குடியரசு தின, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள், தனி நபர் மற்றும் குழுப் பிரிவுகளில் பங்கேற்கும்போது, முறையே தனிப் படம் மற்றும் குழுப் படம் கேட்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தலா 3 புகைப்படங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. 14, 17, 19 வயதிற்குள்பட்டோர் பிரிவுகளில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள், புகைப்படங்களுக்கு மட்டுமே ரூ.3ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. முறைகேடுகளைத் தவிர்க்க மாணவரின் ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் பெறப்படுகிறது. மாவட்ட போட்டிக்கு முதலிடம் பெறும் தனி நபர் அல்லது அணி மட்டுமே தேர்வு செய்யப்படுகிறது. அந்த நபர் அல்லது அணியின் புகைப்படத்தை மட்டும் பெறும் பட்சத்தில், வீண் செலவு தவிர்க்கப்படும். ஆதாரில் உள்ள புகைப்படத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், புகைப்படங்களுக்கு வீணாகச் செலவிடும் தொகையை, மாணவர்களின் தேவைக்கு செலவிட முடியும் என உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.