திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நீரா பானம் இறக்கும் உரிமம் பெற 5 மாதங்களாக அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்!

திண்டுக்கல் மாவட்ட தென்னை விவசாயிகள் நீரா பானம் இறக்கும் உரிமத்திற்காக கடந்த 5 மாதங்களாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:15 pm

ஆ. நங்கையார் மணி

திண்டுக்கல் மாவட்ட தென்னை விவசாயிகள் நீரா பானம் இறக்கும் உரிமத்திற்காக கடந்த 5 மாதங்களாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
 தென்னை மரங்களிலிருந்து நீரா பானம் இறக்குவதற்கு விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
 இதற்கு தமிழக அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. அதன்படி, கோவை, ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு, கடந்த 4 மாதங்களாக நீரா பானம் இறக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் நீரா பானம் இறக்க அனுமதி கோரி, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தும், இதுவரை உரிமம் வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 இதுகுறித்து, திண்டுக்கல் தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனத் தலைவர் எஸ்.முருகேசன் கூறியதாவது:
 விவசாயிகள் சார்பில் தொடங்கப்பட்ட திண்டுக்கல் தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தில் 1600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
 ஒரு நிறுவனத்துக்கு 40ஆயிரம் மரங்கள் வரை நீரா பானம் இறக்கும் உரிமம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
 திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை முதல்கட்டமாக 9 ஆயிரம் மரத்துக்கு மட்டுமே உரிமம் கேட்டு கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்துள்ளோம்.
 தொடரும் தேங்காய் விலை சரிவு: இம்மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. அந்த வகையில், இம்மாவட்டத்தில் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன.
 கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.13-க்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது ரூ.8ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
 நீரா பானம் இறக்குவதற்கு ரூ.2.50 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறோம்.
 இதுபோன்ற சூழலில், நீரா பானம் இறக்குவதற்கான உரிமத்தை மாவட்ட நிர்வாகம் துரிதமாக வழங்கினால், உடனடியாக உற்பத்தியை தொடங்க முடியும்.
 தேங்காய் விலை வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரிமம் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
 இதுதொடர்பாக வேளாண்மை துணை இயக்குநர் (வணிகம்) சாத்தப்பன் கூறியது:
 பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் முதல் கட்டமாக 1000 மரங்களில், நீரா பானம் இறக்க உரிமம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 தென்னை வளர்ச்சி வாரியத்தில் (கேரளம்) பதிவு செய்துள்ள விவசாயிகள் மட்டுமே உரிமம் பெற முடியும்.
 வேளாண்மை உதவி அலுவலர்கள் (வணிகம்) மூலம் நடத்தப்பட்டு வரும் கணக்கெடுப்புப் பணி முடிந்தவுடன் உரிமம் வழங்கப்படும் என்றார்.
 கூடுதல் வருவாய் பெறலாம்
 5 தென்னை மரங்களில் ஆண்டுக்கு சராசரியாக 550 தேங்காய் மட்டுமே கிடைக்கும். அதன் மூலம் சுமார் ரூ.6 ஆயிரம் வருமானம் பெற முடியும். அதே நேரத்தில் நீரா பானத்தை பொருத்தவரை, ஒரு மரத்தில் நாளொன்றுக்கு 1.5 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை இறக்க முடியும். ஒரு லிட்டர் நீரா பானம் ரூ.30-க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் 5 மரங்களில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் பெறலாம் என தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் முருகேசன் தெரிவித்தார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.