/

மூன்றாண்டுகளாக முடங்கிக் கிடக்கும் அரியலூர் சிட்கோ தொழிற்பேட்டை பணி

அரியலூர் மாவட்டம் மல்லூர் அருகே 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தொழிற்பேட்டை பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:12 am

சி.சண்முகவேல்

அரியலூர் மாவட்டம் மல்லூர் அருகே 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தொழிற்பேட்டை பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்துடன் இருந்த அரியலூர், கடந்த 2007}ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி தனிமாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர்,தா. பழூர்,திருமழப்பாடி உள்ளிட்ட பகுதிகள் டெல்டா மாவட்டங்களாகவும், ஜயங்கொண்டம்,செந்துறை,ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகள் வானம்பார்த்த பூமியாகவும் உள்ளன.
அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனிமங்கள் நிறைந்துள்ளதால் அங்கு மட்டும் 8 சிமென்ட் ஆலைகளும், நூற்றுக்கணக்கான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களும் உள்ளன. மற்றபடி இம்மாவட்டத்தில் எந்தத் தொழிற்சாலைகளும் கிடையாது. விவசாயத்தை நம்பியே வளர்ச்சியை எதிர்நோக்கும் இம்மாவட்டம் பின்தங்கியே காணப்படுகிறது.
இந்நிலையில், இம்மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும்,அதிக வேலைவாய்ப்பை உருவாக்கிடும் பொருட்டும், இங்கு புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என கடந்த
2013}ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் அரியலூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டை அமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை மேற்கொண்டது.
அரியலூர் வருவாய் வட்டம்,கீழப்பழுவூர் - ஜயங்கொண்டம் சாலையில், பொய்யூர் அருகே,மல்லூர் கிராமத்தில், அப்போதைய மாவட்ட ஆட்சியரால் ஒதுக்கப்பட்ட 25.74 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைப்பதற்கான சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
மல்லூர் கிராமத்தில் அமையவுள்ள புதிய சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்படவுள்ள 83 தொழிற்சாலைகள், பூங்கா, வணிக வளாகம் மற்றும் பொது உபயோகத்துக்கான இடம் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் வளர்ச்சி நிறுவனம், அவற்றுக்கான பெயர்ப் பலகைகள்,தார்ச் சாலைகள்,அணுகு சாலைகளை அமைத்தது.
ஆனால், தொழிற்சாலைகள் அமைப்பதற்கான எந்தப் பணிகளும் இதுவரை நடைபெறவில்லை. தொழிற்பேட்டை அமைப்பதற்கான நிலத்தை உரிய விளம்பரங்கள் மூலம் விற்பனை செய்வது, தொழில் வல்லுநர்கள் மூலம், புதிய தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வது போன்ற எந்தவொரு மேம்பாட்டு பணிகளையும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
இதற்கான மேம்பாட்டு பணியை செயல்படுத்திட, அரசு நிர்வாகமோ அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் இல்லை.
தற்போது தொழிற்பேட்டைக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாகக் காணப்படுகின்றன. அந்த இடங்கள் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகின்றன.
மிகவும் பின்தங்கிய அரியலூர் மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால், அதன் மூலம் தொழில்வளம் பெருகி, வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற மனநிலையில் இளைஞர்கள் உள்ளனர்.
ஆகவே, கடந்த மூன்றாண்டுகளாக முடங்கிக் கிடக்கும் அரியலூர் மாவட்டத்துக்கான சிட்கோ தொழிற்பேட்டை வளர்ச்சிப் பணிகளை விரைந்து செயல்படுத்திட, மாவட்ட ஆட்சியரும் மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.