எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காலிப் பணியிடங்களால் மானியத் திட்டங்களில் தொய்வு

திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் தோட்டக்கலைத் துறையில் மொத்தமுள்ள 39 துணை இயக்குநர் பணியிடங்களில் 21 இடங்கள் காலியாக இருப்பதால், பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்துவதில் தொய்வு

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:10 pm

ஆ. நங்கையார் மணி

திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் தோட்டக்கலைத் துறையில் மொத்தமுள்ள 39 துணை இயக்குநர் பணியிடங்களில் 21 இடங்கள் காலியாக இருப்பதால், பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.  

தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழிகாட்டவும்,  பயிற்சி அளிக்கவும்,  மானியத் திட்டங்களை செயல்படுத்தவும், 39 இடங்களில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2008ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்றன. அதேநேரத்தில், மத்திய-மாநில அரசுகள் தோட்டக்கலைத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்க முன்வந்ததால், மாவட்ட அளவில் ஒரு உதவி இயக்குநரோடு செயல்பட்டு வந்த தோட்டக்கலை அலுவலகம், வட்டார அளவில் தொடங்கப்பட்டு, மாவட்ட அளவில் துணை இயக்குநர் அலுவலகங்கள் தொடங்கப்பட்டன.  

அதைத் தொடர்ந்து, 2008 முதல் 2012 வரையிலான 5 ஆண்டுகள், வேளாண்மைத் துறையில் பணிபுரிந்த அலுவலர்கள் தோட்டக்கலைத் துறையில் பணியமர்த்தப்பட்டனர். இதனிடையே, தோட்டக்கலைத் துறையில் பணிபுரியும் வேளாண்மை அலுவலர்களுக்கு மாற்றாக, தோட்டக்கலையில் பட்டம்  பெற்றவர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் காரணமாக, 5 ஆண்டுகள் தோட்டக்கலைத் துறையில் பணிபுரிந்து வந்த வேளாண்மை அலுவலர்கள், மீண்டும் வேளாண்மைத் துறைக்கே திரும்பப் பெறப்பட்டனர். ஆனாலும், 2008 முதல் 2012 வரையிலான காலக் கட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட திட்டங்கள், பெறப்பட்ட நிதி ஆதாரங்கள் அடிப்படையில், தோட்டக்கலைத் துறை பயிர் சாகுபடி மற்றும் திட்டச் செயலாக்கம் மறுமலர்ச்சி பெற்றது.

இதனிடையே, தோட்டக்கலைத் துறை அலுவலகங்களிலுள்ள உதவி இயக்குநர், துணை இயக்குநர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யக் கூடாது என்றும், தோட்டக்கலை அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளித்து அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், தோட்டக்கலை அலுவலர்  சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதன் காரணமாக, தோட்டக்கலைத் துறையில்  பட்டம் பெற்றவர்களை நேரடியாக நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இன்றைய சூழலில், தோட்டக்கலைத் துறையில் தமிழகம் முழுவதும் 21 துணை இயக்குநர் பணியிடங்களும், 100-க்கும் மேற்பட்ட உதவி இயக்குநர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

மானிய திட்டங்களைப் பொருத்தவரை வேளாண்மைத் துறையை விட 2 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கீடு தோட்டக்கலைத் துறைக்கு வழங்கப்படுகிறது. ஆனால், காலிப் பணியிடங்கள் காரணமாக,  தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம், நீர்வள நிலவளத் திட்டம், பெரு நகர காய்கறித் தொகுப்புத் திட்டம், சொட்டு நீர்ப் பாசனத் திட்டம், காய்கறி நாற்று வழங்கும் திட்டம், பசுமைக் குடில் மானியம்,  சொட்டு நீர்ப்பாசன மானியம் போன்ற திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதில், சொட்டு நீர்ப்பாசனத் திட்டத்துக்கு மட்டும் நிகழாண்டில் ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காலிப் பணியிடங்களால் அலுவலக நடைமுறைகள் பாதிக்கப்படுவதை விட, பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், அதனை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:  தமிழகம் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடிக்கு உகந்த மாநிலமாக இருப்பதால்தான், பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. பணியாளர் பற்றாக்குறை காரணமாக, திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதோடு, பல்வேறு திட்டப் பணிகளை முடிக்க இயலாமல், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை திருப்பி ஒப்படைக்கும் சூழல் உள்ளது. 

எனவே, பணியாளர் பற்றாக்குறைக்கான காரணங்களை கண்டறிந்து, திட்டங்களைச் செயல்படுத்தவும், ஒதுக்கீடு செய்யப்படும் நிதி ஆதாரங்களை முழுமையாகப் பயன்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணியாளர்களுக்கிடையிலான கௌரவப் பிரச்னையால், விவசாயிகள் நலன் பாதிக்கப்படுகிறது எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.