இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: டிரம்ப் விளக்கம்!திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!உலகத் தாய்மொழி நாள்: தமிழே நீ வாழ்ந்திடு! - முதல்வர் மு.க. ஸ்டாலின்தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.2,080 அதிகரித்தது!
/

அனுமன் ஜயந்தி: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு  ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்

அனுமன் ஜயந்தியையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு, புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு, லட்சத்து 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:40 pm

எம்.மாரியப்பன்

நாமக்கல்: அனுமன் ஜயந்தியையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு, புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு, லட்சத்து 08 வடை மாலை சாத்துப்படி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி சுவாமியை தரிசித்து சென்றனர்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில், 18 அடி உயரத்தில் இரு கைகளை கூப்பியபடி ஆஞ்சனேயர் சுவாமி கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். இங்கு, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை, பௌர்ணமி நாள்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை திதியில், மூல நட்சத்திரத்தில் இங்கு ஜயந்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அதன்படி, நிகழாண்டுக்கான விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதனையொட்டி, கோயில் முழுவதும் பல வண்ண மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. திருச்சி கே.ஆர்.ரமேஷ் தலைமையிலான குழுவினர், கடந்த 5 நாள்களாக தயார் செய்திருந்த ஒரு லட்சத்து 08 வடை மாலை அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கு சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 5 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. காலை 11.30 மணி வரையில் வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சனேயர் அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில், நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும், வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு பூரண கும்ப அபிஷேகமும், சொர்ணாபிஷேகமும் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு சுவாமி தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஜயந்தியையொட்டி சுவாமியை தரிசிக்க நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதற்காக, இலவச தரிசனம் மற்றும் ரூ.20, ரூ.250 என்ற வகையில் கட்டண தரிசனத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதிகாலை முதலே பக்தர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி சுவாமியைத் தரிக்க காத்திருந்தனர். இரு சக்கர வாகனங்களை பூங்கா சாலையிலும், நான்கு சக்கர வாகனங்களை பொய்யேரிக் கரை பகுதியிலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணியில், 2 துணைக் கண்காணிப்பாளர்கள், 8 காவல் ஆய்வாளர்கள், 36 உதவி ஆய்வாளர்கள், மாவட்ட அளவிலான போலீஸார், ஊர்க்காவல் படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என 400 பேர் வரை ஈடுபட்டிருந்தனர்.

மேலும், கோயிலைச் சுற்றிலும் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. வடைமாலை அலங்காரத்தை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் பெரிய அளவிலான விடியோ திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நான்கு திருமண மண்டபங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நடமாடும் குடிநீர் மற்றும் கழிவறைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ சேவை மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. கோயிலில், பக்தர்கள் அனைவருக்கும் சுவாமிக்கு சாத்தப்பட்ட வடைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. தமிழக சமூக நலத்துறை அமைச்சர் வெ.சரோஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் தரிசித்து சென்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் பெ.ரமேஷ், தக்கார் தமிழரசு மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.