மக்கள் மன்ற ரசிகர்கள் வாக்காளர்களாக மாறுவார்களா? தமிழகத்தில் நிகழுமா ரஜினி மேஜிக்??
ரஜினியின் மக்கள் மன்றத்தில் இணையும் மக்கள் அனைவருமே வாக்காளர்களாக மாறி, தமிழகத்தில் ரஜினிகாந்தின் மேஜிக் நிகழ வாய்ப்பு ஏற்படுமா என்பது பலரது கேள்வியாக உள்ளது.


சென்னை: ரஜினியின் மக்கள் மன்றத்தில் இணையும் மக்கள் அனைவருமே வாக்காளர்களாக மாறி, தமிழகத்தில் ரஜினிகாந்தின் மேஜிக் நிகழ வாய்ப்பு ஏற்படுமா என்பது பலரது கேள்வியாக உள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதித்து தீவிர அரசியலில் இருந்து விலகி இருப்பது போன்றவை அரசியலில் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் நிலையில், நடிகர்கள் கமலஹாசன், விஷால், ரஜினிகாந்த் ஆகியோரது அரசியல் பிரவேசம் அதனை தாங்கிப் பிடிக்கும் என்று மக்கள் நம்பத் தொடங்கிவிட்டனர்.
அரசியலில் ஆழம் பார்க்க, வளர்ந்துள்ள தகவல் தொழில்நுட்ப புரட்சியை நாடுகிறார்கள் நடிகர்கள். அந்த வகையில்தான், ரஜினி பேரவைக்கான செல்போன் செயலியை ரஜினிகாந்த் வெளியிட்டு, அதில் பொதுமக்களை இணையுமாறு வலியுறுத்தினார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் செல்போன் செயலியை, அறிமுகப்படுத்திய ஒரே வாரத்தில் சுமார் 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்ததாக புள்ளி விவரங்களும் வெளியாகின. அறிமுகமாகி 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆன பாஜக செயலியை அடுத்து, அதிகமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட அரசியல் செயலி என்ற பெருமையை ரஜினி மக்கள் மன்ற செயலி பிடித்தது.
அதே சமயம், ரஜினிக்கு ஆதரவு தரும் பொதுமக்களில் பெண்களே அதிகமாக இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினியின் ரசிகர்கள் பலரும் அதிமுகவிலும் இருக்கலாம், திமுகவிலும் இருக்கலாம். தற்போது ரஜினி அரசியல் கட்சித் தொடங்கும் போது அவர்கள் ரஜினியின் தொண்டர்களாக மாற வேண்டிய அவசியம் ஏற்படும்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ரசிகர்களை, தனது கட்சியின் தொண்டர்களாக மாற்றும் சக்தி ரஜினிக்கு இருப்பதாகவே கருதினாலும், செயலியில் ரஜினி மக்கள் மன்றத்தில் இணையும் பொதுமக்கள் அனைவரும் வாக்காளர்களாக மாறி, ரஜினிக்கு வாக்களிப்பார்களா என்பதும் அது எவ்வளவு சதவீதமாக இருக்கும் என்பதும் முன்கணிக்க முடியாத கேள்வியாகவே உள்ளது.
மாற்றம் வேண்டும் என்று நினைத்திருந்த மக்களுக்கு ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டார் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார் என்றே கருதலாம். ஆனால், அவருக்கு சபாஷ் சரியான போட்டி என்று கூறும் வகையில் கமலஹாசனும் அரசியலில் இறங்குகிறார். அதற்காக மிகவும் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.
பணம் இருக்கிறது, புகழ் இருக்கிறது. எனவே ரஜினி நிச்சயம் அரசியலில் ஜொலிப்பார், அவர் மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வருகிறார் என்று நேர்மறையான கருத்துகள் முன் வைக்கப்பட்டாலும், இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார், எந்த ஒரு விஷயத்துக்காகவாவது அவர் குரல் கொடுத்திருக்கிறாரா என எதிர்மறை கேள்விகளும் காதுகளைத் துளைக்கத்தான் செய்கிறது.
இதுவரை செய்யவில்லை ஆனால்.. இனி செய்வார்.. அவர் பேச மாட்டார், செய்து காட்டுவார் என ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் நம்புகிறார்களா? அந்த நம்பிக்கையை ரஜினி ஏற்படுத்துவாரா?
செயலியில் இணையும் அனைவரையும் வாக்காளர்களாக மாற்றி, தமிழகத்தில் ரஜினிகாந்தின் மேஜிக் நிகழ்த்தப்படுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...