/

மெட்ரோ திட்டப் பணிகளால் ரிப்பன் மாளிகையில் அதிகரிக்கும் விரிசல்: விரைவில் சீரமைப்பு-அதிகாரிகள் தகவல்

மெட்ரோ ரயில் திட்டப் பணிகளால் சென்னை ரிப்பன் மாளிகையில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் மேலும் அதிகரித்துள்ளது.

News image
ரிப்பன் மாளிகை அருகே நடைபெறும் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணிகள். (உள்படம்) இப்பணியால் ரிப்பன் மாளிகையில் ஏற்பட்டுள்ள விரிசல்கள்.
Updated On :29 ஜனவரி 2024, 6:14 pm

என். தமிழ்ச்செல்வன்

மெட்ரோ ரயில் திட்டப் பணிகளால் சென்னை ரிப்பன் மாளிகையில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் மேலும் அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடி குழு ஆய்வு செய்து மதிப்பீடுகள் தயார் செய்துள்ளபோதும் இந்தக் கட்டடத்தின் சீரமைப்புப் பணிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை.
சாரசனிக் கட்டடக் கலை: பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலகமான ரிப்பன் மாளிகை 1913-ஆம் ஆண்டில் ரூ.7.5 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இந்திய - சாரசனிக் கட்டடக் கலை முறையில் பல இடங்களில் மிகநுட்பமான சிற்பங்களுடன் இந்தக் கட்டடத்தை ஆங்கிலேயப் பொறியாளர் ஜி.எஸ்.டி. ஹாரிஸ் வடிவமைத்தார். லோகநாத முதலியார் கட்டடத்தைக் கட்டி முடித்தார். இதை அப்போதைய வைசிராய் ஹார்டின்ஜ் திறந்து வைத்தார்.
ரிப்பன் பிரபு பெயரில்: செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ள இதன் நீளம் 252 அடிகள். அகலம் 126 அடிகள். கோபுரத்தின் உயரம் 132 அடிகள். இதில் பொருத்தப்பட்டுள்ள 8 அடி விட்டமுள்ள கடிகாரம் கால் மணி நேரத்துக்கு 4 முறை என ஒரு மணி நேரத்திற்கு 16 முறை ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாக முறையின் தந்தை எனக் கருதப்படும் ரிப்பன் பிரபுவின் நினைவாக இந்தக் கட்டடத்துக்கு ரிப்பன் கட்டடம் என பெயரிடப்பட்டது. 
நூற்றாண்டு விழா: கம்பீரமாக நிற்கும் ரிப்பன் மாளிகைக்கு நூற்றாண்டு விழா கொண்டாட கடந்த 2009-இல் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
ரூ.7 கோடிக்கு தொடங்கிய இந்தப் பணிகள் ரூ.30 கோடிக்கு மேல் செலவிட்டும் இன்னும் நிறைவு பெறவில்லை. உள்ளாட்சித் தேர்தலும் நடைபெறாமல் போனதை அடுத்து நூற்றாண்டு விழாவும் எப்போது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் விரிசல்: இந்த நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் அப்பகுதியில் தொடங்கப்பட்ட நிலையில், ரிப்பன் மாளிகையில் ஆங்காங்கே விரிசல் ஏற்படத் தொடங்கியது. கட்டடத்தின் உள்புறம், பக்கவாட்டுச் சுவர் என பல பகுதிகளிலும் விரிசல்கள் தோன்றியுள்ளன.
குறிப்பாக, மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர் அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் விரிசல்கள் பெருமளவுக்கு உள்ளன. மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் இந்த விரிசல் மென்மேலும் அதிகரித்து வருகிறது. விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் இரும்புக் குழாய்களால் ஆன தாங்கிகள் வைக்கப்பட்டுள்ளன.
ஊழியர்கள் அச்சம்: கட்டடத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருவதை அடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மதிப்பீடு தயார்: இதனிடையே, விரிசல் ஏற்பட்ட பகுதிகளை சென்னை ஐஐடி வல்லுநர்கள் குழு, மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் குழு இணைந்து ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வைத் தொடர்ந்து ரிப்பன் மாளிகை விரிசலை சரிசெய்வதற்கு ரூ.56 லட்சத்தில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிவடைந்தவுடன்சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படலாம் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
விரைவில் சீரமைப்பு: மாநகராட்சியின் துணை ஆணையர் (பணிகள்) ம.கோவிந்த ராவ் கூறியது: சென்னை ஐ.ஐ.டி குழுவினர், மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் நடத்திய ஆய்வில், ரிப்பன் மாளிகையின் விரிசல் ஆபத்தான நிலையில் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து, சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.56 லட்சம் செலவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.