முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால், சத்துணவு திட்டத்துக்கு கோழிப் பண்ணையாளர்களிடம் இருந்து முட்டை கொள்முதல் செய்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு வாரத்துக்கு 5 முட்டைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. முட்டை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் பெற்றுள்ளனர். இந்த நிறுவனத்தினர் 45 முதல் 52 கிராம் எடையுள்ள முட்டையை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.
பள்ளிகளுக்கு முட்டை வழங்கும் பணியை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினர் கோழிப் பண்ணையாளர்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, வாரத்துக்கு 2.5 கோடி முட்டைகள் சத்துணவு திட்டத்துக்கு வழங்கப்படுகிறது.
முட்டை கொள்முதலில் சிக்கல்: இந்நிலையில், முட்டை விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ரூ.5.16 ஆக முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு முட்டை ரூ.4.43 -க்கு விநியோகம் செய்வதாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினர் ஒப்பந்தம் பெற்றுள்ளனர்.
இதனால், கூடுதல் விலை கொடுத்து முட்டையைக் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சத்துணவு திட்டத்துக்கு முட்டை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
வட மாநிலங்களில் நிலவும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. அதேபோல், தமிழகம், கேரளத்திலும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நிர்ணயம் செய்துள்ள விலையைக் காட்டிலும், அதிக விலை கொடுத்து, முட்டையைக் கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயாராக உள்ளனர். கூடுதல் லாபம் கிடைப்பதால், சத்துணவு திட்டத்திற்கு குறைந்த விலைக்கு முட்டையை வழங்க கோழிப் பண்ணையாளர்கள் முன்வராததால், சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் முட்டை இருப்பு வைப்பது குறைந்துள்ளது என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சத்துணவுத் திட்ட மூத்த அதிகாரி ஒருவர் கூறியது:
ஆண்டுக்கொரு முறை முட்டை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த காலங்களில் முட்டை ஒப்பந்தம் பெற்றவர்கள், பெரிய கோழிப்பண்ணையாளர்கள் அல்லது முட்டை மொத்த வியாபாரிகளிடம் துணை ஒப்பந்தம் செய்து கொண்டு முட்டை விநியோகம் செய்து வந்தனர். இதனால் பெரிய கோழிப் பண்ணையாளர்கள் பலர் பலனடைந்தனர்.
ஆனால், நிகழாண்டில் ஒப்பந்தம் பெற்ற திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நேரடியாக பண்ணையாளர்களிடம் முட்டையைக் கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்து வந்தது.
இதனால் பெரிய பண்ணையாளர்கள் இந்த நிறுவனத்துக்கு முட்டை வழங்குவதை நிறுத்திக் கொண்டனர். இருப்பினும், சிறிய பண்ணையாளர்களிடம் இந்த நிறுவனம் முட்டையைக் கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு அனுப்பிவைத்தது.
கடந்த வாரம் முட்டை விலை ரூ.5.16 என விலை உயர்ந்ததால், முட்டைக்கு சுமார் ரூ.1 வரை கூடுதல் விலை கிடைத்தது. இதனால் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை விநியோகம் செய்த பண்ணையாளர்கள் விநியோகத்தை நிறுத்திக் கொண்டனர். இதனால் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் முட்டையை கூடுதல் விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்த்து, தங்களிடம் இருப்பு இருந்த முட்டைகளை சத்துணவு மையங்களுக்கு அனுப்பி வந்தது.
முட்டை இருப்பு எண்ணிக்கை குறைவு: சாதாரண நாள்களில் 4 நாட்களுக்கு தேவையான எண்ணிக்கையில் அனுப்பப்பட்ட முட்டைகள், கடந்த வாரத்தில் 2 நாட்களுக்கு என்ற எண்ணிக்கையில் மட்டும் அனுப்பியது. சில மையங்களுக்கு முதல் நாள் தான் முட்டைகள் கிடைத்தன. இதனால் முட்டை விநியோகத்தில் சிக்கல் என்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால், தமிழகத்தில் எந்தப் பள்ளியிலும் முட்டை விநியோகம் செய்யப்படவில்லை என்ற புகார் இல்லை.
கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால், பள்ளிகளில் முட்டை சாப்பிடும் குழந்தைகள் எண்ணிக்கை 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் முட்டை தேவை குறைந்துள்ளது. மேலும் முட்டை விலை ரூ.5.16 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், பண்ணைகளில் 25 முதல் 40 காசுகள் வரை முட்டை விலை மைனஸ் உள்ளதால் ரூ.4.75-க்கே தற்போது முட்டை கிடைக்கிறது. இதனால் சத்துணவுக்கு முட்டை விநியோகம் செய்வதில் ஏற்பட்ட சிறிய சிக்கலும் இனி ஏற்பட வாய்ப்பில்லை என்றார் அவர்.
நிர்ணய விலைக்கே முட்டை விநியோகம்: இதுகுறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கத் தலைவர் ஏ.கே.பி. சின்ராஜ் கூறியது:
உற்பத்திக் குறைவு, நுகர்வு அதிகரிப்பால் முட்டை விலையேற்றம் கண்டுள்ளது. கார்த்திகை மாதம் துவங்கியுள்ளதால் தமிழகம், கேரளத்தில் முட்டை விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.
எனினும், வட மாநிலத் தேவையால் இரு வாரங்களுக்குப் பின் முட்டை விலை மீண்டும் உயரும். சத்துணவு திட்டத்துக்கு முட்டை தொடர்ந்து வழங்கப்படுகிறது. தற்போது என்இசிசி நிர்ணயம் செய்துள்ள விலைக்கு முட்டை வழங்கப்படுகிறது என்றார் அவர்.