/

புதுவையில் ஒரு மாதத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: பாஜக மாநில தலைவர் பேட்டி

புதுவையில் ஒரு மாதத்துக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் தெரிவித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:08 pm

ஜெபலின்ஜான்

புதுவையில் ஒரு மாதத்துக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் தெரிவித்தார்.

புதுவை பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் ஏழைகளையும், விவசாயிகளையும் மையப்படுத்தி போடப்பட்ட நிதிநிலை அறிக்கையாக உள்ளது.  60 சதவீத ஏழை, நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை பிரதமர் எடுத்துள்ளார்.

குறிப்பாக ஏழைகளின் கனவு சொந்த வீடு, சுகாதாரம், கல்வி மற்றும் வேலை வாயப்பு ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில் 2022-க்குள் அனைவருக்கும் சொந்த வீடு என்ற திட்டத்தின்படி புதிதாக 1 கோடி இலவச வீடுகளை அளிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். அதனடிப்படையில் 2022-க்குள் நாடுமுழுவதும் அனைவரும் சொந்தவீடுகளில் வசிக்கக்கூடிய நடவடிக்கை முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 8 கோடி பேருக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மிகப்பெரிய திட்டமாக கருதப்படுகிறது.  4 கோடி பேருக்கு இலவச எரிவாயு திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏழை பெண்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.  நாட்டில் விவசாயத்துக்கு  முக்கியத்துவம் அளிக்காத அரசு தொடர்ந்து இருந்ததால் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

தற்போது விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்லாயிரம் கோடி விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  புதிதாக இந்தாண்டு 75 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.  ரயில் சேவையை நவீனப்படுத்தி,  வை-பை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பிரதமர் கொண்டு வந்துள்ளார்.  இதனை புதுச்சேரி மாநில பாஜக வரவேற்கிறது.

இந்த நிதிநிலை அறிககை முழுவதும் ஏழைகளின் பொருளாதாரம், வளர்ச்சி இவற்றை அடிப்படையாக கொண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை இது.  எதிர்க்கட்சியினர் கூட வரவேற்கக்கூடிய நிதிநிலை அறிக்கையாக இது உள்ளது.  புதிய நிதிநிலை அறிக்கை  மூலம் புதுச்சேரிக்கு கூடுதல் நிதியை கொண்டுவர பாஜக நியமன எம்எல்ஏக்கள் இம்மாதம் இறுதியில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர்களை சந்தித்து புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம்.

புதுச்சேரியில் ஆளும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு,  ஆளுநர் உடனான  தொடர் மோதல் போக்கை தற்போது நிறுத்தி,  இணக்கமான சூழ்நிலையை அவர்கள் கொண்டுவந்துள்ள நிலையில், ஆளுநர் மூலமும், மத்திய அரசின் மூலமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலத்துக்கு தேவையான அனைத்து  உதவிகளையும் பெற்றுத்தர ஆளுநரும்,  பாஜக கட்சியும் ஏற்பாடு செய்யும்.

காங்கிரஸ் கட்சியின் சில எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக உள்ளனர்.  விரைவில் புதுச்சேரியில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழும். ஒரு மாதத்துக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.  இந்த மாற்றத்திற்கு பாஜக பின்னணியில் இருக்கும்.  பாஜக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.