பிளாஸ்டிக் பூதம்!
வரும் 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க இருப்பதாக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே அமலில் உள்ள பருமன்


தருமபுரி: வரும் 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க இருப்பதாக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே அமலில் உள்ள பருமன் வேறுபாடு விதிவிலக்குகள் எதுவும் இந்தத் தடைக்குள் வராது என்றும் அவரது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை ஊக்குவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பிளாஸ்டிக் பைகள், கோப்பைகளுக்குத் தடை கறாராக அமலாக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் நெகிழிப் பொருள் தடை அமலுக்கு வருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
ஒரு காலத்தில், பூ விற்பவர், இலையில்தான் சுற்றிக் கொடுத்தார். உணவகங்களுக்கு நாம்தான் சொம்பு, கேரியர் போன்றவற்றை எடுத்துச் சென்று சிற்றுண்டி போன்ற உணவுகளை வாங்கி வந்தோம். கடை வீதிக்குச் செல்லும்போதே கையில் துணிப் பையுடன் வீட்டைவிட்டு கிளம்பியவர்கள்தான் நாம். இடையில், புதுமை, செளகரியம், அழகு, விளம்பரம் போன்ற காரணங்களால் பிளாஸ்டிக் பை நம் வாழ்வில் ஊடுருவியது. இப்போது முற்றிலும் ஆக்கிரமித்துவிட்டது. இன்று "அய்யோ, நெகிழிக்குத் தடை வந்துவிட்டால் என்ன செய்வது?' என்ற தேவையற்ற அச்சமே தோன்றிவிட்டது.
ஆனால் பிளாஸ்டிக்கின் அச்சுறுத்தலை மக்கள் மத்தியில் அழுத்தமாக உணர்த்த வேண்டும். கூடவே, பிளாஸ்டிக் பைகளில், கோப்பைகளில் சூடான உணவுப் பொருளை வைத்து உண்டால், உணவோடு நச்சு ரசாயனங்கள் நம் உடலில் கலந்து புற்றுநோய் போன்ற பாதிப்புக்கும் வாய்ப்புள்ளது என்ற தகவலை சொல்ல வேண்டும்.
ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் டன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல நதிகள் சாக்கடைகளானதைப் போல, கடலும் கழிவுநீர்ப் பெருங்குளமாகிவிடும். கடல் நீர் ஆவியாதல் பாதிப்பு, தொடர்ந்து பருவ மழை பாதிப்பு, கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பு ஏற்படும். இது நாம் வாழும் பூமிக்கே பெரும் ஆபத்து.
இந்த நிலையில், பிளாஸ்டிக் பொருட்களின் தடைக்கு முன்பாகவும், பின்னரும் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் குறித்து அழுத்தமாக முடிவெடுத்துக் களமிறங்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால், தடை பெயரளவில் மாறிவிடுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம்.
தடைக்கு முன் செய்ய வேண்டியவை
பிளாஸ்டிக் ஒழிப்பின் முதல் படியாக, முதலில் மக்கள் மனதிலிருந்து பிளாஸ்டிக்கை அகற்ற வேண்டும். இது மிகப் பிரதானமான பணி. பள்ளி, கல்லூரிகளில் உள்ள என்எஸ்எஸ், என்சிசி, பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவற்றுக்கு இந்தக் கல்வியாண்டில் பிரத்யேகப் பணிகளை வடிவமைத்து செயலில் இறங்க வேண்டும்.
சிகரெட் புகைக்கு எதிராகவும், எச்ஐவி- எய்ட்ஸ் நோய்க்கு எதிராகவும் திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கி அனைத்து ஊடகங்களிலும் பிரம்மாண்ட விளம்பரங்களுடன் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதே முக்கியத்துவத்தோடு பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த நிதி உதவி அளித்திட வேண்டும்.
பிளாஸ்டிக்- நெகிழி- என்பது காலையில் பால் பாக்கெட்டில் தொடங்கி நமது அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்து, அது ஓர் இன்றியமையாத பொருளாகத் தோற்றம் கொள்கிறது. எனவே, பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியுமா என்ற ஐயப்பாடு பலர் மனதில் எழுகிறது. இந்த எண்ணத்தைத்தான் மக்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டியிருக்கிறது.
தடைக்குப் பின் செய்ய வேண்டியவை
நெகிழி தடைச் சட்டத்தை எவ்வித விதிவிலக்கும் தலையீடுகளுமின்றி கறாராக அமலாக்க வேண்டும். இன்னொரு பிரதான பணி உள்ளது. இத்தனை ஆண்டு காலமாக இம் மண்ணில் நம்மால் கொட்டிக் குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான டன் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணோடு கலந்திருக்கின்றன. அவற்றை எப்பாடுபட்டாவது மண்ணிலிருந்து அகற்ற வேண்டும். அறிவியல்பூர்வமாக- எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் அவற்றை அழிக்கத் திட்டமிட வேண்டும்.
மாநகராட்சி தொடங்கி, பேரூராட்சி வரை அனைத்து இடங்களிலும் குப்பைகளை வீடுகளில் இருந்தே பிரித்து வாங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மக்காத குப்பைகள், இயல்பாக மக்கி மண்ணாகும் குப்பைக் கழிவுகளுடன் கலந்து அவற்றையும் மக்க விடாமல் செய்யும் நிலைமையைத் தடுக்க வேண்டும். இதனால்தான் குப்பை மலைகள் உருவாகின்றன.
படிப்படியாக, பால் போன்றவற்றுக்கும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
நீர்நிலைகளிலிருந்து நெகிழியை அகற்ற முழு முயற்சியெடுக்க வேண்டும். சிற்றாறுகள் மற்றும் ஆறுகளில் இருந்து ஆயிரக்கணக்கான கால்வாய்கள், வாய்க்கால்கள் பாசனம் உள்ளிட்டவற்றுக்காக பிரிகின்றன. இந்த இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை வடிகட்டும் வடிமுனைகளை நல்ல தொழில்நுட்பத்துடன் வடிவமைத்து அமைத்திட வேண்டும்.
இயற்கையோடு இயைந்து வாழ அடுத்த தலைமுறையைப் பழக்க வேண்டும். கடினம் என்று ஒதுக்கினால், ஒவ்வொரு குடும்பத்தின் மருத்துவச் செலவும் பெருமளவு கூடிவிடும்!
அதோடு மட்டுமல்ல, பூமிக்குக் கேடு விளைவித்த மனித குலம் அடுத்த சில நூறாண்டுகளில் காணாமலே போகும் - டைனோசார்களைப் போல!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...