/

'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்'- திமுக-வுக்கு விசிக ஆதரவு: திருமாவளவன் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவளிப்பதாக திருமாவளவன் சனிக்கிழமை அறிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:12 pm

Raghavendran

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக என்.மருதுகணேஷ் மீண்டும் போட்டியிடுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினையொட்டி கடந்த ஒராண்டாக காலியாக உள்ள ஆர்.கே.நகரின் வரும் டிச.21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. 

தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி உறுப்பாளராக உள்ள என்.மருதுகணேஷ் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் சனிக்கிழமை அறிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். எனவே அவருக்கு உங்களின் முழு ஆதரவும் வழங்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும், எழுத்துப் பூர்வமாகவும் கோரிக்கை வைத்தார். எனவே அவரது கோரிக்கையை ஏற்று திமுக-வுக்கு விசிக தனது முழு ஆதரவு அளிக்கிறது.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.