எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விலையைக் குறைக்க கலப்படம்: ஜவ்வரிசி ஆலைகள் மீதான பிடி இறுகுமா?

ஜவ்வரிசி தயாரிக்க மரவள்ளிக் கிழங்கோடு மக்காச் சோளம் கலப்படம் செய்வதால், மரவள்ளி பயிர் விலை குறைந்து விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:48 pm

கே.விஜயபாஸ்கா்

ஜவ்வரிசி தயாரிக்க மரவள்ளிக் கிழங்கோடு மக்காச் சோளம் கலப்படம் செய்வதால், மரவள்ளி பயிர் விலை குறைந்து விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது.

இதைத் தடுக்க ஆலைகள் மீதான கண்காணிப்பை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கலப்படத்தைக் கண்டறிய சோதனை மையத்தை நாமக்கல் மாவட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் 20,000 ஹெக்டேர், சேலம் மாவட்டத்தில் 15,000 ஹெக்டேர், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் தலா 10,000 ஹெக்டேர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் தலா 5,000 ஹெக்டேர் என மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
மரவள்ளிக் கிழங்கின் மூலம் சேகோ ஆலைகளில் மாவு, ஜவ்வரிசி உள்ளிட்ட பொருள்கள் தயார் செய்யப்படுகின்றன. நாமக்கல், சேலம் மாவட்டங்களில் மட்டுமே சுமார் 350 சேகோ ஆலைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அதன்மூலம் சேமியா, சிப்ஸ் உள்ளிட்ட 64 வகையான உணவுப் பொருள்கள் தயாராகி விற்பனை செய்யப்படுகின்றன.
மக்காச்சோள மாவு கலப்படம்: ஜவ்வரிசி உற்பத்தியில், ஒருசில சேகோ ஆலைகள் உரிமமின்றி ஈர மாவு தயாரித்து விற்பனை செய்கின்றனர். அதில் மக்காச்சோளம் 75 சதவீதமும், மரவள்ளிக் கிழங்கு மாவு 25 சதவீதமும் கலப்படம் செய்கின்றனர்.
பல ஜவ்வரிசி ஆலைகளில் மரவள்ளிக் கிழங்கு அரைக்கும் போதே வேறொரு தொட்டியில் மக்காச் சோள மாவை கொட்டி தண்ணீர் விட்டு கரைத்து இரண்டு பாலையும் ஒன்றாக தொட்டியில் விட்டு கலந்து அதன்பின் தண்ணீரை வடிகட்டி, கலப்பட மாவு தயாரிக்கின்றனர்.
இந்த ஜவ்வரிசி மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. வருமானத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டுள்ள ஆலை உரிமையாளர்கள், வாடகைக்கு ஆலைகளை பிடித்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மரவள்ளிக் கிழங்கு விலை குறைவதால், விவசாயிகள் பாதிப்படைகின்றனர். மேலும், தரமற்ற ஜவ்வரிசியை வாங்கி பயன்படுத்துவதால் நுகர்வோரும் ஏமாற்றப்படுகின்றனர்.
விலையைக் குறைக்க கலப்படம்: ஜவ்வரிசி மூட்டை ரூ.5,000-க்கு மேல் விற்பனையானால் விலையைக் குறைத்து அதிக அளவில் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைக்கும் சில ஆலை உரிமையாளர்கள் கலப்படம் செய்யத் துணிவதாகச் சொல்கிறார் நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே அரியாகவுண்டம்பட்டிவிவசாயி பி.சரவணன்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது: ஜவ்வரிசி மூட்டை ரூ.5,000-க்கு மேல் விற்றால், விவசாயிகளுக்கு 75 கிலோ கிழங்கு மூட்டைக்கு ரூ.600 முதல் ரூ.700 வரை விலை கிடைக்கும். இதன்மூலம் டன்னுக்கு ரூ.10,000 வரை விலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஏக்கருக்கு சாகுபடி செலவு ரூ.50,000 போக, ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை லாபம் கிடைக்கும்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாகவே ஜவ்வரிசி மூட்டை விலை ரூ.5,500 என்ற நிலை வந்தால், அடுத்த 10 நாள்களில் ரூ.4,000 என்ற அளவுக்கு விலை குறைந்துவிடும். அப்போது ஆலைகளில் கலப்படம் தொடங்கிவிட்டது என்பதை அறிந்து கொள்ள முடியும். ஜவ்வரிசி விலை ரூ.4,000-க்கு வந்தால், 75 கிலோ கிழங்கு மூட்டை ரூ.300 முதல் ரூ.400 வரை விலை மட்டுமே கிடைக்கும். அந்த சமயத்தில் அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.5,000 கூட கிடைப்பதில்லை. இதனால் ஓராண்டாகப் பராமரித்து வந்த பயிரை வேறு வழி இல்லாமல் நஷ்டத்துக்கு விற்றுவிட்டு கடனாளியாக நிற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.
இதைத் தடுக்க சேகோ ஆலைகள் ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவை சேலம் ஸ்டார்ச் மற்றும் சேகோ உற்பத்தியாளர்கள் சேவை, தொழிற் கூட்டுறவு சங்கம் (சேலம் சேகோ சர்வ்) மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அரசு கட்டாய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். மேலும், ஜவ்வரிசியில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க அதி நவீன ஆய்வு மையம் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே உள்ளது. அதேபோன்ற ஆய்வு மையத்தை சேகோ சர்வ் வளாகம் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைக்க வேண்டும். மேலும், கலப்படம் செய்யும் ஆலை உரிமையாளர்களை கடுமையாகத் தண்டிக்க சட்டம் இயற்ற வேண்டும்.
மரவள்ளிக் கிழங்கு அறுவடை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும். இதனால் கலப்படத்தைத் தடுத்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், நுகர்வோருக்கு தரமான ஜவ்வரிசி கிடைக்கவும் அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கலப்பட ஆலைகள் மீது நடவடிக்கை: தமிழக ஸ்டார்ச், சேகோ உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் எஸ்.துரைசாமி தெரிவித்தது: உணவுப் பாதுகாப்பு விதிப்படி மரவள்ளிக் கிழங்கில் இருந்துதான் ஜவ்வரிசி தயாரிக்கப்பட வேண்டும். தற்போது பல ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் விலை குறைவு என்பதால், மக்காச்சோள மாவை கலப்படம் செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதுடன், விவசாயிகளையும், நேர்மையான உற்பத்தியாளர், நுகர்வோரை ஏமாற்றி வருகின்றனர்.
இந்த கலப்படம் வட இந்திய நுகர்வோருக்குத் தெரியவந்ததால், ஜவ்வரிசி நுகர்வு பெருமளவு குறைந்து தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்காச் சோள மாவை கலப்படம் செய்யும் ஆலைகளை கையும் களவுமாக பிடிக்கும் போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வணிக வரித் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, சிறுதொழில், தொழிலாளர் நலத் துறை மூலம் வழங்கப்படும் உரிமங்ககளைக் குறைந்தது ஓராண்டுக்கு ரத்து செய்ய வேண்டும். மேலும் மின் இணைப்பையும் நிரந்தரமாகத் துண்டிக்க வேண்டும் என்றார்.
கலப்படம் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தது: கலப்படத்தில் ஈடுபடும் ஆலைகளைக் கண்டறிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியம், தொழிலாளர் நலத் துறை, தொழிற்சாலை ஆய்வாளர், உணவுப் பாதுகாப்புத் துறை, வருவாய் துறை, சேகோ சர்வ், காவல் துறை ஆகிய 8 துறைகள் அடங்கிய குழு கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்டு, புகார் தெரிவிக்கப்படும் ஆலைகளில் உடனடியாக சோதனை நடத்தப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சேகோ ஆலைகளிலும் ஆய்வு நடத்துவது என்பது சாத்தியமில்லை. கலப்படத்தில் ஈடுபடும் சேகோ ஆலைகள் குறித்து விவசாயிகள் தகவல் தெரிவித்தால் உடனடியாக ஆய்வு நடத்தி நடவடிக்கையெடுக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.