மதுரையில் "தூங்கும்' சுற்றுலா காவலர் திட்டம்!
தமிழகத்தில் சிறிய நகரங்களில் கூட சுற்றுலா காவலர் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், மிகப்பெரிய மாநகராட்சியாக உள்ள மதுரையில் அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை என,


தமிழகத்தில் சிறிய நகரங்களில் கூட சுற்றுலா காவலர் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், மிகப்பெரிய மாநகராட்சியாக உள்ள மதுரையில் அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை என, சுற்றுலா ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
தமிழகத்தின் கலாசார தலைநகரான மதுரை மாநகரில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், திருமலைநாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், அழகர்மலை மற்றும் சமணர் படுக்கைகள் என பாரம்பரியமான சுற்றுலா இடங்கள் ஏராளமாக உள்ளன.
மதுரையில் கடந்த 2006 ஆம் ஆண்டில் 27 ஆயிரம் வெளிநாட்டவர் உள்பட 33.29 லட்சம் பேர் சுற்றுலா வந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் வெளிநாட்டவர் 1.22 லட்சம் பேர் உள்பட மொத்தம் 1.25 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்மாவட்ட நுழைவுவாயிலாக மதுரை இருப்பதால், வெளி மாநிலத்தவர், வெளிநாட்டவர் வருகை அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகம் மற்றும் இரு சுற்றுலா விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்காக 15 ஆண்டுகளுக்கு முன் இரு பேருந்துகள் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இயக்கப்பட்டன.
மதுரைக்குள்ளும், மதுரையிலிருந்து ராமேசுவரம், கொடைக்கானல் போன்ற ஊர்களுக்குச் செல்வதற்காகவும் இப்பேருந்துகள் செயல்பட்டன.
குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்தபோது, மதுரையில் சுற்றுலா பேருந்து உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பழைய திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், புதிய திட்டங்களிலும் மதுரை புறக்கணிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் மதுரையில் சுற்றுலா ஆட்டோ, வீடுகளில் தங்கும் சுற்றுலா என புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டும், அவை தொடர்ந்து செயல்படுத்தப்படவில்லை. ஆன்மிகச் சுற்றுலா தனியார் சார்பில் தொடங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் ஒத்துழைப்பின்றி அத்திட்டமும் முடங்கிவிட்டது.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் வழிகாட்டவும், முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கம் மூலம் சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் வகையில் சுற்றுலா காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் மற்றும் தென் மாவட்டங்களில் கொடைக்கானல், ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் சுற்றுலா காவலர்கள் 5 பேர் முதல் 10 பேர் வரை நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில் சுற்றுலா காவலர்கள் நிறுத்தப்படுவர். அவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதுடன், அவர்களது புகார்களுக்குரிய நிவாரணத்தை பெற உதவும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மதுரைக்கு வெளிநாட்டவர், வெளிமாநிலத்தவர் என ஏராளமானோர் வரும் நிலையில், அவர்களுக்கு உதவும் வகையிலான சுற்றுலா காவலர்கள் நியமிக்கப்படவில்லை.
மதுரையில் சுற்றுலா அலுவலரிடம் சான்று பெற்ற 100 வழிகாட்டிகள் உள்ளனர். அவர்களது செயல்பாடுகளை முறைப்படுத்தவோ, கண்காணிக்கவோ எந்த நடவடிக்கையும் இல்லை.
மதுரை மாநகருக்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டவர் மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலுக்கே செல்கின்றனர். ஆனால், அங்கு அவர்களுக்கான கழிப்பறை வசதிகள் இல்லை. கோயில் பூங்காவில் இ-கழிப்பறை வசதி பெயரளவுக்கே அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவருக்கான பிரத்யேக கழிப்பறை இல்லாத நிலையில், அவர்கள் அவதிப்படுவதும் தொடர்கிறது.
இது குறித்து மதுரை சுற்றுலா அலுவலர் சோ.மு. ஸ்ரீபாலமுருகன் கூறியது: மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பக்தர்கள் தங்குமிடமான எல்லீஸ் நகர் உள்ளிட்ட இடங்களில் வெளிநாட்டவர் பயன்படுத்தும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா காவலர்களை மதுரையில் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நாட்டிலே மிகப் பழமையான கலாசார நகரான மதுரையை சுற்றுலா தொழில் மேம்பாடு நகரமாக்க மத்திய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்த முன்வந்துள்ளது. எனவே, மதுரையில் சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என்பதே அனைவரது கருத்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...