/

கோயில் திருமேனிகள் பாதுகாப்பு மையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

அரியலூரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக முழுமை பெறாமல் உள்ள கோயில் திருமேனிகள் பாதுகாப்பு மையத்தின் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே மேலோங்கியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:38 pm

சி.சண்முகவேல்

அரியலூரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக முழுமை பெறாமல் உள்ள கோயில் திருமேனிகள் பாதுகாப்பு மையத்தின் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே மேலோங்கியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன், பெருமாள் கோயில்கள் பல உள்ளன. அவற்றில், ஒரு சில கோயில்களின் திருமேனிகள் கும்பகோணம் திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. திருவிழாக் காலங்களில் மட்டுமே, அவை கோயில்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படும்.
இவற்றில், தா. பழூர், ஸ்ரீபுரந்தான், சித்தமல்லி உள்ளிட்ட சில கோயில்கள் போதிய பராமரிப்பு, பாதுகாப்பு இல்லாததால், அங்குள்ள பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் திருமேனிகள் (சிலைகள்) சர்வதேச கொள்ளையர்களால் களவாடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் திருமேனிகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ், அரியலூரில் திருமேனிகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, இந்து சமய அறநிலையத் துறை நிதியான ரூ. 95 லட்சத்தில் அரியலூர் பெரியார்நகரின் கிழக்குப் பகுதியில் கட்டுமானப் பணிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கின. தற்போது கட்டுமானப் பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் அங்கு மின்சார இணைப்பு கொடுக்காமலும், அதற்குரிய உள்கட்டமைப்புப் பணிகள் முழுமை பெறாமலும், பர்னிச்சர் பொருள்கள் இல்லாமலும் உள்ளன.
இதனிடையே, அரியலூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சில கோயில்களின் சிலைகள் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôர் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் கும்பகோணம் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. சில சிலைகள் இன்னும் மீட்கப்படாமலேயே உள்ளன.
எனவே, கட்டுமானப் பணிகள் தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் முழுமை பெறாமல் உள்ள கோயில் திருமேனி பாதுகாப்பு மையத்துக்கான பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கும்பகோணத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்தப் பகுதி கோயில் சிலைகளை இந்த மையத்துக்கு கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

யார்தான் காரணம்?

திருமேனிகள் பாதுகாப்பு மைய கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டன. மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பல மாதங்களாகியும் இணைப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே, உள்கட்டமைப்புப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது தாற்காலிகமாக அந்தப் பகுதியிலுள்ள ஒருவரது வீட்டில் இருந்து மின்சாரம் பெற்று, உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இந்தப் பணிகள் முடிந்து, இந்தக் கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என இந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.