கும்கிகளை அழைத்துச் செல்ல வாகன வசதி இல்லை: டாப்சிலிப் முகாமில் வனத் துறையினர் திணறல்
கோவையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டாப்சிலிப் யானைகள் முகாமில் காட்டு யானைகளை அடக்க கும்கிகளை அழைத்துச் செல்ல வாகன வசதி இல்லாததால்,


கோவையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டாப்சிலிப் யானைகள் முகாமில் காட்டு யானைகளை அடக்க கும்கிகளை அழைத்துச் செல்ல வாகன வசதி இல்லாததால், குறித்த நேரத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் வனத் துறையினர் திணறி வருகின்றனர்.
தமிழக அளவில் டாப்சிலிப், முதுமலை என இரண்டு முகாம்கள் நிரந்தரமாகவும், கோவை சாடிவயல் முகாம் தாற்காலிகமாகவும் செயல்பட்டு வருகிறது. இதில், டாப்சிலிப் யானைகள் முகாமானது 1956-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த முகாம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வரகளியாறு, கோழிகமுத்தி என்ற ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இங்கு, கலீம், மாரியப்பன், ராமு, பரணி என நான்கு கும்கிகள் உள்ளிட்ட 23 யானைகள் உள்ளன. தற்போது நிலவும் குடிநீர்ப் பற்றாக்குறையால் கோழிகமுத்தி முகாமில் அனைத்து யானைகளும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
முதுமலையில் விஜய், வாசீம், முதுமலை, பொம்மன், சங்கர் என 5 கும்கிகள் உள்பட 22 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வனக் கால்நடை மருத்துவரும் அங்கு உள்ளார். உடல்நலம் குன்றிய யானைகளுக்கு உடனுக்குடன் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் அச்சுறுத்தம் யானைகளை விரட்டவும், மயக்க மருந்து செலுத்திப் பிடிக்கவும் உதவியாக கும்கிகளை கொண்டு செல்வதற்காக வனத் துறை சார்பில் மரங்கள் கட்டப்பட்ட லாரியும் உள்ளது. கோவை சாடிவயலில் உள்ள தாற்காலிக யானைகள் முகாமில் பாரி, சுஜய் என்ற இரு கும்கிகள் உள்ளன. இந்த கும்கிகளும் கோவை மாவட்டத்தில் ஊருக்குள் நுழையும் யானைகளை உடனடியாக விரட்டப் பயன்படுத்தப்படுகின்றன. அதை குறித்த நேரத்துக்கு கொண்டு செல்ல வனத் துறை சார்பில் லாரி உள்ளது. யானைகள் நலம் குன்றினால் கோவையில் உள்ள வனக் கால்நடை மருத்துவர் மூலம் குறித்த நேரத்தில் சிசிச்சை அளிக்கப்படுகிறது.
லாரி வசதி இல்லாத டாப்சிலிப் முகாம்: சுமார் 60 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் உலாந்தி வனச் சரகத்துக்கு உள்பட்ட டாப்சிலிப் யானைகள் முகாமில் கும்கிகளை அழைத்துச் செல்ல லாரி இல்லை. அவ்வாறு லாரிகளை வரவழைக்க வேண்டும் என்றால் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள ஆனைமலையில் இருந்து வரவழைத்து மரங்கள் இணைத்து அதன் பிறகு கும்கிகளை ஏற்றி மீட்புப் பணிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்படுகிறது.
கோவை, வெள்ளாளபாளையத்தில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி நான்கு பேரைக் கொன்ற யானையை மயக்க மருத்து செலுத்திப் பிடிக்க வனத் துறையினர் திட்டமிட்டனர்.
இதில், சாடிவயல் முகாமில் இருந்து பாரி, டாப்சிலிப்பில் இருந்து கலீம், மாரியப்பன் என மூன்று கும்கிகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது, லாரி இருந்ததால் சாடிவயலில் இருந்து பாரி உடனடியாக வரவழைக்கப்பட்டது.
டாப்சிலிப் முகாமில் லாரி வசதி இல்லாததால் கும்கிகளைக் கொண்டுவர தாமதம் ஆனது. அதற்குள் வனத் துறையினரும் மாற்று ஏற்பாடாக 6 பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி பாரி உதவியுடன் காட்டு யானையை வாகனத்தில் ஏற்றினர்.
குறித்த நேரத்தில் சம்பவ இடத்துக்கு கும்கிகளைக் கொண்டுவர டாப்சிலிப் முகாமுக்கு புதியதாக லாரி வாங்கவும், டாப்சிலிப்புக்கென கால்நடை மருத்துவரை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வனவிலங்கு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து பொள்ளாச்சி மாவட்ட வன அலுவலர் சுப்பையா கூறுகையில், 'டாப்சிலிப் யானைகள் முகாமில் லாரி ஒன்று உள்ளது. ஆனால், அது நீண்ட காலமாகப் பயன்பட்டதால் மிகவும் பழுதடைந்து கும்கிகளை ஏற்றிச் செல்லத் தகுதியானதாக இல்லை. அதனாலேயே வாடகை லாரிகளை கொண்டு கும்கிகளை ஏற்றிச் செல்கிறோம். புதிய லாரி வாங்க அரசிடம் அனுமதி கோரவுள்ளோம். அவ்வாறு அனுமதி கிடைத்ததும் புதிய லாரி வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நடப்பு கூட்டத் தொடரிலாவது நிறைவேற்றப்படுமா? டாப்சிலிப் முகாமில் யானைகளைக் கொண்டு செல்ல பிரத்யேகமாக மரத்துடன் வடிவமைக்கப்பட்ட லாரி வாங்க ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை செலவாகும். ஆகவே, நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலாவது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் வனத் துறைக்கு நிதி ஒதுக்கி டாப்சிலிப் முகாமுக்கு லாரிகள் வாங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...