அரியலூர்: அரியலூர் மாவட்டம், வாரணவாசியில் அண்மையில் திறக்கப்பட்ட புதை உயிரிப் படிவ (பாசில்) அருங்காட்சியகத்தை உலகத்திலேயே தனித்துவம் மிக்க அருங்காட்சியமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படிவ வகை பாறைப் படிமங்கள் அதிகம் உள்ளதில் முதலிடம் இமயமலை, இரண்டாமிடம் அரியலூர். இதில் கடல் கனிம மண் பாறைகள், மணல் கடல் வாழ் உயிரிகளின் எச்சம், பாசில் என்ற தொல்லுயிரிகளின் படிமங்கள் அனைத்தும் உள்ள பகுதியாக அரியலூர் திகழ்கிறது.
கிரிட்டேசியஸ் யுகத்தில் அதாவது 146 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அரியலூர் மாவட்டத்தின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கியிருந்தது எனப் புவியியலாளர்கள் கூறுகின்றனர். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர், திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் வரையிலான நிலப் பகுதியை கடல் அழித்து உள்வாங்கியது. இதனால் அரியலூர் ஜூராசிக் காலக் காடுகள் அழிந்ததுடன் கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து விட்டன.
இந்நிகழ்வின் அடையாளம் இந்த நிலப்பகுதியில் உள்ளதுபோல உலகில் வேறெங்கும் இல்லை என உறுதியாகக் கூறலாம். திருச்சி மாவட்டத்தில் கல்லக்குடி, கல்லகம், டால்மியா, திருப்பட்டூர், பெரம்பலூர் மாவட்டத்தில் காரை, தரணி, பிலிமிசை, கூத்தூர், சிறுகன்பூர், அரியலூர் மாவட்டத்தில் வாரணவாசி, மேலப்பழுவூர், கல்லக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் இருந்த பகுதியானது மேடு பள்ளமாக இருப்பதை தற்போதும் காணமுடிகிறது. கடல் இருந்த பகுதியாக அரியலூர் இருந்ததால், இங்கு கால்சியம், இரும்பு, அலுமினியம்,வேதிப்பொருள் கலவையான கடல் அடிமண்டல் ஆகியவை சுண்ணாம்புக்கல், ஜிப்சம், நாடியூல்ஸ் என்ற படிக வகைப் பாறைகளாகவும், அதனிடையே பாசில் என்ற தொல்லுயிரினங்களும் நிறைந்ததாகவும் காணப்படுகின்றன.
மேலும், இம்மாவட்டத்தில் டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளமான அவற்றின் முட்டைகள், எலும்புகள், கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள், அடையாளங்கள் அனைத்தும் படிவப் பாறைகளாகக் கிடைக்கின்றன. எனவே, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த புவியியல் நிபுணர்கள் மத்தியில் அரியலூரில் கிடைக்கும் ஆழ்கடல் வாழ் உயிரினங்களின் பாசில் எனப்படும் படிமங்கள் பிரசித்தி பெற்றுள்ளன.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக புவியியலாளர்கள் மற்றும் கடலியல் நிபுணர்கள் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்களைக் கண்டறிவதிலும் அவற்றை வகைப்படுத்தும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் உற்பத்திக்கான மூலப்பொருளான சுண்ணாம்புக்கற்கள் அதிகளவில் கிடைப்பதால் இங்கு 10-க்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு கடல்வாழ் தொல்லுயிரிகள் படிந்துள்ள சுண்ணாம்புப் பாறைகள் தான் மூலப்பொருள். சுண்ணாம்புக்கல் சுரங்கங்களால் இந்த பாசில்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. இதனால் காலப்போக்கில் இவை அனைத்தும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டிலிருந்து வரும் புவியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் உலகளவில் புகழ் வாய்ந்த பாசில்களை ஒரே இடத்தில் பாதுகாத்து வைக்க தொல்லுயிரி பூங்கா (ஸ்பாட் பாசில் மியூசியம்) அமைக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்றுத் துறை மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டம்: இதையடுத்து கடந்த 2013 -ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் 52 ஹெக்டேர் இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு சுமார் ரூ.2 கோடியில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் கட்டப்படும், இது உலகிலேயே தனித்துவம் மிக்கதாக உருவாக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்காக அரியலூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் தஞ்சை சாலையில் உள்ள வாரணவாசியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டுச் சென்ற தமிழ்ப் பண்பாட்டு துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான இந்த அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த 14 -ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த அருங்காட்சியகத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அடிப்படை வசதிகள் இல்லை...: ஆனால் இதைக் காண வரும் பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கும், பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், அறிவியல் ஆராய்ச்சி வல்லுநர்களுக்கும் அருங்காட்சியகத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
திருச்சி-அரியலூர் சாலையில் செல்லும்போது ஏதோ ஒரு கட்டடம் இருப்பது மட்டும் மக்களுக்குத் தெரிகிறது. அருகே சென்று பார்க்கும்போது தான் அருங்காட்சியகம் எனத் தெரிகிறது. அருங்காட்சியகத்தைச் சுற்றி பூங்கா கிடையாது, தண்ணீர் வசதி கிடையாது, பார்வையாளர்கள் அமரக்கூட இடம் கிடையாது, போதுமான சாலை வசதி கிடையாது. அருங்காட்சியகத்தைச் சுற்றி தடுப்புச் சுவர் கிடையாது. உலகச் சிறப்பு பெற்ற இந்த அருங்காட்சியகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாதது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
புவியியலாளர் சந்திரசேகர் கூறியது: இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே மாணவர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் பயன் பெறும் வகையில் நூலகமும், பாசில்களை விளக்கும் வகையில் படமும் காண்பிக்க சிறு திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நிலப்பரப்புகளில் கிடைக்கும் பாசில்கள் குறித்து விளக்கவும், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பாசில்களின் வகையைத் தெரிவிக்கவும் அறிவியல் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். மேலும், அருங்காட்சியகம் முன் டைனோசர் முகப்பு அமைத்து அருங்காட்சியகத்துக்கான அடையாளத்தைக் காட்ட வேண்டும். அனைவருக்கும் தெரியும் வகையில் தோரண நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


