மும்பையைத் தொடர்ந்து பெங்களூரிலும் தமிழ்நாடு இல்லம்: கர்நாடக தமிழர்கள் எதிர்பார்ப்பு
மும்பையை தொடர்ந்து பெங்களூரிலும் தமிழ்நாடு இல்லம் அமைக்க தமிழக அரசு முன்வருமா? என்ற எதிர்பார்ப்பு கர்நாடகத் தமிழர்களிடையே காணப்படுகிறது.


பெங்களூரு: மும்பையை தொடர்ந்து பெங்களூரிலும் தமிழ்நாடு இல்லம் அமைக்க தமிழக அரசு முன்வருமா? என்ற எதிர்பார்ப்பு கர்நாடகத் தமிழர்களிடையே காணப்படுகிறது.
இந்தியாவுக்கு வெளியே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் 10 கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவில் தாய் தமிழகத்திற்கு வெளியே கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், தில்லி, மேற்கு வங்கம், குஜராத், கோவா, புதுச்சேரி போன்ற 28 மாநிலங்களில் தமிழர்கள் நிலை கொண்டுள்ளனர். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 6,90,26,881 தமிழர்கள் இருக்கிறார்கள். இதில் தமிழகத்தில் வாழும் 6,37,53,997 தமிழர்கள் அடக்கம்.
தமிழகத்திற்கு வெளியே இந்தியாவின் பிற மாநிலங்களில் 52 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருவதாக 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. தமிழகத்திற்கு வெளியே தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வருவது கர்நாடகத்தில் தான். 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கர்நாடகத்தில் 21.10 லட்சம் தமிழர்கள் நிலைத்திருப்பதாகத் தெரிவிக்கிறது. கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம்: பூர்வகுடிகள், சோழர் கால குடியேற்றக்குடிகள், தற்கால குடியேற்றங்கள். சுதந்திரத்திற்கு முந்தைய கர்நாடக நிலப் பகுதியில் தமிழர்கள் பூர்வகுடிகளாக வாழ்ந்து வந்துள்ளதும், சோழர் காலத்தில் குடியேறியதும் வரலாற்று ஏடுகளில் இருந்து தெரியவந்துள்ளது. சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் வாழ்வாதாரத்திற்காக தற்போதைய தமிழக நிலப்பரப்பில் இருந்து கர்நாடகத்தில் குடியேறிய தமிழர்களும் இருக்கிறார்கள்.
கர்நாடகத்தில் பெங்களூரு , கோலார், ராமநகரம், சாமராஜ்நகர், சிவமொக்கா, தாவணகெரே உள்ளிட்ட பல மாவட்டங்களில் தமிழர்கள் பரவலாக வசித்து வருகிறார்கள். பெங்களூரில் அல்சூர், கண்டோன்மெண்ட், சிவாஜிநகர், பென்சன் டவுன், காக்ஸ் டவுன், பிரேசர் டவுன், ரிச்சர்ட்ஸ் டவுன், ஆஸ்டின் டவுன், ரிச்மன்ட் டவுன், மர்பிடவுன் உள்ளிட்ட பகுதியில் இன்றும் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள். உண்மையில் கர்நாடகத்தில் தற்போது 90 லட்சம் தமிழர்கள் வசித்து வருவதாகக் கருதப்படுகிறது. பெங்களூரில் மட்டும் 35 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இங்கிருக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் இன்றைக்கும் தமிழகத்துடன் தொடர்ந்து சம்பந்தம் வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள சொந்த ஊரில் வீடு கட்டுகிறார்கள், திருமணங்களை சொந்த ஊரில் நடத்துகிறார்கள். ஊர் சொந்தங்களை அடிக்கடி சென்று பார்த்து வருகிறார்கள். ஊர்த் திருவிழாக்களில் தவறாமல் கலந்துகொள்கிறார்கள். மத்திய, மாநில அரசுப் பணிகளில் பணியாற்றும் தமிழர்கள், பணி நிறைவில் தமிழகத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு நிரந்தரமாக திரும்பி விடுகிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் வசித்தாலும் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, சமயம் சார் வேர்களை அற்றுவிடாமல் தொடர்ந்து உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். தாய்மொழியாம் தமிழை குடும்பங்களில் தவறாமல் பேசி வருகிறார்கள். தமிழ் நாளிதழ்களைப் படிக்கத் தவறுவதில்லை. தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் பொங்கல் போன்ற திருவிழாக்களை ஆர்வத்துடன் கொண்டாடி வருகிறார்கள். ஆங்காங்கே தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகளை அமைத்து தமது குழந்தைகளுக்கு தமிழ்மொழியைக் கற்றுத் தருகிறார்கள். தமிழர் கலை, இலக்கியங்களோடு, பண்பாட்டு விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கும் கைமாற்றி வந்திருக்கிறார்கள். தமிழர்களின் வாழ்விடங்கள் சின்னஞ்சிறு தமிழகமாகவே காட்சியளிக்கின்றன. அந்தவகையில், தாய் மண்ணாம் தமிழகத்தின் உறவை பாசப் பிணைப்பால் கட்டிக் காப்பாற்றி வருகிறார்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களோடு, தாய் தமிழக அரசு எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை என்ற குறைபாடு நீண்ட காலமாக நிலவி வருகிறது. இந்தியாவுக்கு வெளியே வாழும் தமிழர்களை ஒருங்கிணைப்பதிலும், தமிழ்மொழியைக் கற்பிப்பதிலும் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அதீத அக்கறை செலுத்தி வந்தபோதிலும், தமிழகத்திற்கு வெளியே கர்நாடகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவரும் தமிழர்களை ஒருங்கிணைப்பதிலும், தமிழ்க் கல்வியை அளிப்பதிலும் தமிழக அரசு போதிய அக்கறை செலுத்தவில்லை என்ற ஆதங்கம் பரவலாக உள்ளது.
கர்நாடகத்திற்கு வெளியே வசிக்கும் கன்னடர்களின் நலன் காக்க கர்நாடக அரசு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளது. கன்னட வளர்ச்சி ஆணையம் என்ற அரசியலமைப்புச் சட்ட சார் அமைப்பைத் தொடங்கி, உலகெங்கும் வாழும் கன்னடர்களுக்கு கன்னடக் கல்வியை வழங்கும் பெரும் பணியைச் செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவின் பிற மாநிலங்களில் பள்ளிப் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை கன்னடமொழியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை போன்றவற்றை வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறது. பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சிபெறும் கன்னட மாணவர்களுக்கு கல்வி உதவியை வழங்கி கெüரவித்துவருகிறது. ஆங்காங்கே கன்னட மொழி விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துகிறது. வெளி மாநில மக்களோடு இயைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் மொழி நல்லிணக்கக் கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்தப்படுகின்றன.
கன்னட மொழியைக் கற்றுத்தரும் தனியார் அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்து வருகின்றன. கன்னடப் பாடநூல்கள், குறிப்பேடுகள் உள்ளிட்ட கன்னடக் கல்விக்குத் தேவையான உதவிகளையும் கன்னட வளர்ச்சி ஆணையம் செய்து தருகிறது.
அதேபோன்று, வெளி மாநிலத்தில் வாழும் தமிழர்கள், தொடர்ந்து தமிழர்களாக நிலைத்திருக்க தமிழ் மொழியை கற்றுத்தருவது மிகவும் அவசியமாகும். இதைச் செய்யத் தவறினால், தமிழ் எழுத, பேச, படிக்கத் தெரியாத தமிழ் சமூகம் உருவாகி, பின் அதன் அடையாளங்களை இழந்து தவிக்கும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும். கர்நாடகத்தில் பள்ளிகளில் தமிழ் பயில்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 500-க்கும் குறைவான மாணவர்களே பள்ளிகளில் தமிழ் பயின்று வருகிறார்கள். பெரும்பாலான தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை. இதேநிலை நீடித்தால், தமிழ் குடும்பங்களில் தமிழ் பேசும் வழக்கம்கூட மறைந்துபோகும் ஆபத்துள்ளது.
வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதற்காக தமிழக அரசால் தொடங்கப்பட்ட வளர்தமிழ் மையம் செயல்படுவதற்கான அறிகுறிகள் இல்லாமல் இருக்கிறது. கர்நாடகத்தில் தமிழர்களின் தொன்மை வரலாறு ஆவணச் சான்றுகளுடன் இருந்தபோதும், அவை ஆராயப்படாமல், ஆவணப்படுத்தப்படாமல் உள்ளன. பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, கலை, இலக்கியம், பண்பாடு, மொழி வளர்ச்சிக்கான தமிழக அரசின் திட்டங்கள், சேவைகளை கொண்டுசேர்ப்பது தமிழக அரசின் தலையாய கடமையாகும். தமிழக அரசு அதிகாரிகள் தங்குவதற்காக மும்பையில் 'தமிழ்நாடு இல்லம்' அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு, அதற்காக நிதியும் ஒதுக்கியுள்ளது. மும்பையில் வசிக்கும் தமிழர்களுக்கும், தமிழகத்தில் இருந்து மும்பைக்கு வருகை தரும் தமிழர்களுக்கும் பயனளிக்கும் வகையில் தமிழ்நாடு இல்லம் அமைக்க வேண்டுமென்பது மகாராஷ்டிரத்தில் வாழும் தமிழர்களின் எண்ணமாகும். எனினும், மும்பையைத் தொடர்ந்து பெங்களூரிலும் தமிழ்நாடு இல்லம் அமைக்க வேண்டுமென்பது கர்நாடகத் தமிழர்களின் கோரிக்கையாகும்.
இந்த இல்லத்தில் கூட்ட அரங்கம், நூலகம், சுற்றுலா தகவல் மையம், தங்கும் விடுதி, விருந்தினர் இல்லம், தமிழ்க் கல்விக்கூடம், தமிழக அரசின் திட்டங்கள் தகவல் மையம் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகத்தில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தரும் வளர்தமிழ் மையங்களை உடனடியாக அமைக்க வேண்டும். கலை, இலக்கிய, பண்பாட்டு விழுமியங்களைக் கட்டிக் காப்பாற்ற தமிழ்நாடு இல்லத்தை அமைக்க வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்து, உறுதுணையாக இருக்க தமிழ் வளர்ச்சி ஆணையத்தை அமைக்க வேண்டும். இதன் வழியே பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை ஏற்படுத்தி, பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை தமிழை மொழிப் பாடமாகக் கற்றுக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், தமிழகத்திற்கு சுற்றுலா செல்ல விரும்பும் கர்நாடகத் தமிழர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க பெங்களூரில் சுற்றுலா தகவல் மையத்தை அமைக்க வேண்டும். கலை, இலக்கிய, பண்பாட்டுக் கூறுகளை தமிழர்கள் நிரந்தரமாக கொண்டாடி மகிழ கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் தமிழ்ச் சங்கங்களுக்கு நிதியுதவி அளித்து, அவற்றின் பணிகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதே கர்நாடகத் தமிழர்களின் வேண்டுகோளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...