மதுரை: தமிழ்நாட்டு அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் பெருமளவு உபரிநீரை கடைமடை பாசனப் பகுதிகளுக்கும், வறண்டு கிடக்கும் குளங்களுக்கும் திருப்பிவிட்டு பயன்படுத்தாமல் வீணாக்கிக் கொண்டிருப்பது விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை பலமாக பெய்துள்ளது. கேரளத்திலும், கர்நாடகத்திலும் பெய்துள்ள மழையால் அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. அந்த அணைகளின் உபரி நீராலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையாலும் தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து மேட்டூர், பவானி சாகர், பாபநாசம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. 152 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள 142 அடியை எட்டியுள்ளது. எனவே, இந்த அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த சில நாள்களாக விநாடிக்கு சுமார் 1.5 லட்சம் கன அடிக்கு மேலாகவும், பவானி சாகரில் இருந்து சனிக்கிழமை 70 ஆயிரம் கன அடியும், பாபநாசம் அணையிலிருந்து 4 ஆயிரம் கன அடியும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து 10 ஆயிரம் கன அடிக்கு மேலாகவும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு சுமார் 2,300 கன அடியும், கேரளத்துக்கு சுமார் 20 ஆயிரம் கன அடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரின் பெரும்பகுதி கடலில் சென்று கலக்கிறது.
பருவ மழைக் காலங்களில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கடலுக்கு சென்று கலக்க வேண்டியது அவசியம்தான். அப்போதுதான் இயற்கை சமன்பாடு நிலவும். ஆனால், இப்போது அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது முறைப்படியான, தேவையுள்ள பாசனப் பகுதிகளுக்கும், குளங்களுக்கும் செல்லாமல் கடலுக்கு சென்று கலந்து வருகிறது. இதனால், ஒரு பகுதி விளை நிலங்கள் தரிசாக கிடப்பதும், பாசனக் குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காட்சி அளிப்பதும் விவசாயிகளை விரக்தி அடையச் செய்துள்ளது.