காவிரி ஆற்றில் இயற்கையாக அமைந்த மணல் திட்டு மணல் குவாரிகளால் சூறையாடப்பட்டதால், காவிரியில் 16,000 கன அடி தண்ணீர் செல்லும் நிலையிலும், மோகனூர் வாய்க்காலுக்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. இதனால், இந்த வாய்க்காலில் பாசனம் பெறும் சுமார் 3,000 ஏக்கர் நிலம் பாலைவனமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் பாசனத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர், மொத்தம் 18 பதிவு பெற்ற ஆயக்கட்டு பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இத்தகைய பதிவு பெற்ற பாசன வாய்க்கால்களில் ஒன்று மோகனூர் வாய்க்கால். இந்த வாய்க்கால் பாசனத்தை நம்பி சுமார் 3,000 ஏக்கர் நிலம் உள்ளது.
காவிரி ஆற்றில் பரமத்தி அருகே களிமேடு என்ற இடத்தில் தொடங்கி குறுக்காக கரூர் மாவட்டம் நன்னியூர்புதூர் வரை இயற்கையான மணல் திட்டு அமைந்திருந்ததது. காவிரியில் கொரம்பு என அழைக்கப்படும் இந்த மணல் திட்டில் இடைமறிக்கப்படும் தண்ணீர் திசை மாறி வட கரையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் வாய்க்காலிலும், தென் கரையில் கரூர் மாவட்டம் வாங்கல் வாய்க்காலிலும் சென்று பாசன வசதி அளித்து வந்தது.
கடந்த 1995ஆம் ஆண்டு தொடங்கி 2000 ஆண்டு வரை 5 ஆண்டுகளில் மணல் குவாரிகளால் இந்த மணல் திட்டு காணாமல் போய் விட்டது. இதனால் ஆறு பள்ளத்தில் போய் விட்டதால், காவிரியில் இப்போது விநாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டபோதும், வாய்க்காலில் தண்ணீர் ஏறி வரவில்லை.
காவிரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டு 15 நாட்கள் ஆகி விட்ட நிலையில், கடை மடை பகுதியான நாகை மாவட்டத்துக்குக் கூட தண்ணீர் சென்றுவிட்டது. ஆனால், மேட்டூர் அணையில் இருந்து 50 மைல் தொலைவில் உள்ள இந்த வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை என்கின்றனர் விவசாயிகள்.
பாசனம் மறுக்கப்பட்ட ஆயக்கட்டு நிலம்:
இதுகுறித்து மோகனூர் பாசன வாய்க்கால் உபயோகிப்பாளர் சங்கச் செயலர், ஜி.அஜீத்தன் கூறியது:
மோகனூர் வாய்க்கால் நஞ்சை இடையாறு என்ற இடத்தில் தொடங்கி நாமக்கல் மாவட்ட எல்லையான வடுகப்பட்டி என்ற இடத்தில் 14 மைல் தூரம் பயணிக்கிறது. ஆண்டுக்கு 11 மாதங்கள் தண்ணீர் விட வேண்டும் என்பது ஆயக்கட்டு ஒப்பந்தத்தில் அரசாணையாக உள்ளது. வாழை, கரும்பு, வெற்றிலை என ஆண்டு பயிர்கள் பயிரிடப்பட்ட இந்த வாய்க்கால் பாசனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வாய்க்காலில் வரும் தண்ணீரை வைத்து ஒரு போக சாகுபடி கூட செய்ய முடியாத நிலை உள்ளது. கடந்த ஓராண்டாக வாய்க்காலில் முற்றிலுமாக தண்ணீர் வரவில்லை.
இதற்கு முக்கிய காரணம், காவிரி ஆற்றில் இருந்த மணல் தடுப்பு (கொரம்பு) மணல் குவாரிகளால் சூறையாடப்பட்டது தான். இங்கு நாமக்கல் மாவட்டம் களிமேடு முதல், கரூர் மாவட்டம் நன்னியூர் புதூர் வரை சுமார் 750 மீட்டர் நீளத்துக்கு காவிரிóயின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 4 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் இங்கு தடுப்பணை கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த திட்டம் உடனடியாக சாத்தியமில்லை, இதனால் மோகனூர் வாய்க்காலுக்கு மேல் உள்ள ராஜா, குமாரபாளையம் வாய்க்கால்களில் இருந்து மோகனூர் வாய்க்காலுக்கு தண்ணீரை திருப்பிவிட நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.
வாய்க்கால் கட்டுப்பாடு துறையை மாற்ற வேண்டும்:
சங்க தலைவர் ஆர்.சுந்தரராஜூ கூறியது:
நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள காவிரி பாசன வாய்க்கால்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சரபங்கா நீர்வள ஆதார கோட்டத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன் பிறகே, இந்த வாய்க்கால்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. முழுக்க காவிரி பாசன வாய்க்கால்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தும், திருச்சி ஆற்றுப் பாதுகாப்பு கோட்டத்துக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரி பாசன வாய்க்கால்களை மாற்ற வேண்டும்.
களிமேடு-நன்னியூர் புதூர் தடுப்பணை, போக்குவரத்து பாலத்துடன் கட்டப்பட வேண்டும். இதன்மூலம் நாமக்கல்-கரூர் மாவட்டங்கள் எளிதில் இணைக்கப்படும். மேலும், ஆயக்கட்டு பாசன ஒப்பந்தப்படி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் விட்டாலும் கூட, சுமார் 10 கன அடி அளவே தண்ணீர் தேவைப்படும். இந்த வாய்க்காலுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விட முடியும். இதனால் தடுப்பணை பணியை விரைந்து தொடங்க அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.
வாய்க்காலில் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கை இல்லை:
இதுகுறித்து மோகனூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்லப்பன் கூறியது:
4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். காவிரியில் வெள்ளம் வந்தால் கூட மோகனூர் வாய்க்காலுக்கு தண்ணீர் வருவதில்லை. ராஜா, குமாரபாளையம் வாய்க்கால்களில் இருந்து தண்ணீரை திருப்பி விடுகின்றனர். ஆனால் இந்த தண்ணீரை வைத்து ஒரு போக சாகுபடி கூட செய்ய முடிவதில்லை.
நான் குத்தகைக்கு எடுத்துள்ள நிலம், வலது புறம் காவிரி ஆற்றின் கரையிலும், இடது புறம் மோகனூர் வாய்க்கால் கரையிலும் உள்ளது. ஆனால், வாய்க்காலில் தண்ணீர் வராததால் ரூ.5 லட்சம் செலவு செய்து நிலத்தில் புதிதாக கிணறு தோண்டியுள்ளேன். மேலும், மின் இணைப்புக்கு தட்கல் திட்டத்தில் ரூ.2.5 லட்சம் வைப்புத்தொகை செலுத்தியுள்ளேன். என்னைப் போன்று விவசாயிகள் பலரும் கிணறு தோண்டியுள்ளனர்.
வாய்க்காலில் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில் சம்பா பட்டத்துக்கு ஒரு மாத்திற்கு முன்பு நெல் நாற்று போட்டேன். ஆனால் என் நிலத்தில் இருந்து 20 அடி தொலைவில் காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடினாலும் வயல் ஓட்ட முடியவில்லை, இனியும் வாய்க்காலில் தண்ணீர் வரும் என்று நம்பிக்கை இல்லை என்றார்.