் தொழிலை மீட்டெடுப்பதுடன், அடுத்த தலைமுறையினரும் சிற்பத் தொழிலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்றார்.
மனிதர்களைப் படைக்கும் கடவுள்களை வடிவமைக்கும் வல்லமை படைத்த சிற்பக்கலைஞர்களின் வாழ்வு சிறக்க அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அரசு முன்வந்தால் அவர்களின் வாழ்வாதாரம் மேலும் சிறக்கும். முடிவு அரசின் கையில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

