மீட்பு உபகரணங்கள் இன்றி தடுமாறும் புதுவை தீயணைப்புத் துறை!
போதிய மீட்பு உபகரணங்கள் இன்றி புதுவை தீயணைப்புத் துறை தடுமாறி வருகிறது.


புதுச்சேரி: போதிய மீட்பு உபகரணங்கள் இன்றி புதுவை தீயணைப்புத் துறை தடுமாறி வருகிறது. உரிய உபகரணங்களை கொள்முதல் செய்து, தீயணைப்புத் துறை துடிப்புடன் செயல்பட புதுவை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
யூனியன் பிரதேசமான புதுவையில் இயங்கும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் புதுச்சேரி பிராந்தியத்தில் 9,காரைக்காலில் 2, மாஹே, ஏனாமில் தலா ஒரு தீயணைப்பு நிலையம் என மொத்தம் 13 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. புதுச்சேரி, கோரிமேடு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் தலா 2 தீயணைப்பு வாகனங்களும், மற்ற அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தலா ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட பழைய வாகனங்கள். தற்போதைய நவீன காலத்துக்கு ஏற்ற புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் விபத்து-பேரிடர் காலங்களில் புதுவையில் உள்ள தீயணைப்பு வாகனங்களால் சம்பவ இடத்துக்கு உடன் சென்று விரைவாக செயல்பட முடிவதில்லை.
வாகனங்கள் அனைத்தும் பழுதாகி கோரிமேடு தீயணைப்பு நிலைய வளாகம் மற்றும் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, 15 வாகனங்கள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஒரு வாகனத்தை 15 ஆண்டுகள் வரை இயக்கலாம். அதற்குள் பழுதாகும் வாகனங்களை சீரமைத்தால் மேலும் சில காலம் இயக்கலாம். ஆனால் புதுவையில் வாகனங்களை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் அவை வீணாகப் போய்விட்டன.
புதுவை தீயணைப்புத் துறை காவல்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தீயணைப்புத் துறையின் இயக்குநர் (நிர்வாகம்) பொறுப்பை உள்துறை சார்புச் செயலர் கவனித்து வருகிறார். இயக்குநர் (தொழில்நுட்பம்) பதவிக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர அதிகாரி நியமிக்கப்படவில்லை.
மாநிலம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியிடங்கள் 200 உள்ளன. அதில், 50 பணியிடங்கள் காலியாகவே உள்ளன. மேலும், 14 நிலைய அதிகாரிகள் பணியிடங்களில் 8 காலியாக உள்ளன; 54 வாகன ஓட்டுநர் பணியிடங்களில் 8 காலியாக உள்ளன; 2 உதவிக் கோட்ட தீயணைப்பு அலுவலர் பணியிடங்களில் ஒன்று காலியாக உள்ளது. இந்தத் துறையில் 10 ஆண்டுகளாகப் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.
புதுச்சேரி தீயணைப்புத் துறைக்கு நவீன தீயணைப்பு உபகரணங்கள் இல்லை என்ற குறையைப் போக்கும் வகையில், உலக வங்கி நிதியுதவிடன் ரூ. 18 கோடியில், ஒருஸ்கை லிப்ட் மற்றும் நான்கு அவசர கால மீட்பு வாகனங்கள், நவீன உபகரணங்கள் 2013-ஆம் ஆண்டில் வாங்கப்பட்டன. ஆனால், அவற்றை முறையாக கையாள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. அதற்கென தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். இந்த நிலையில், இந்த வாகனம் முறையான பயன்பாடின்றிப் பழுதாகிவிட்டது.
புதுவையில் இயங்கி வந்த புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் சங்கம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மாநில அரசால் தடை செய்யப்பட்டது. இந்த சங்கத்தில் முன்பு பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் கூறியதாவது:
புதுவை தீயணைப்புத் துறைக்குத் தேவையான அடிப்படை உபகரணங்களைக் கூட கொள்முதல் செய்து வழங்க அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. தீயணைப்பு வீரர்களுக்குத் தேவையான புதிய நீண்ட காலணிகளான "கம்பூட்'கள் வாங்கி 4 ஆண்டுகள் ஆகின்றன. சீருடைகள் வழங்கப்படுவதில்லை. தலைக்கவசம் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. பெரும்பாலான தீயணைப்பு வாகனங்களில் சிவப்பு விளக்கு, எச்சரிக்கை ஓசையை எழுப்பும் சைரன் ஆகியவை இயங்குவதில்லை.
பல தீயணைப்பு நிலையங்கள் பழுதான கட்டடத்திலும், இரும்புத் தகடுகள் வேயப்பட்ட கூரையின் கீழும் இயங்கி வருகின்றன. தீயணைப்பு நிலையங்களில் குறைந்தபட்சம் 10 ஹோஸ்கள் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 3 ஹோஸ்கள்தான் உள்ளன. இதனால், மீட்பு நடவடிக்கைகளுக்குச் செல்லும்போது தீயணைப்பு வீரர்களுக்குப் பணியில் தொய்வும் தடுமாற்றமும் ஏற்படுகிறது. புதுவை தீயணைப்பு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், 8 மணி நேர வேலை, தீயணைப்புத் துறைக்கு இயக்குநர் பதவியை உருவாக்குதல் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தும், எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றனர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையை கவனித்து வரும் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனிடம் கேட்டபோது, நடப்பு ஆண்டில் நேரடி ஆள் சேர்ப்பு மூலம் 48 தீயணைப்பு வீரர்கள், 5 தீயணைப்பு வாகன ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படும். குறுகிய சாலைகளில் செல்லக் கூடிய 4 சிறிய ரக தீயணைப்பு வாகனங்கள் இந்த ஆண்டு வாங்கப்படும். நிலுவையில் உள்ள உபகரணங்கள் குறித்த கோரிக்கையை ஏற்று அவற்றை வாங்கவும், அத்தியாவசிய புதிய உபகரணங்கள் வாங்கவும், வாகனங்களை சீரமைக்கவும் நடப்பு நிதி நிலை அறிக்கையில் கூடுதலாக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...